முதலில் வர்கோத்தமம் என்றால் என்ன? வாருங்கள் அது பற்றி பார்ப்போம். ஒரு கிரகமானது ராசி சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருந்தால் அதாவது ஒரே ராசியில் காணப்பட்டால் அந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றதாக அர்த்தம். உதாரணமாக, நீங்கள் ராசி சக்கரத்தில் ரிஷப லக்கினம், நவாம்சத்திலும் ரிஷப லக்கினம் என்றால், உங்களது லக்கினம் வர்க்கோத்தமம் பெற்று உள்ளது. அதாவது வர்கோத்தம லக்கினம் என்று அதற்குப் பெயர். அப்படியாக வர்கோத்தம லக்கினம் பெற்று விட்டால் அது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை பெற்றுத் தரும். புகழைத் தரும். ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்காக அவர் பிறந்தவர் என்று அர்த்தம்.
சூரியன், சந்திரன்
இதன் அடிப்படையில், சூரியன் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகரிடத்தில் ஆளுமை இருக்கும். வெற்றி கிடைக்கும். நல்ல நிர்வாகத் திறன் மற்றும் கடமை உணர்வு கொண்டவர். நல்ல குணவான். எல்லாவற்றிலும் நல்ல பெயர் எடுப்பார். சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் மன வலிமை அதிகம் கொண்டவர். தாய் மீது மதிப்பு, மரியாதை கொண்டவர். நல்ல கற்பனை வளம் மிக்கவர். செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் உடல் அளவில் சக்தி வாய்ந்தவர். நல்ல திருமண வாழ்க்கை கொண்டவர். வீடு, வாகனம் வாங்குவார். காவல் துறை அல்லது விளையாட்டுத் துறையில் சாதிப்பார். புகழ் பெறுவார். விடா முயற்சி மற்றும் தைரியம் கொண்டவர்கள்.
குரு, சுக்கிரன்
புதன் வர்கோத்தமம் பெற்றால் நன்கு படிக்கக்கூடியவர்கள். கலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். நிறைந்த வித்தைகளை கற்றவர்கள். பேச்சுத் திறமை கொண்டவர்கள். வியாபாரிகள். பேச்சில் திறமை கொண்டவர்கள். குரு வர்கோத்தமம் பெற்றால் தெய்வ அனுக்கிரகம் நிறைந்தவர்கள். நீதிமான்கள் பாலையும், கள்ளையும் முறையே பிரிக்கத் தெரிந்தவர்கள். பெரியவர்களிடத்தில் பணிவு கொண்டவர்கள். நல்ல ஆன்மீக வாதிகள். நேர்மையானவர்கள். சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அவர்கள் மிகவும் அழகானவர்கள். அழகான மனைவி, நல்ல குடும்பம் கொண்டவர்கள். காதலில் வெற்றி கொண்டவர்கள். செழிப்பாக வாழக்கூடியவர்கள்.
சனி
சனி வர்கோத்தமம் பெற்றால் தொழிலில் பொறுமை கொண்டவர். ஆசைகளை கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள். ராகு வர்கோத்தமம் பெற்றால் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கும். அமானுஷ்ய விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டவர்கள். எனினும் இவர்கள் சம்பாதிக்கும் வழியானது பிறரை மோசம் செய்வதாக இருக்கலாம். கேது வர்கோத்தமம் பெற்றால் ஆன்மீக ஈடுபாடு அதிகம் இருக்கும். ஜோதிடத்திலும் அவர்களுக்கு ஈடுபாடு இருக்கும்.
நன்மை மட்டுமே
மொத்தத்தில் எந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றாலுமே... அது நன்மையை தான் செய்யும். அதாவது ஜாதகருக்கு ஏதோ ஒரு விதத்தில் லாபத்தை தான் தரும். அதன் தசையும் கூட பெரும்பாலும் தீமை செய்ய வேண்டிய இடத்தில், தீமையை குறைத்தும் அல்லது மத்திம பலனை தரும். அதேபோல, நன்மை செய்ய வேண்டிய இடத்தில் அதிக அளவில் நன்மையை செய்யும். மொத்தத்தில் கிரகங்கள் வர்க்கோத்தமம் பெறுவது அனைவருக்குமே நல்லது. எல்லோருக்குமே அது பெரும்பாலும் லாபத்தை அல்லது நன்மையை தான் ஏதேனும் ஒரு விதத்தில் தரும். அதிலும், லக்கினத்திற்கு 2, 5, 7, 9, 10, 11 ஆகிய அதிபதிகள் வர்கோத்தமம் பெற்றால் அதிக அளவில் நன்மையை அது செய்யும். அதன் தசைகளிலும் கூட நன்மைகளும், லாபங்களும் மேலோங்கும். துர்ஸ்தானம் எனப்படும் 6,8,12 ஆம் அதிபதிகள் வர்க்கோத்தமம் பெற்றால் தீய பலன்களை குறைத்துத் தரும்.
வர்கோத்தம தசை பற்றி தெரியாதவர்களுக்கு இக்கட்டுரையை பகிருங்கள்.(ஷேர்)