
செவ்வாய்க் கிழமையை ஜோதிடத்தின் அடிப்படையில் மங்களகரமான நாளாகத்தான் குறிப்பிடுகிறார்கள். அதனால் தான் செவ்வாய் கிழமையை வடக்கே "மங்கள் வாரம்" என்று அழைக்கின்றனர். ஆனால் சுப நிகழ்ச்சிகளை செவ்வாய் கிழமைகளில் தவிர்க்கின்றனர். அதற்கான காரணத்தை அறிந்து கொள்வோம்.
நாட்களும் கிரகங்களும்
உண்மைக் கோள்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய இந்த ஏழு கிரஹங்களின் பெயர்களை முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என வாரத்தின் ஒவ்வொரு நாளிற்கும் சூட்டினார்கள்.
இதில் சுபகிரஹங்களான சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரின் பெயர்களைப் பெற்ற அதாவது திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகியவற்றை நல்ல நாட்களாகவும், அசுப கிரஹங்களான சூரியன், செவ்வாய், சனி ஆகியோரின் பெயரினைக் கொண்ட ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய மூன்றையும் தீய நாட்களாகவும் மனதில் உருவகப்படுத்திக் கொண்டார்கள்.
ஞாயிறு நல்ல நாளான விதம்?
இதில் ஞாயிறு என்பது விடுமுறை நாளாக வருவதால் சௌகரியம் கருதி கொஞ்சம், கொஞ்சமாக ஞாயிற்றுக் கிழமையில் சுபநிகழ்ச்சிகளைச் செய்யத் தொடங்கினர்.
இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, உண்மையில் என்ன கிழமை என்பதை விட அந்த நாளில் இடம்பெறுகின்ற திதிக்கும், நட்சத்திரத்திற்குமே முக்கியத்துவம் தரவேண்டும்.
எல்லாவற்றையும்விட சுபநிகழ்ச்சியை நடத்துகின்ற நேரத்தில் என்ன லக்னம் என்பதையும், அந்தந்த நிகழ்ச்சிக்குரிய ‘ஸ்தான சுத்தம்’ சரியாக உள்ளதா என்பதையும் கணக்கிட்டு சுபநிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
நம் தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமையில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளை நடத்தும் பழக்கமில்லை.
எனினும் செவ்வாய் என்பது புருஷ வாரம் (செவ்வாய் ஆண் கிரஹம்) என்பதால் சீமந்தம் செய்ய உத்தமம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பதையும் கண்டிருப்போம்.
இன்னும் சில
மனை, வீடு, நிலம் வாங்குதல், இயந்திரங்களைக் கொண்ட புதிய தொழிற்சாலை தொடங்குதல், மருத்துவம் சார்ந்த தொழில் துவங்குதல் ஆகியவற்றிற்கு செவ்வாய்க்கிழமை உத்தமமான நாள் ஆகும்.
செவ்வாய்க்கிழமை மங்கள் வாரம் என்பதால் அதில் சுபநிகழ்ச்சிகளை விலக்க வேண்டிய அவசியமில்லை.