திருமணத்தில் மணமக்கள் 7 அடிகள் நடப்பது எதற்காக?

திருமணம் செய்யும்போது அக்னி சாட்சியாக திருமணம் செய்யவேண்டும் என்பதால் மணமேடையில் முன்பு சிறிய யாகம் செய்தனர். தற்போது அந்த பழக்கவழக்கமெல்லாம் மாறி விட்டது. அதேபோல், திருமணம் முடிந்ததும், மணமேடையை சுற்றி வர செய்ததற்கும் காரணம் இருந்தது. எதற்காக, அவ்வாறு மணமேடையை முன்னோர்கள் சுற்றி வர செய்தனர் என்று அறிந்திடுவோம்.

சம்பிரதாயங்கள்

இந்து மதத்தில் அனைத்து செயல்களிலும் ஒரு காரண காரியம் இருந்தது.

ஆனால், இன்றைக்கு நவீனம், புதுமை என்று கூறி பண்டைய பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்களை கைவிட்டு வருகின்றனர்.

அதனால், வருங்கால சந்ததியினர்கள் இந்து மதத்தின் பெருமைகளை அறியமுடியாமல் போய்விடும் ஆபத்து உள்ளது.

பாரம்பரிய செயல்கள் மறையும்போது பண்டைய கலாச்சாரம், பண்பாடு எல்லாமே அழிந்துவிடும்.

அதன்மூலமாக ஒழுக்கம், நேர்மை, போன்ற நல்ல செயல்கள் என்றால், என்ன என்று கேள்வி கேட்கும் நிலை வந்துவிடும்.

எனவேதான், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் கடைபிடிக்கும் விதமாக பல்வேறு சாஸ்திர, சம்பிரதாயங்களை ஏற்படுத்தி வைத்தனர்.

திருமண சடங்கு

ஒரு குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து கால கட்டங்களிலும் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதற்கு சில வரைமுறைகளை முன்னோர்கள் வகுத்தனர்.

அக்னி சாட்சியாக திருமணம் செய்யவேண்டும் என்பதற்காகவே, மணமேடையில் யாகம் செய்யப்பட்டது.

அக்னிசாட்சியாக திருமணம் செய்யும்போது, தெய்வங்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதுடன், ஒருவருக்கொருவர் மற்றவரை ஏமாற்றும்போது, அவர்களது மனசாட்சியே அக்னியாக சுட்டெரிக்கும் என்பதை நினைவுபடுத்துகிறது.

மேலும், திருமணத்தின்போது மணமகனும், மணமகளும் மணமேடையில் அக்னியை சுற்றி வலம் வரவேண்டும் என்று கூறினர்.

வடமொழியில் அவ்வாறு வலம் வருவதை சப்தபதி என்று கூறுவர் (சப்த என்றால் 7 என்று அர்த்தமாகும்).

அதாவது, மணப்பெண்ணும், மணமகனும் சேர்ந்து கைபிடித்து அக்னியை வலம் வருவது 7 அடிகள் கொண்டதாக அமைய வேண்டும் என்பதே நியதியாகும்.

7 அடிகள் சேர்ந்து நடப்பதன் மூலமாக, மணமகன், மணப்பெண்ணிடம் இறைவன் நமக்கு துணையிருப்பான் என்று கூறுகிறான்.

பொதுவாக 2 பேர் சேர்ந்து ஒன்றாக 7 அடிகள் நடந்தால், அவர்களுக்குள் இணைபிரியாத நட்பு ஏற்படும் என்று மனோசாஸ்திரம் கூறுகிறது.

அதனால், கணவன், மனைவி இருவரும் காலம் முழுவதும் இணைபிரியாமல் கடைசி வரை ஒன்றாக இருப்பார்கள் என்பது நம்பிக்கையாகும்.

அதன் காரணமாகவே இந்த பழக்கத்தை முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

தத்துவம்

மணமேடையில் மணமக்கள் 7 அடிகள் எடுத்து வைப்பதன் தத்துவம் என்ன என்ற விபரம் வருமாறு:

மணமகனும், மணமகளும் சேர்ந்து வைக்கும் முதல் அடி, பஞ்சமில்லாத வாழ்வை குறிப்பிடுகிறது.

இரண்டாவது அடி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று கூறுகிறது.

மூன்றாவது அடி, வீட்டில் எப்பொழுதும் நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.

நான்காவது அடி, சொத்து, சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

ஐந்தாவது அடி, லட்சுமி கடாட்சத்தை பெற வேண்டும் என குறிப்பிடுகிறது.

ஆறாவது அடி, நாட்டில் நல்ல பருவகாலங்கள் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறது.

ஏழாவது அடி, எங்கும், எப்போதும் தர்மங்கள் நிலைக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.

2 பேர் ஒன்றாக 7 அடிகள் நடந்தால் அவர்களுக்குள் நட்பு ஏற்படும் என்கிறது சாஸ்திரம் கூறுவதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on