திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயர் எப்படி வந்தது?

நாவுக்கு அரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டவரும், தேவாரம் பாடிய நால்வரில் வயதில் மிக மூத்தவருமான திருநாவுக்கரசரை அப்பர் என்று அழைத்தவர் யார் என்றும், எதற்காக அவ்வாறு அழைத்தார் என்றும் அறிந்திடலாம்.

மருள் நீக்கியார்

திருவாமூரில் புகழனார், மாதினியார் என்பவர்களின் மகனாக பிறந்த திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள் நீக்கியார் என்பதாகும்.

திருநாவுக்கரசருக்கு வாகீசர், சொல்லரசர், தமிழ்வேந்தர், நாவரசர், தாண்டக வேந்தர், அப்பர் என்று பல்வேறு பெயர்கள் உண்டு.

மருள் நீக்கியார் இளமையில் சமண சமயம் சார்ந்து, கலை நூல் பலவும் கற்றுத் தேர்ந்து, தருமசேனர் என்னும் பட்டம் பெற்று சமண சமயத்தில் தலைமைப் பதவியை பெற்று விளங்கினார்.

மருள் நீக்கியாரின் மூத்த சகோதரி திலகவதியார், தனது தம்பியை சமண சமயத்தில் இருந்து மீட்க எவ்வளவோ முயன்றார்.

இறுதியில் சிவபெருமானிடமே அவர் கோரிக்கை விடுத்ததும், அவரது கனவில் வந்த திருவதிகை வீரட்டானேஸ்வரர், மருள் நீக்கியாரை தடுத்தாட்கொள்ளும் விதமாக சூலை நோய் கொடுப்பதாக தெரிவித்தார்.

இறைவன் கூறியபடியே சூலை நோய் வந்ததையடுத்து, வலியால் தருமசேனர் துன்புற்று, துடி துடித்தார்.

அவர் கற்ற சமண சமய மந்திரங்கள், மருந்துகள் ஆகிய எதுவும் பலனளிக்கவில்லை, அதனால் தருமசேனர், சகோதரியை நாடி ஓடி வந்தார்.

சிவபிரானின் திருவடிகளை வணங்கி, ஈசனின் விபூதியை நமசிவாய என்று ஓதி தம்பிக்கு திலகவதி அளித்தார்.

அதை உடல் முழுவதும் பூசி, வாயில் இட்டு விழுங்கி, திருவதிகை கோயிலில் வீரட்டானேஸ்வரர் முன் நின்று, "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி இறையருளால் சூலை நோய் நீங்கப்பெற்றார்.

மருள் நீக்கியாரது செந்தமிழ் பாடலைக்கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு ‘திருநாவுக்கரசன்’ என்னும் நாமத்தை அருளினார்.

சிறப்பு

சமண சமயத்தை விட்டு சைவ சமயத்தில் சேர்ந்ததால் கோபம் கொண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னன், சமணர்கள் தூண்டுதலின் பேரில், பெருந்தீயின் வெப்பம் கொண்ட நீற்றறையில் அடைத்து வைக்கும்படி ஆணையிட்டான்.

அப்போது, திருநாவுக்கரசர், சிவபெருமானை வணங்கி “மாசில் வீணையும் மாலை மதியமும்” என்ற திருப்பதிகத்தைப்பாடி அதிலிருந்து மீண்டார்.

அதையடுத்து, விஷம் கலந்த உணவை சாப்பிடும்படி செய்தனர், யானையை விட்டு அவரை மிதிக்கச் செய்தனர்.

ஆனால் இறைவனின் துணையிருக்க, யாரால் திருநாவுக்கரசரை என்ன செய்து விட முடியும்!

விஷம் கலந்த உணவு அவருக்கு அமிர்தம் போலானது, சீறி வந்த யானை, திருநாவுக்கரசர் பாடிய, ‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை’ என்ற பதிகத்தை கேட்டு, திருநாவுக்கரசரை வலமாக வந்து பணிந்து எழுந்து திரும்பி சென்றது.

அதைக்கண்டு அவமானமடைந்த சமணர்கள், திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் விடுமாறு அரசனிடம் கூறினார்கள்.

மதி குழம்பிய அரசனும் சமணர்கள் கூறியதைக் கேட்டு அவ்வாறே செய்ய உத்தரவிட்டான்.

கடலில் தள்ளப்பட்ட நிலையிலும் சிறிதும் மனம் தளராத திருநாவுக்கரசர், இறைவனைத் துதித்து ‘சொற்றுணை வேதியன்’ என்னும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். அதனால், கல்லும் படகு போன்று கடலில் மிதந்ததையடுத்து நாவுக்கரசரும் கரை சேர்ந்தார்.

இவ்வாறாக, திருநாவுக்கரசரின் மகிமையை அறிந்த அரசன், மனம் திருந்தி அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

மேலும், தன்னையும் மன்னித்து சைவ சமயத்தில் திருப்பணி செய்வதற்கு அனுமதி வேண்டினான்.

அப்பர்

இந்நிலையில், சமயக்குரவர்களில் வயதில் மிகவும் இளையவரும், எல்லோராலும் ஞானக் குழந்தை என்று போற்றப்பட்டவருமான திருஞானசம்பந்தர், சீர்காழியில் சைவ தொண்டாற்றி வந்தார்.

அவரும் பல்வேறு சிவ ஸ்தலங்களுக்கு சென்று இறைவனின் புகழை தேமதுர தமிழ் பாடல்களால் எல்லோரும் அறிந்திட செய்தார்.

அவ்வாறு, ஒரு சமயம் திருஞானசம்பந்தர் சீர்காழியில் இருந்தபோது, திருநாவுக்கரசர் அங்கு வந்ததை அறிந்த சம்பந்தர் அவரைச் சந்தித்தார்.

அப்போது திருநாவுக்கரசரை ‘அப்பா’ என்றழைத்துப் போற்றினார் திருஞானசம்பந்தர்.

அன்று முதல், ‘அப்பர்’ என்னும் பெயரே திருநாவுக்கரசருக்கு ஏற்பட்டது.

அதன் பின்னர், அந்த பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

திருநாவுக்கரசரும், அப்பரும் முதன் முதலாக எங்கே சந்தித்து கொண்டனர் என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on