
மனித வாழ்க்கைக்கு அவசிய தேவையானதாக பணம், வீடு, சொத்து சுகம் போன்றவைகள் உள்ளது. இவை அனைத்தும் இன்றைய காலத்திற்கு முக்கியமாக கருதினாலும், இந்து மத தர்மத்தின்படி, மனித வாழ்க்கைக்கு பிறகு ஒரு ஆன்மாவிற்கு துணையாக இருப்பது அவர் செய்த தர்மமும், இறைநாம ஜெபம் மட்டுமேயாகும். அதையடுத்து அவைகளின் மகத்துவம் பற்றி அறிந்திடலாம்.
தானம், தர்மம்
மனித வாழ்வில் தானம் செய்வது மிக அவசியமானது என்றாலும், அதைவிட தர்மம் செய்வது மிக அவசியமாகும்.
பலனை எதிர்பார்த்து ஒருவருக்கு உதவி செய்வது தானமாகும்.
எந்த பலனையும் எதிர்பாராமல் உதவி செய்வது தர்மமாகும்.
அதனால்தான், முன்னோர்களும், முனிவர்களும், தர்மம் தலைக்காக்கும் என்று கூறியதுடன், காணாமல், கோணாமல், கண்டு கொடு என்று தெரிவித்தனர்.
தர்மம் செய்யும் போது, அதை விளம்பரப்படுத்தாமல், யாருக்கும் தெரியாமல் வலதுகை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுக்க வேண்டும் என்பதே காணாமல் கொடு என்பதாகும்.
கோணாமல் கொடு என்றால், தர்மம் செய்யும்போது, மனம் கோணாமல் முழு மனதோடு மற்றவர்களுக்கு உதவி செய்வதே தர்மமாகும்.
யாருக்கு, என்ன தேவை என்பதை அறிந்து தர்மம் செய்ய வேண்டும் என்பதையே கண்டு கொடு என்று கூறினர்.
இவற்றை பின்பற்றி செய்தால் மட்டுமே தர்மமாகும்.
அதைவிடுத்து, நானும் தர்மம் செய்தேன் என்று கூறி விளம்பரப்படுத்தி செய்வது தர்மமாகாது.
பாவம் குறைந்து, புண்ணியம் கிடைக்க வேண்டும் என்றால், தான, தர்மம் இரண்டுமே செய்ய வேண்டும்.
நாம் செய்யும் தர்மம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினரையும் நலமுடன் வாழ செய்யும் என்பதாலே தர்மம் தலைகாக்கும் என்று கூறினர்.
சந்ததியினருக்கு சேர்த்து வைக்கிற சொத்து, பணம் வாழ்விற்கு பாதுகாப்பை கொடுக்கலாம், ஆனால், புண்ணியங்களை கொடுக்காது.
வாய்மையும், உண்மையும்
முன்னொரு காலத்தில் வாழ்ந்த முனிவர் ஒருவர், தன் வாழ்நாள் முழுவதும் இறைசேவையே பெரிதென கருதி, பல்வேறு ஸ்தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு வந்தார்.
அவ்வாறு செல்லுமிடங்களில், மக்களுக்கு இறைநாமத்தை கூறுவதன் மகிமை, தர்மம் செய்வது மற்றும் உண்மையாக இருப்பதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் தனது உணவுக்காக, உண்மை பேசுபவர்கள் வீட்டில் மட்டுமே உணவு வாங்கி சாப்பிட்டு வந்தார்.
பொய் பேசுபவர்களையும், அறத்திற்கு புறமாக செயல்படுபவர்களையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
இறைநாமத்தின் மகிமை
ஒரு சமயம் வெளியூருக்கு சென்ற அந்த முனிவர், அங்கே உண்மைபேசி, தர்மம் செய்பவர் யாராவது இருக்கிறார்களா? என்று விசாரித்தார்.
அப்போது அந்த ஊரில் உள்ள ஒரு வியாபாரியை, அங்கிருந்தவர்கள் கூறியதன்பேரில், அந்த முனிவரும், உண்மையை அறிவதற்காக வியாபாரியின் வீட்டிற்கு சென்றார்.
அந்த வியாபாரியும், முனிவரை வரவேற்று உபசரித்தபோது, அவரது வணிக கணக்கு வழக்கு குறித்த விபரங்களையும், அவரது வயது மற்றும் எத்தனை மகன்கள் என்ற விபரங்களையும் கேட்டார்.
அதற்கு அந்த வியாபாரி, இறைபணிக்காக இதுவரை தான் செலவு செய்த பணமே தனது சொந்த பணம் என்றும், மற்ற பணம், சொத்துக்கள் தனது இறப்பிற்கு பின் உடன் வராது என்பதால் தன்னுடையதல்ல என்று தெரிவித்தார்.
அதேபோல், தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இதுவரை இறை நாமத்தை கூறிய நேரங்களே தனது வாழ்நாள் என்று கூறினார்.
மேலும், தன்னுடைய 5 மகன்களில் ஒருவன் மட்டுமே, தன்னை மதித்து, மரியாதை செய்பவன் என்பதால் அவன் ஒருவனே தனது மகன் என்று கூறினார்.
அதைக்கேட்டு மகிழ்ந்த முனிவர் அவரை வாழ்த்தி, உணவு வழங்கும்படி தெரிவித்தார்.
இறைவனை குறித்து நினைக்காத நாளை பிறவாத நாளாக கருத வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிந்தவர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.