வன்னி மரம் எதனால் சிறப்பு வாய்ந்தது?
மரங்களில் ஆல மரம், அரச மரம், வில்வ மரம், பனை மரம், தென்னை மரம், மா மரம், பலா மரம் என்று பல்வேறு மரங்கள் இருக்கின்ற நிலையில், வன்னி மரம் குறித்து ஒரு சிலர் அறிந்திருப்பர், வேறு சிலர் அதிகம் தெரியாமல் இருக்கலாம். அதையடுத்து வன்னி மரம் குறித்தும், அதன் சிறப்பு மற்றும் பலன்களை தெரிந்து கொள்வோம்.
வெற்றியின் சின்னம்
முக்திப்பேற்றை அளிக்கும் சிவபெருமான் தனது சடாமகுடத்தில் வன்னி இலையை சூடியிருப்பதாக சிவகீதை தெரிவிக்கிறது.
அதையடுத்து, வெற்றியின் சின்னமாக வன்னி மரம் கருதப்படுகின்றது.
சமஸ்கிருத மொழியில் வன்னி மரத்திற்கான பெயர் 'சமி' ஆகும்.
புருசுண்டு முனிவரின் சாபத்துக்கு ஆளான சமி எனும் பெண்ணே வன்னி மரமானதாக வன்னி மரத்தின் வரலாறு கூறுகின்றது.
விநாயகரின் அருளால் அந்த பெண்ணின் சாபம் நீங்கி, வன்னி மரம் சிறப்படைந்தது.
முன்னொரு காலத்தில் கௌசல்யன் என்ற மாணவன், குருகுல கல்வி முடிந்ததும், குருநாதருக்கு குரு தட்சணை வழங்கிட விரும்பினான்.
கல்வியை காசுக்கு விற்க மனமில்லாத குரு, அளவுக்கதிகமாக மாணவனிடம் கேட்டால் அவனால் கொடுக்க முடியாது என்று கருதி 25 கோடி பொற்காசு வழங்கும்படி கேட்டார்.
அதையடுத்து, அந்த மாணவன் அயோத்தியை ஆண்ட ரகுவம்ச மன்னனிடம் சென்று 25 கோடி பொற்காசு வழங்கும்படி கேட்டான்.
மன்னரிடம் அவ்வளவு பணம் இல்லாததால், அவர் இந்திரனிடம் சென்று கேட்டார்.
இந்திரன் அயோத்தியில் உள்ள வன்னி மரங்களில் பொன் மழை பெய்யும்படி செய்ததால், மாணவன் கேட்ட தொகையை மன்னன் கொடுத்தான்.
அதனால், வன்னி மரத்தின் இலைகள் தங்கமாக கருதப்பட்டன. அதேபோல், விருதாச்சலத்தில் உள்ள விருதகிரீஸ்வரர் கோயிலை கட்டியபோது, அதற்காக வேலைசெய்தவர்களுக்கு ஊதியமாக, விபசித்தி முனிவர் என்பவர் வன்னி இலைகளை கொடுத்தார் என்றும், அது அவர்களது ஊதியத்திற்கு தகுந்தாற்போல் தங்கமாக மாறியது என்றும் ஸ்தல வரலாறு கூறுகின்றது.
சிறப்பு
“வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர் தூவி.
நம்பாவென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோவை வண்பொடும் மூதுகுன்றே”
என தேவாரத்தில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.
ஆந்திராவில் வன்னி மரம் புனிதமாக கருதி வணங்கப்படுவதுடன், பெரியவர்களிடம் வன்னி இலைகளைக் கொடுத்து அட்சதையாக தூவச்செய்து, ஆசிர்வாதம் பெறுவது ஆந்திர மாநிலத்தின் வழக்கமாகும்.
மராட்டியர்கள் வன்னி மரத்தை வழிபட்டு அதன் இலைகளை போருக்கு செல்லும்போது கையில் எடுத்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
கர்நாடகத்தில் மைசூர் தசராவின் முக்கிய நிகழ்வாக வன்னி மர வழிபாடு உள்ளது.
இந்தியாவில் இராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் மாநில மரமாக வன்னி மரம் உள்ளது.
மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், தமிழகத்தில் விஜயதசமி நாளில் வன்னி இலைகளை கொண்டு வந்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகின்றது.
பலன்கள்
வன்னி மரத்தடி விநாயகர் இருக்குமிடங்களில் எறும்புகளுக்கு சனிக்கிழமையன்று உணவிடுவதால் சனி கிரகத்தையும் திருப்தி செய்ததாக இருக்கும்.
வன்னி மரத்தடியில் இடப்படும் அரிசி பொடியை ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம்.
வன்னி மரப்பட்டையில் கஷாயம் செய்து குடித்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வன்னி மரத்தின் இலைகளை ஜூஸ் செய்து குடித்தால் இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் உள்ளது.
மாதவிடாய் மற்றும் இரத்த போக்கு பிரச்சனை உள்ளவர்கள் வன்னி மரத்தின் காயை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.