download_indicator

ஏழைகளின் சிரிப்பில் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம் என்றாலே எல்லோரும் புத்தாடை அணிவது, பட்டாசு வெடிப்பது, இனிப்பு, பலகாரங்கள் போன்றவற்றை உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும் கொடுத்து மகிழ்வது என்றே பலரும் நினைப்பதுண்டு. ஆனால், அதையும் தாண்டி ஏழைகளின் சிரிப்பிலும் நாம் தீபாவளியை கொண்டாடலாம் என்பதையடுத்து, அதன் விபரங்களை அறிந்திடுவோம்.

தீபாவளி

அரசு வேலையிலும், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்ப்பவர்களுக்கு தீபாவளி போனஸ் என்ற பெயரில், தீபாவளி செலவுகளுக்காக குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவதுண்டு.

அதையடுத்து, அந்த தொகையை கொண்டு அவர்கள் தங்கள் குடும்பத்திற்கான புத்தாடை மற்றும் தீபாவளி செலவுகளை செய்துகொள்வர்.

அவ்வாறு போனஸ் கிடைக்காதவர்கள், தீபவளி செலவுக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை சேர்த்து வந்து, அந்த தொகையை வைத்து தீபாவளி செலவு செய்வர்.

அதுவே உயர் நடுத்தர வர்க்கத்தினர், செல்வந்தர்களுக்கு தேவையான பணம் எப்போதும் தயாராக இருப்பதால், எதைப்பற்றியும் அவர்கள் கவலை கொள்வதில்லை.

ஏழைகளின் சிரிப்பில்

ஆனால், இது எதுவுமே இல்லாத நிலையில், வறுமையில் வாடுபவர்கள், ஏழை, எளியவர்கள், ஆதரவு இல்லாதவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், சாலைகளில் குப்பைகளை எடுத்து பிழைப்பவர்கள் போன்றோர் தீபாவளியை அடுத்தவர்கள் கொண்டாடுவதை பார்த்து திருப்தியடைகின்றனர்.

வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி, நடுத்தர வர்க்கத்தினர்களாக இருந்தாலும் சரி, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், அடுத்தவர்கள் பெருமையாக பேச வேண்டும் என்பதற்காக தீபாவளி பட்டாசு வாங்குவதில் தேவையின்றி அதிக பணம் செலவழிப்பதுண்டு.

இந்நிலையில், அவ்வாறு செலவழிப்பதை தவிர்த்து அவரவருக்கு தெரிந்த கஷ்டப்படுகிறவர்களுக்கு புதிய ஆடை வாங்கி கொடுக்கலாம்.

புத்தாடை வாங்கி கொடுக்க முடியாதவர்கள், கடைகளில் நல்ல இனிப்பு, பலகாரங்களை வாங்கி கொடுக்கலாம்.

சிறிய குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தாத பட்டாசுகளை வாங்கி கொடுத்து மகிழ்விக்கலாம்.

ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதும் கொண்டாடி மகிழும் தீபாவளி தினத்தன்று, இல்லாதவர்களுக்கு உதவி செய்து அவர்கள் மகிழ்ச்சியடைவதை காணும்போது ஏற்படும் சந்தோஷத்திற்கும், ஆனந்தத்திற்கும் எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் அதற்கு ஈடு இணையாகாது.

எனவே, நாளை தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று உங்களால் முடிந்த உதவி செய்து ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டு மகிழுங்கள்.

ஓம் தமிழ் காலண்டர் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி தினத்தன்று, இல்லாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலமாக கிடைக்கும் சந்தோஷத்தை எவ்வாறு பெறலாம் என்பதை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on