திருமணத்தின்போது கவனிக்க வேண்டிய ஜாதக கணிப்பு
திருமணம் செய்ய இன்றைய கால கட்டத்தில் ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்க்கின்றனர். நட்சத்திரப் பொருத்தம் பார்த்தாலும், ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியம். மேலும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஜாதகங்களை சிறு வயதிலேயே நல்ல ஜோதிடரிடம் அளித்து அதன் தன்மைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
திருமண யோகம்
ஒரு சில ஜாதகருக்கு இருபத்தி ஒரு வயதிலேயே திருமண யோகம் வந்துவிடும். எனவே பெற்றோர் அந்த வயதிலேயே நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவது கண்ணியமாக இருக்கும். இல்லா விட்டாலும் தானே திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வந்துவிடும்.
இன்னும் சிலருக்கு ஜாதகப்படி 32 வயதில்தான் திருமணம் நடைபெறும் என்று இருக்கும். அவர்களுக்கு என்னத்தான் தேடினாலும் அப்போதுதான் நடக்கும். அவர்களின் ஜாதகத்தில் ஏதேனும் கடுமையான தோஷங்கள் காணப்படும். எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளின் ஜாதகம் பற்றி அறிந்து வைத்திருந்தால், அந்த காலக்கட்டத்தில் எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த வயதில் திருமணம் செய்யலாம், எப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் குழப்பமிருக்காது.
திருமணத்தை தவிர்க்கலாம்
ஒரு சிலருக்கு 7ஆம் இடம், 8ஆம் இடம் கடுமையாக இருந்து லக்னாதிபதியும் பலவீனமாக இருக்கும். இப்படிப் பட்டவர்கள் திருமணம் செய்து கொள்வதை கூடிய வரையில் தவிர்க்கலாம். இல்லை தங்களை விட வசதி குறைவான பெண்ணை எடுப்பது நல்லது.
அதாவது திருமணத்திற்கு வருபவர்கள் எல்லாம் முகம் சுளிக்கும் படியான வீட்டில் தான் பெண் எடுக்கும் படியாக இருக்கும். அது தான் அந்த ஜாதகருக்கும் கூட நல்லது. ஏனெனில், 7 ஆம் இடமும் - 8 ஆம் இடமும் பாதிக்கப்பட்டு இருந்தால் திருமண வாழ்க்கையில் ஒரு குறைபாடு இருக்கும் அல்லது அவர்களை விட சிறிது தாழ்ந்த நிலையில் இருக்கும் பெண்ணை எடுத்தால் அவர்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதே அவர்களது ஜாதக அமைப்பாகும்.
தாந்த்ரீக பரிகாரங்கள்
சில தாந்த்ரீக பரிகாரங்களை செய்து மேற்கண்ட அமைப்பை மாற்ற நினைத்தால், திருமணம் வசதியான இடத்தில் அல்லது அவர்களுக்கு சமமான இடத்தில் பெண் அமைந்தாலும் கூட திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது. மணமக்கள் பிரிய வேண்டி இருக்கும். காரணம் தாந்த்ரீக பரிகாரங்கள் என்பது தெய்வம் கொடுக்க விரும்பாததை தட்டிப் பறிப்பது போன்றது.
இன்னும் சில ஜாதகங்களை ஆராய்ந்தால், நட்சத்திரப் பொருத்தம் இருக்கும், ஜாதகப் பொருத்தம் இருக்கும். நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென பிரிவு ஏற்படும். இதற்கு அவர்களது தசா புக்திகளின் மாறுபாடே காரணமாக அமையலாம். எனவே நட்சத்திர பொருத்தம், ஜாதகம், மணமகன் - மணமகளுக்கு அந்த நேரத்தில் என்ன திசை அல்லது புத்தி நடக்கிறது என அனைத்தையும் ஒரு நல்ல ஜோதிடரைக் கொண்டு ஆராய்ந்து அதன் பின்னர் திருமணம் செய்தால் தம்பதிகள் இருவரும் பிரியாமல் இருப்பார்கள்.
எனவே பொருத்தம் பார்க்கும்போது மோசமான தசைகள் ஆணுக்கோ, பெண்ணுக்கோ வருகிறதா என்பதைப் பார்த்து, அவ்வாறு வந்தால், எதிர்பாலருக்கு அதனை சமாளிக்கக் கூடிய தசா புக்தி வருகிறதா என்பதைப் பார்த்து திருமணம் முடிக்க வேண்டும். இவ்வாறு எல்லாவற்றையும் பார்த்து திருமணம் செய்தால் ஓடிப்போதல் போன்றவை ஏற்படாது.
ஜாதகப்படி ஆண்மை குறைப்பாடு
சில சமயங்களில் மனைவி ஓடிப் போவதற்கு ஆணின் ஆண்மைத் தன்மை குறைபாடும் கூட காரணமாக அமைந்து விடுவது உண்டு. இதற்கு என்ன காரணம்? ஆண்மை குறைப்பாடு ஏற்பட ஜாதகப்படி எது காரணமாக அமைக்கிறது? வாருங்கள் பார்ப்போம்.
பொதுவாக செவ்வாய், சுக்ரன் கிரகங்கள்தான் காமத்தை தூண்டக்கூடிய கிரகங்களாகும். இவை பகை வீட்டில் இருக்கிறதா, ஆட்சி வீட்டில் இருக்கிறதா, உச்சம் பெற்றுள்ளதா, நீச்சம் பெற்றுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அது சேர்ந்த கிரகம் உள்ளிட்டவற்றையும் பார்த்தால் ஒரு ஆணின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். இதே போன்று தான் பெண்ணின் ஜாதகத்திலும் அவரது கர்ப்பப்பையின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில்.
போக ஸ்தானம்
லக்னத்திற்கு 3ஆம் இடம்தான் போக ஸ்தானம். எனவே 3ஆம் இடம் நன்றாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதற்கடுத்து சுக்ரன், செவ்வாய் எங்கு இருக்கிறது, எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். சுக்ரன் நல்ல இடத்தில் இருந்தால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டுடன் வாழ்வார்கள்.
சுக்ரன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து, சனியும் சுக்ரனும் பார்த்துக் கொண்டால் அவர்கள் தாம்பத்தியத்தில் அவ்வளவு எளிதாக திருப்தி அடைய மாட்டார்கள். மேற்கொண்டு பலரை நாடுவார்கள்.
சுக்ரன் செவ்வாயுடன் சேர்ந்து சனி பார்த்து விட்டால் அவர்கள் நீலப்படங்களை அதிகம் பார்ப்பார்கள். சுக்ரனும் சனியும் ஒன்றாக இருந்து செவ்வாய் பார்த்தால் அவர்கள் பிறர் மனையை நாடுவார்கள்.
எனவே திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்க, தம்பதிகள் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருக்க, பொருத்தம் பார்ப்பதை நல்ல ஜோதிடரை அணுகி பொருத்தம் பாருங்கள். அவர் இந்த ஜாதகம் வேண்டாம் என்று கூறியும், வீடு வசதியைப் பார்த்து திருமணம் செய்து, பின்னர் கண்ணீர் சிந்தும் நிலை வேண்டாம்.