download_indicator

திருச்செந்தூர் முருகன் கோயிலை கட்டியவர்கள்

தமிழகத்தில் இருக்கும் சுமார் 41,000-த்திற்கும் மேற்பட்ட கோயில்களை பெரும்பாலும் பல்வேறு மன்னர்களும், செல்வந்தர்களும் கட்டியிருக்கும் நிலையில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகின்ற திருச்செந்தூர் முருகன் கோயிலை கட்டியவர்கள் யாரென்று பார்த்தால் உண்மையில் பெரும் வியப்பாக இருக்கும். அதையடுத்து, திருச்செந்தூர் முருகன் கோயிலை கட்டியவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

கட்டிடக்கலை அதிசயம்

பொதுவாகவே கடற்கரையையொட்டி பெரிய கட்டிடங்களை யாரும், எப்போதும் கட்டுவதில்லை.

ஆனால், தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் இன்று வரை கட்டிடக்கலையின் அதிசயமாக பார்க்கப்படுகின்றது.

கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகிலேயே இருக்கும் என்பதால், அத்தகைய பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் 50 ஆண்டுகளுக்குள்ளாகவே பலமிழந்து அழிந்துவிடும்.

அதனால், கடற்கரைக்கு அருகில் பெரும்பாலும் உயரமான கட்டிடங்களை கட்டுவதில்லை.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ. தொலைவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 133 அடி உயரமுள்ள கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140 மீ. தொலைவில்தான் அமைந்துள்ளது.

இவற்றை விட பெரிய அதிசயம் என்னெவென்றால், இந்த கோயிலின் கருவறை, தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

3000 ஆண்டு

திருச்செந்தூர் முருகன் கோயில் குறித்து, சங்ககால இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்றும் திருமுருகாற்றுப்படை போன்றவற்றில் கூறப்பட்டிருக்கின்றது.

அதன்படி பார்க்கையில், இக்கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று தெரியவருகின்றது.

கடலுக்கு மிக அருகில் இவ்வளவு ஆபத்தான இடத்தில், துணிந்து கட்டப்பட்ட இந்த கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்த பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதே பெரும் வியப்பாகும்.

இவ்வாறாக இன்றுவரை அதிசயங்களை நிகழ்த்தி காட்டி கொண்டிருக்கின்ற கோயிலை கட்டியவர்கள் 5 ஆண்டிகள் என்பது அதைவிட பெரும் அதிசயமாக உள்ளது.

யார், யார்

ஏதாவது நடக்காத காரியத்தை யாராவது சிலர் பேசிக்கொண்டிருந்தால், அதை ஆண்டிகூடி மடம் கட்டிய கதை என்று கேலியாக கூறுவது வழக்கம்.

ஆனால், உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கும் வகையில் கட்டப்பட்ட கோயில் திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகும்.

அத்தகைய ஆண்டிகள் யார், யாரெனில் மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி, ஸ்ரீவள்ளிநாயக சுவாமி மற்றும் தேசியமூர்த்தி சுவாமி ஆகியோரே அந்த 5 ஆண்டிகளாவர்.

இவர்களில் 4 பேரின் ஜீவசமாதிகள் திருசெந்தூர் முருகன் கோயில் அருகிலேயே அமைந்துள்ளது.

அதில் மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி ஆகியோரின் சமாதிகள், கடற்கரையின் அருகில் அமைந்திருக்கும் நாழிக்கிணற்றின் தெற்கே மூவர் சமாதி என்ற பெயரில் உள்ளது.

நான்காவதாக ஸ்ரீவள்ளிநாயக சுவாமியின் ஜீவசமாதி கோயிலின் ராஜ கோபுரம் அருகே வடக்கு வெளிப்பிரகாரத்திலிருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

ஐந்தாவதாக தேசியமூர்த்தி சுவாமியின் ஜீவசமாதியை காண திருச்செந்தூரிலிருந்து, திருநெல்வேலிக்கு செல்லும் சாலையில் உள்ள ஆழ்வார் திருநகரியில் இறங்கி ஆற்றைக்கடந்து ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும்.

அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் கோயிலின் பின்புறத்தில் உள்ளது.

இந்த ஐவரின் ஜீவசமாதிகளையும் ஒரே நாளில் தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும்



Follow Us on