download_indicator

விசித்ரமான தனிஷ்டா பஞ்சமி பற்றித் தெரியுமா?

பஞ்சமி என்றதும் வராஹி தேவி வழிபாடு என்று எல்லோரும் அறிந்திருக்கும் நிலையில், தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன, அது பற்றி சித்தர்கள் என்ன கூறுகின்றனர் என்று அறிந்திடலாம்.

தனிஷ்டா பஞ்சமி

சாதாரண பஞ்சமி தினம் போன்று வார நாட்களுக்குரிய திதியாக இல்லாமல், ஒரு சில நட்சத்திரங்களின் தொகுப்பே தனிஷ்டா பஞ்சமி என்று கூறப்படுகின்றது.

சாதாரணமாக 27 நட்சத்திரங்கள் இருப்பதில், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, கார்த்திகை, உத்திரம், மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய 13 நட்சத்திரங்கள் கொண்ட தொகுப்பே தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் என்று கூறப்படுகிறது.

இந்த 13 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் உயிரிழப்பவர்கள், மேலுலகம் செல்வதற்குத் தடை ஏற்படும். இதை 'அடைப்பு' என்று முன்னோர்கள் கூறுவதை கருடபுராணமும் உறுதிபடுத்துகின்றது.

ஒரு சில ஜோதிட சாஸ்திரங்களில் தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாக கூறப்படுகிறது.

அடைப்பு நட்சத்திர நாட்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களை செய்யாவிட்டால், இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராட்சசத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்று கூறப்படுகிறது.

சித்தர்கள் வாக்கு

இறந்த திதி, நட்சத்திரங்களின்படி உயிர்கள் எமலோகத்தை அடைகின்றன.

ஒருவர் பிறக்கும் நட்சத்திரம் போன்று, இறக்கும்போது திதி, நட்சத்திரம், கிழமை போன்றவற்றை நாம் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணமடைந்தவர்கள் ஆன்மா, எமலோகத்திற்கு செல்கையில் கடும் சிரமத்திற்கு ஆளாகும் என்பதால், அந்த நட்சத்திரத்திற்கு எத்தனை மாதம் அடைப்பு என்று கூறப்படுகிறதோ, அத்தனை நாட்கள் பரிகாரம் செய்யவேண்டும்.

ஏனெனில், இறந்துபோனவர்கள் மேலுலகம் செல்லாமல் அலைவதால் இறந்து போனவர் வீட்டில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புண்டு என்பதாலேயே, அது எத்தனை மாதமோ, அத்தனை நாட்கள் வீட்டை பூட்டி வைத்திருப்பர்.

மேலும், அவர் அன்றாடம் உபயோகித்த பொருள்களை வைத்து, குறிப்பிட்ட அடைப்பு காலம் வரை மாலை நேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்வது வழக்கமாகும்.

வசு பஞ்ஜக தோஷம்

அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 5 நட்சத்திர நாட்களில் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் அது தனிஷ்டா பஞ்சமி எனப்படும் அடைப்பு ஆகும். இதை வசு பஞ்ஜக தோஷம் என்று கூறுவர்.

இந்த 5 நட்சத்திர நாட்களில் இறந்தால், 6 மாதத்திற்கு தோஷம் இருக்கும் என்பதால் வீட்டை பூட்டி வைக்க வேண்டும்.

ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தால் 4 மாதம் வரை தோஷம் இருக்கும்.

பிண்ட நூல் தோஷம்

கார்த்திகை, உத்திரம் நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் இறந்தால் அது பிண்ட நூல் தோஷம் எனப்படும். இந்த தோஷம் 3 மாதம் இருக்கும்.

பலி நட்சத்திர தோஷம்

மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், அஷ்டமி, நவமி, சதுர்த்தி, சதுர்த்தசி திதி ஆகிய நாளில் மரணம் ஏற்பட்டால் அது பலி நட்சத்திர தோஷம் எனப்படும். இந்த தோஷம் 2 மாதத்திற்கு இருக்கும்.

அடைப்பு காலம் முடிந்ததும் அவர் உபயோகித்த பொருட்கள், ஏற்றிய விளக்கு போன்றவற்றை ஆறு அல்லது கடல் நீரில் சேர்த்துவிடுவது நல்லது.

அடைப்புக் காலங்களில் எந்த நல்ல காரியங்களும் செய்வதில்லை, அசைவ உணவும் சேர்த்து கொள்வதில்லை.

தனிஷ்டா பஞ்சமி என்று எதைப்பற்றி கருட புராணம் கூறுகிறது என்பதை எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on