
மாதம் தோறும் வருகிற வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி தினத்தன்று வராஹி அன்னையை விரதமிருந்து வழிபட வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பதையடுத்து, பங்குனி மாத தேய்பிறை பஞ்சமியன்று வராஹியை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் அறிந்திடலாம்.
வெற்றி வழிபாடு
அன்னை லலிதாம்பிகையின் படைத்தலைவியாக, தளபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவளாக வராஹி கருதப்படுகிறாள்.
அதனால், பஞ்சமி தினத்தன்று வராஹி அன்னையை வழிபடுகிற அனைவருக்கும் வராஹி தேவி வெற்றியை அளிப்பாள் என்பது ஐதீகம்.
இந்நிலையில், மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமிக்கு அடுத்து வருகிற தேய்பிறை பஞ்சமி திதியில் வராஹியை வழிபட்டு வர எதிரிகளிடம் இருந்து காத்து அருள்வாள். இந்நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விநாயகரை வணங்கிய பின்னர், வராஹி அன்னையை வழிபடுவது சிறந்தது.
விராலி மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுவதுடன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எருமைத்தயிர், தேன் கலந்த மாதுளை, அண்ணாசி பழம், செங்கரும்பு, மசால் வடை, செவ்வாழைப்பழம் போன்றவற்றை படைத்து வழிபட சிறப்பான பலன்களை தரும்.
மாலையில் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று வராஹி தரிசனம் செய்து, தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
இவ்வாறு தொடர்ந்து 5 தேய்பிறை பஞ்சமிகளில் வராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரங்கள் கிடைக்கும்.
வராஹி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வழிபடுவோருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும்.
மனதில் தைரியம் பிறக்கும், கேட்ட வரங்கள் கிடைக்கும்.
இன்று பங்குனி தேய்பிறை பஞ்சமி தினத்தன்று வராஹி அன்னையின் 12 நாமங்களான பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வராஹி, போத்ரினி, சிவா, வார்த்தாளி, மகா சேனா, ஆக்ஞா சக்ரேஸ்வரி, அரிக்கினி போன்றவற்றை சொல்லி வணங்க, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.
புதன் ஹோரை
இன்று புதன்கிழமை புதன் ஹோரை நேரத்தில் வராஹி அம்மன் படத்தை செம்பருத்திப்பூ, நீல நிற சங்குப்பூ, சிவப்பு நிற அரளிப்பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பத்து வெண் கடுகுகளை போட்டு, தீபம் ஏற்றி அன்னதானம் செய்திட வராஹி தேவி வாழ்வை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் ஆக்கிடுவாள் .
திருஷ்டி, தோஷம் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, கடன் தொல்லை நீங்கி வறுமை ஒழிந்து குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
தொடர்ந்து 5 தேய்பிறை பஞ்சமிகளில் வராஹியை வழிபட என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).