
பருவத்திற்கு வந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பெரியவர்களால் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் நடைபெறுவது என்பது தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. இந்த திருமணம், மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் கொண்டு சமய முறைப்படி நெருப்பு முன்னிலையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்ச்சியாக தாலி கட்டுவது உள்ளது. இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் திருமணமானவள் என்ற தகுதியை பெற்று சுமங்கலியாகின்றாள். இத்தகைய திருமண சடங்கில் இன்று பல்வேறு சடங்குகள் காணாமல் போய் வருகின்றன. அதையடுத்து, ஒரு திருமணம் எவ்வாறு நடத்தப்படுகிறது? என்னென்ன சடங்குகள் இன்று காணாமல் போனது என்று பார்க்கலாம்.
பொருத்தம்
திருமணம் செய்வதற்கு முன்பாக ஆண், பெண் இரு வீட்டார் தரப்பிலும், முதலில் ஜாதகப் பொருத்தம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும்.
அதன் பிறகு, பெண் பார்க்கும் படலம் பொது இடங்களில் அல்லது பெரும்பாலும் கோயில்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது.
அப்போது பெண்ணை பிடித்ததும் பெயரளவிற்கு அங்கேயே முதலில் உறுதி செய்து கொள்வார்கள்.
அதையடுத்து, நல்ல நாள் பார்த்து இரு வீட்டார் உறவினர்கள் முன்பாக நிச்சயதார்த்தத்தை உறுதி செய்வர்.
இதன் பின் இரு வீட்டாரும் கலந்தாலோசித்து திருமண நாளை நிச்சயிப்பர். அத்துடன் பவுன் உருக்குதல் அல்லது பொன்னுருக்கலிற்கும் ஒரு நாளை தேர்ந்தெடுப்பர்.
பொன்னுருக்கல்
பவுன் உருக்குதல் அல்லது பொன்னுருக்கல் என்பது திருமணம் செய்வதற்கான திருமாங்கல்யம் (தாலி) தயார் செய்வதற்கு தேவையான தங்கத்தை உருக்குவது என்ற நிகழ்ச்சியாகும்.
இது பெரும்பாலும், திருமண நாளுக்கு முன்பாகவே ஒரு சுப நாளில் மணமகன் வீட்டில் வைத்து செய்யப்படும்.
இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வர்.
திருமாங்கல்யத்திற்குரிய தங்கத்தை கோயிலில் வைத்து பூஜை செய்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் தங்கத்தையும் வைத்துக் கொண்டு வந்து பூஜையறையில் வைக்க வேண்டும்.
பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை நகை ஆசாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும்.
முகூர்த்தக்கால் ஊன்றல்
திருமணத்திற்கு 3, 5, 7 நாட்களுக்கு முன்பாக பெண் வீட்டிலும், மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வீட்டிற்கு வெளியே ஈசான மூலையில் (வட கிழக்கு திசை) முகூர்த்தக்கால் அல்லது கன்னிக்கால் ஊன்ற வேண்டும்.
அதற்கு ஒரு தடியை வெட்டி அதன் மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு காசு முடிந்து கட்டிவிட வேண்டும்.
அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டவேண்டும்.
பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலையை தொடங்க வேண்டும்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முடிவடையும் வரை எந்தவித துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுதல் கூடாது.
பந்தலில் வாழை மரம்
திருமணத்திற்கு பந்தல் அமைப்பது மிக எளிமையான வகையில் இருந்து வெகு ஆடம்பரமாக அமைக்கும் வகையில் உள்ளது. இது, அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம்.
பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர்.
வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும். அதுபோல் நமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது.
வாழையடி வாழையாக நின்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.
பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பது போன்று, தம்பதியினர் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
வாழையும், தென்னையும் கற்பகதரு போன்று அழியாப் பயிர்கள் ஆகும். தென்னை நூறாண்டு வாழக்கூடியது. அதேபோன்று, தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடியதாக வாழவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
திருமணம் வசதிக்கேற்ப பெண் வீட்டிலோ, கோயிலிலோ அல்லது மண்டபத்திலோ வைக்கலாம்.
அவ்வாறு மண்டபத்தில் இருவரது வீட்டு வாசல்களிலும், மண்டப வாசலிலும் மாவிலை, தோரணம், வாழை மரங்களால் அலங்கரிக்க வேண்டும்.
தாலி கட்டுதல்
கூறைப்பட்டு உடுத்தி வந்த மணமகள், மணமகனின் வலப்புறத் தில் கிழக்கு நோக்கி அமர்வார்.
குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து நின்று இறைவனை வணங்கி பெரியவர்கள் ஆசிர்வதித்துக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் வாங்கி கெட்டிமேளம் முழங்க, பெரியோர் அட்சதை, மலர்கள் தூவ, மணப்பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார்.
அப்போது சொல்லப்படும் மந்திரம்
“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே
பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவச ரதசதம்”
அதைத்தொடர்ந்து மாலை மாற்றுதல்,பால்பழம் கொடுத்தல் மற்றும் ஆரத்தி போன்றவை எடுக்கப்படும்.
காணாமல் போனவை
மிக எளிமையாக அனைவராலும் கடைபிடிக்கக்கூடிய சம்பிரதாயங்களே இவ்வளவு இருக்கும் நிலையில், இன்னும் பல்வேறு சம்பிரதாயங்கள் நேரமின்மை, பொருளாதாரம் போன்றவை கருதி இன்று மெல்ல மெல்ல காணாமல் போய் வருகின்றன.
அவற்றில், முளைப்பாரி போடல், மணமகன் அழைப்பு, கடுக்கண் பூணல், தலைப்பாகை வைத்தல், காசிக்கு போதல், மணமகன் புறப்படுதல்,
பெண் புறப்படுதல், நலங்கு செய்தல், அம்மி மிதித்தல், மோதிரம் எடுத்தல், அருந்ததி பார்த்தல், பொரியிடல் போன்ற பல்வேறு சடங்குகள் குறிப்பிடத்தக்கவை.
காணாமல் போகும் திருமண சடங்குகள் குறித்த தகவலை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அறிந்திட செய்யலாமே (ஷேர் செய்யுங்கள்).