விவசாயத்தை வலியுறுத்திய தமிழர்கள்

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவை விவசாயத்தின் மூலமாக மட்டுமே வழங்க முடியும் என்பதால், பண்டைய தமிழர்கள் விவசாயத்தை காக்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தியுள்ளனர். அதனால், விவசாயத்தை தம் வாழ்வியலோடு ஒப்பிட்டு உயிரினும் மேலாக கருதியுள்ளனர். மேலும் விவசாயத்திற்கென்றே எண்ணற்ற பழமொழிகளை கூறியிருப்பதன் வாயிலாக அதன் மகத்துவத்தை அறிந்திடலாம்.

விவசாயத்தின் அருமை

மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவையானது உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் போன்றவை ஆகும்.

இந்த மூன்றிலும் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு மிக அவசியமாகும்.

அதனால், எத்தனை தொழில்கள் இருப்பினும் உணவு அளிக்கும் உழவு தொழிலே முதன்மை பெறுகிறது.

இந்நிலையில், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயமே திகழ்வது குறிப்பிடத்தக்கது.

விவசாயத்தின் மூலமாக உணவு தவிர நாட்டின் மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது.

அதனால், பேரிடர் காலங்களிலும், மழை காலங்களிலும் மண் அரிப்பை தடுக்க முடியும்.

எனவே நாட்டின் வளர்ச்சிக்கும், வீட்டின் வளர்ச்சிக்கும் விவசாயத்தை பாதுகாத்து முன்னெடுத்து செல்ல வேண்டும்.

வரும் சந்ததியினர்களுக்கும் விவசாயத்தின் அருமையையும், முக்கியத்துவத்தையும் எடுத்து சொல்லவேண்டும்.

பழமொழிகள்

பண்டைய தமிழர்கள் விவசாயத்தை ஒரு தொழிலாக கருதாமல், தங்கள் வாழ்வின் உயிர் மூச்சாகவே கருதியதால், எந்த இராசாயன கலப்பும் இல்லாமல் இயற்கை முறையிலேயே விவசாயத்தை செய்துள்ளனர்.

மனிதனுக்கு ஞாபகமறதி உண்டு என்பதால், அவ்வாறு விவசாய தொழிலை எளிதில் மறந்துவிடக்கூடாது என்பதற்காக, மழை, தண்ணீர், மண், உழவு, குப்பை, விதை மற்றும் மாதங்களோடு தொடர்புப்படுத்தி பழமொழிகளை கூறியுள்ளனர்.

அதனால், எந்த காலத்திலும் மறக்காமல், அந்தந்த பருவ காலங்களுக்கேற்ப விவசாயத்தில் கவனமாக இருப்பார்கள் என்று அன்றே தமிழர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்துள்ளனர்.

மழை

தவளை கத்தினால் மழை

அந்தி ஈசல் பூத்தால்

அடை மழைக்கு அச்சாரம்

தும்பி பறந்தால் தூரத்தில் மழை

எறும்பு ஏறில் பெரும் புயல்

தண்ணீர்

நீர் இன்றி அமையாது உலகு.

ஆறும் குளமும் மாசு அடைந்தால்

சோறும் நீறும் எப்படி கிடைக்கும்

புற்று கண்டு கிணறு வெட்டு

நீரும் நிலமும் இருந்தாலும்

பருவம் பார்த்து பயிர் செய்

ஆடிப்பட்டம் பயிர் செய்

வெள்ளமே ஆனாலும்

பள்ளத்தே பயிர் செய்

தேங்கி கெட்டது நிலம்

தேங்காமல் கெட்டது குளம்

மண்

காணி தேடினும் கரிசல் மண் தேடு

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

களரை நம்பி கெட்டவனும் இல்லை

மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

உழவில்லாத நிலமும்

மிளகில்லாத கறியும் வழ வழ

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை

நிலத்தில் எடுத்த பூண்டு

நிலத்தில் மடிய வேண்டும்

உழவு

உழவே தலை

அகல உழவதை விட

ஆழ உழுவது மேல்

புஞ்சைக்கு நாலு உழவு

நஞ்சைக்கு ஏழு உழவு

குப்பை

குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

கோப்பு தப்பினால்

குப்பையும் பயிராகாது

விதை

கலக்க விதைத்தால்

களஞ்சியம் நிறையும்.

அடர விதைத்தால் போர் உயரும்

சொத்தைப் போல்

விதையை பேண வேண்டும்

விதை பாதி வேலை பாதி

காய்த்த வித்திற்கு பழுது இல்லை

கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை

மாதங்கள்

மார்கழி மழை மண்ணுக்கு உதவாது

தை மழை நெய் மழை

தையும், மாசியும் வீடு மேய்த்து உறங்கு

மாசிப் பனி மச்சையும் துளைக்கும்

ஆடி ஐந்தில் விதைத்த விதையும்

புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும்

விவசாயத்திற்கு தமிழர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது பற்றி உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on