download_indicator

விநாடி? வினாடி? எது சரியானது?

யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழியை போன்ற இனிதான மொழி எங்கும் கிடையாது என்று முண்டாசுக் கவிஞன் பாரதியார் போன்று எத்தனையோ தமிழறிஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை கூறியுள்ளனர். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் தமிழ் வார்த்தைகளை சரியாக படிக்கவும், எழுதவும் தெரியவில்லை என்பதே உண்மையாகும். அவ்வாறிருக்கையில், தமிழ் எழுத்துகளை சரியாக உச்சரிப்பதும், எழுதுவதும் மிக அவசியமாகும். அதன்படி வினாடி, விநாடி ஆகியவற்றில் எந்த சொல் சரியானது என அறிந்திடுவோம்.

அறிவுத்திறன்

வீடு, பள்ளி, கல்லூரிகள், ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று சேரும் இடங்களில் பொழுதுபோக்கு காரணமாகவோ, அறிவுத்திறனை வளர்க்கும் விதமாகவோ நடத்தப்படும் போட்டிகளில் விநாடி-வினா போட்டியும் ஒன்றாகும்.

அதாவது, ஓரிரு நிமிடம் அல்லது விநாடிகளில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதையே, விநாடி-வினா என்று கூறுவது வழக்கம்.

இந்நிலையில், வினாடி, விநாடி இவற்றில் எந்த சொல் சரியானது என்பது இன்று நம்மில் பலருக்கும் தெரியவில்லை.

சாதாரண மக்களுக்கு தெரியவில்லை என்பது பெரிய விசயமல்ல, கற்றறிந்த அறிஞர்கள் மட்டுமல்ல, எந்த விஷயங்களையும் மக்களுக்கு தெளிவாக விளக்கிகூறும் ஊடகங்கள் கூட இது விஷயத்தில் குழம்பி இருப்பதுதான் நிஜமாக உள்ளது.

வினாடியா, விநாடியா?

‘வினாடி’ என்ற சொல்லை, ‘வி+னாடி’ என்று பதம் பிரித்து எழுதும்போது வரும் ‘னாடி’ என்ற சொல்லுக்கு தமிழில் பொருளே இல்லை.

மேலும், வினாடி என்ற சொல்லே தமிழில் இல்லை என்பதே உண்மையாகும்.

அதேநேரத்தில் விநாடி என்ற சொல்லை, வி+நாடி என்று பிரித்து எழுதும்போது, அதில் வருகிற ‘நாடி’ என்பது ஒரு வினையைக் குறிக்கும்.

நாடிச்செல்வது, நாடித்துடிப்பு என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

மேலும், விநாடி என்பது கால அளவை குறிப்பிடும் சொல்லாகும்.

ஆங்கிலத்தில் ஒரு நொடியை, ‘செகண்ட்’ (second) என்று சொல்லப்படுகிற நிலையில், 24 நொடிகள் சேர்ந்ததுதான் ஒரு விநாடியாகும்.

அதனால் ஒரு விநாடியில் பதில் சொல்லக்கூடிய வினா என்பதாலேயே அதற்கு விநாடி-வினா என்று பெயராகும்.

ஆனால், நம்மில் பலரும் விநாடி என்று கூறுவதற்கு பதிலாக வினாடி என்றே கூறுகின்றனர், எழுதுகின்றனர், இது தவறாகும்.

அரசு நிகழ்ச்சிகளிலும்

திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசின் சார்பாக, கன்னியாகுமரியில் நடுக்கடலில் விவேகானந்தர் பாறையில் திருவள்ளுவருக்கும் பிரம்மாண்டமான சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளுவர் சிலையின் 25 ஆண்டுகள் நிறைவையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பொதுநூலகத்துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் நடத்தி வருகின்றன.

அதன் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் கூட, ‘வினாடி-வினாப்போட்டி’ என்றே அனைத்து மாவட்ட அழைப்பிதல்களிலும் குறிப்பிட்டுள்ளது வருத்தத்திற்க்குரியதாகும்.

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசு துறையே இது விஷயத்தில் அலட்சியமாக இருப்பது, நக்கீரர் கூறுவதுபோல் குற்றமேயாகும்.

தமிழ் எழுத்துகளை சரியாக உச்சரிப்பதும், எழுதுவதும் மிக அவசியம் என்பதை உங்கள் குடியிருப்பு அருகில் உள்ள எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on