download_indicator

தங்கத்தாலான எருக்கம்பூ மாலை அணியும் சுவாமி ஐயப்பன்

விநாயக பெருமானுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகின்ற எருக்கம்பூ மாலை வேறு எந்த கடவுளுக்கும் அணிவிக்கப்படாத நிலையில் சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு, தங்கத்தில் செய்யப்பட்ட எருக்கம்பூ மாலை அணிவிக்கப்படுவது மிகவும் ஆச்சரியகரமான விஷயமாகும். அதையடுத்து, ஐயப்ப சுவாமிக்கு எதற்காக அவ்வாறு அணிவிக்கப்படுகிறது என்றும், எருக்கம் பூ மாலையின் சிறப்பு குறித்தும் தெரிந்து கொள்வோம்.

சிறப்பு

விநாயகர் எளிமையான கடவுளாக இருப்பதுடன், அவருக்கு மிக எளிதில் கிடைக்கும் புல், பூ போன்றவற்றை சமர்ப்பித்தாலே, அளவில்லாத மகிழ்ச்சியடைந்து எல்லையில்லா இன்பத்தை வழங்குவதால்தான் விநாயகருக்கு அருக்கம்புல், வெள்ளெருக்கம்பூ மாலை அணிவிக்கப்படுகிறது.

விநாயகருக்கு வெள்ளெருக்கம் பூ சமர்ப்பித்தால் காரியத் தடைகள் நீங்கும்.

எருக்கம்பூ சூரிய கிரகத்துக்குரியது. இது, அனைத்து எதிர்மறை சக்திகளை போக்கும் வல்லமை கொண்டதுடன், பயத்தை ஒழித்து தைரியத்தை கொடுக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

அதனால்தான், விநாயகரைப் போன்றே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்ததாக இருக்கின்றது.

மேலும் சூரியனார் கோயில், திருமங்கலக்குடி போன்ற கோயில்களிலும் வெள்ளெருக்கு ஸ்தல விருட்சமாக உள்ளது.

ஐயப்பனுக்கும்

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சுவாமி ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிப்பதற்காக, பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணப்பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி என்று 3 பெட்டிகள் தலைசுமையாக கொண்டு செல்லப்படும்.

அந்த 3 பெட்டிகளில் திருவாபரணப்பெட்டி மட்டும்தான் ஐயப்பன் சன்னதிக்குச் செல்லும் அந்த பெட்டிக்குள் திருமுகக் கவசம், சூரிகைகள், யானை, புலி விக்ரகம், வலம்புரிசங்கு, பூர்ண புஷ்கலா தேவியர் உருவம், பூக்கள் வைப்பதற்கான தங்கத்தட்டு, நவரத்தின மோதிரம், சரப்பளிமாலை, நவரத்தின மாலை, தங்க இதழ்களாலான வில்வமாலை ஆகியவற்றுடன் தங்கத்தாலான எருக்கம் பூக்களாலான மாலையும் வைக்கப்பட்டிருக்கும்.

அதனால் ஐயப்ப சுவாமிக்கு எருக்கம் பூமாலை விசேஷமாக கருதப்படுகிறது.

எளிய பொருட்களையும் ஐயப்ப சுவாமி ஏற்றுக்கொள்வார் என்பதை தெரிவிக்கும் விதமாகவே, எருக்கம் பூ மாலை அணிவிக்கப்படுகிறது.

வெள்ளெருக்கம் செடி மற்றும் வெள்ளெருக்கம் பூ மாலை இருக்குமிடங்களில் ஐஸ்வர்யங்கள் ஏற்படுமென்று சாஸ்திரங்களும், புராணங்களும் கூறுகின்றது.

நவரத்தினங்களும், பொக்கிஷங்களும், தெய்வத் திருவுருவங்களும் புதைந்திருக்கும் இடங்களிலேயே வெள்ளெருக்கு முளைக்கும் என்பது ஐதீகம்.

விநாயகரை போன்றே, சுவாமி ஐயப்பனுக்கும் வெள்ளெருக்கு மாலை பிடித்தமானது என்ற தகவலை உங்கள் நண்பர்களும், உறவினர்களும் அறிந்திட செய்யலாமே. (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on