தோள்பட்டை வலியை விரட்ட என்ன வழி?

உடலில் முக்கியமானது தோள்பட்டை. இந்தப் பகுதியை தவிர மற்ற எந்த எலும்புகளும், குறிப்பாக கால்மூட்டு, கணுக்கால் உள்ளிட்டவைகள் பல திசைகளிலும் சுழலக்கூடிய பகுதியாக இல்லை. ஆனால் தோள்பட்டையுடன் கூடிய கைகளை நாம் பல்வேறு திசைகளிலும் சுழலச் செய்யலாம். அதனால் எலும்பியல் மருத்துவத்தில் தோள்பட்டை மிக நுட்பமாக பார்க்கப்படுகிறது. இது இரண்டு கைகளை உடலுடன் இணைக்கும் பகுதியாகும். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த தோள்பட்டையில் எப்படி வலி வருகிறது? எவ்வாறு பாதிப்பை தவிர்ப்பது? அதற்கான எளிய மருத்துவம் என்ன? என்று பார்க்கலாம்.

எதனால் வலி ஏற்படுகிறது?

தோள்பட்டை பகுதியில் உள்ள தசைகளின் தளர்ச்சி, தசைநார்களின் தொடர்ச்சி அறுபடும்போது அதில் வலி ஏற்படும்.

கழுத்தில் இருந்து ‘ஸ்காப்லா’ எலும்புப்பட்டை முழுவதும் படர்ந்து சற்று கீழ்பகுதி வரை உள்ள தசைப் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கம், தளர்ச்சி உள்ளிட்ட காரணங்களாலும், தோள்பட்டை வலி ஏற்படும்.

யாருக்கு பாதிப்பு?

கணினி, மடிக்கணினி, கைபேசி பயன்படுத்துபவர்கள், கடின பணிகள் செய்பவர்கள், தறியில் பணிபுரிபவர்கள், சுத்தியல் கொண்டு பணிபுரிவோர், கட்டிடப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படும்.

டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பவர்களுக்கு இந்த வலி வரலாம்.

வயதானவர்களுக்கு தசைநார் ரத்த ஓட்டம் சீரின்மையால் அது கிழிந்து, தோள்பட்டை வலி ஏற்பட்டு, கைகளை துாக்க முடியாத நிலையும் ஏற்படும்.

நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு தோள்பட்டை மூட்டு உறை இறுக்கம் ஏற்பட்டு அதனால் வலியுடன் கைகளை இயக்க முடியாத நிலை ஏற்படும்.

என்ன அறிகுறிகள்?

எலும்பு தேய்மானமோ, எலும்பு உடைந்திருந்தாலோ அதிக வலி ஏற்பட்டு பாதிப்பை உணர்த்திவிடும்.

தோள்பட்டையில் ஏதேனும் அடிபட்டாலும் வலி ஏற்படும்.

என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சியை தினமும் பழக்கப்படுத்திக் கொள்வது அவசியம்.

இளமையில் (18 வயது முதல் 30 வயதுக்குள்) உடற்பயிற்சி செய்து உடல்திறனை பழக்கப்படுத்தியவர்களின் எலும்புகள் 60 வயது வரை திடகாத்திரமாக இருக்கும்.

கால்சியம் நிறைந்த முட்டை, பால், மீன் சாப்பிட வேண்டும்.

கேழ்வரகு, கீரை வகைகளை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

வலியை போக்கும் மருத்துவம்

பாதிப்பிற்கு உள்ளான தசை, பாதிப்பின் தன்மைக்கு ஏற்றவாறு பிசியோதெரபி பயிற்சி மூலம் குணப்படுத்திவிடலாம்.

நோயாளியின் பாதிப்பிற்கு ஏற்ற வகையில் ‘அல்ட்ரா சவுண்ட் தெரபி’, ‘எலக்ட்ரோ தெரபி’, ‘இன்செக் ஷன் தெரபி’ உள்ளிட்ட முறைகளில் பாதிப்புக்களை குணப்படுத்தலாம்.



Follow Us on