
இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றனர். அதில் சிலர், யார் எந்த தவறை செய்தாலும் தைரியமாக தட்டி கேட்கும் துணிச்சல் மிக்கவர்களாகவும், பெரும்பாலோர் எதற்கெடுத்தாலும் ஒரு வித பயத்துடனேயே இருப்பர். ஜாதக ரீதியாக இதனை எப்படி கணிப்பது என்று பார்க்கலாம்.
மேஷ ராசியில் சூரியன் உச்சம் அடைவார். செவ்வாய் ஆட்சி பெறுவார். ராசிகளில் மேஷம் ஆண் ராசி, அந்த வகையில் இவர்கள் சூழ்நிலையை கண்டு அஞ்ச மாட்டார்கள். பெரும் படையே இவர்களை நோக்கி வந்தாலும் எதிர்த்து நிற்பார்கள். 100-க்கு 93 சதவீதம் இவர்கள் தைரியசாலிகள் எனலாம்.
ரிஷப ராசி, சுக்கிரனின் ஆட்சி வீடாகும், பெண் தன்மை கொண்ட சந்திரனும் இந்த வீட்டில் தான் உச்சம் அடைகிறார். அந்த வகையில், இவர்கள் தந்திரசாலிகள். எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். கோபத்தைக் கூட மனதில் வைத்து தகுந்த நேரத்தில் பாடம் கற்பிக்கும் குணம் கொண்டவர்கள். எனினும், இவர்களை மிகுந்த தைரியசாலிகள் என்று சொல்ல இயலாது. மேஷ ராசி போல அல்லாமல், பயப்பட வேண்டிய விஷயத்திற்கு பயப்படுவார்கள். தேவைப்பட்டால், ஒதுங்கிக் கொள்வார்கள். இவர்கள் 100-க்கு 55 சதவீதம் தைரியசாலிகள்.
மிதுனம், புதன் ஆட்சி பெறும் வீடு. எனினும், ராசிகளில் இது ஆண் ராசி. அந்த வகையில், தனது வலிமையையும் - எதிரியின் வலிமையையும் அறிந்து இவர்கள் பகை கொள்வார்கள். எதிரி பலம் பொருந்தி இருந்தால், அவன் பலவீனம் அடையும் காலம் வரையில் காத்திருப்பார்கள். வந்த சண்டையை விட மாட்டார்கள். இவர்கள் வம்பு சண்டைக்குப் போக மாட்டார்கள். எதையும் யூகித்து அறிவார்கள். சோதித்து உணர்வார்கள். இவர்களிடத்தில் 100-க்கு 60 சதவீதம் வரையில் தைரியம் காணப்படும்.
கடகம், இது சந்திரன் ஆட்சி பெறும் வீடு. குரு பகவான் உச்சம் அடையும் வீடு. ராசிகளில் இது பெண் ராசி. இவர்களிடத்தில் குருட்டு தைரியம் அதிகம் காணப்படும். எனினும், யாருடனும் நேரடியாக மோத மாட்டார்கள். மறைமுகமாக மோதுவார்கள். இவர்களிடத்தில் நக்கல் - நையாண்டி அதிகம் இருக்கும். பலசாலிகளை கேலி செய்து விட்டு, அவர்கள் பாய்ந்து வரும் சமயத்தில் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அப்படியான தைரியசாலிகள். ஆனால், குறும்புத்தனம் அதிகம் இருக்கும். இவர்கள் 100-க்கு 40 சதவீதம் தைரியசாலிகள்.
சிம்ம ராசி, இந்த ராசியில் தான் சத்ரிய கிரகமான சூரியன் ஆட்சி பெறுகிறார். அந்த வகையில், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் மகா தைரியசாலிகள். பிரச்சனை என்று வந்து விட்டால், கடக ராசி போல, ஒதுங்க மாட்டார்கள். "வா இரண்டில் இன்று பார்க்கலாம். ஒன்று நீ இருக்கணும் இல்லை நான் இருக்கணும்!" என்று களத்தில் குதித்து மல்லுக் கட்டுவார்கள். எல்லோர் முன்னிலும் அழ மாட்டார்கள். எதற்கும் கலங்க மாட்டார்கள். இவர்கள் 100-க்கு 91 சதவீதம் தைரியசாலிகள் தான்.
புதன் உச்சம் பெறும் கன்னி ராசி அன்பர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனில், எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். பெரும்பாலும் பெருந்தன்மை கொண்டவர்கள். உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்கள். இவர்களை தைரியசாலிகள் என்று சொல்வதை விட, எந்த ஒரு சூழ்நிலையிலும் பெரும்பாலும், பயத்தை வெளியில் அல்லது முக பாவத்தில் கூட காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். அதுவே ஒரு கலை தான். அந்த விதத்தில், 100-க்கு 60 சதவீதம் இவர்கள் தைரியசாலிகள்.
சுக்கிரன் ஆட்சி பெறும் துலா ராசியில் தான் சனி பகவான் உச்சம் அடைவார். அந்த விதத்தில், இவர்கள் பெரும்பாலும், தனிப்பட்ட முறையில் யாரையும் ஏமாற்றி வாழ நினைக்க மாட்டார்கள். அதே சமயத்தில், இவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் தலை குனிந்து போவார்கள். இவர்களிடத்தில் தவறு இல்லாத பட்சத்தில், சண்டை போட வந்திருப்பது எமனே ஆனாலும் தீரத்துடன் எதிர்த்து நிற்பார்கள். அந்த வகையில் 100-க்கு 68 சதவீதம் இவர்கள் தைரியசாலிகள்.
செவ்வாய் ஆட்சி பெறும் விருச்சிக ராசியில் தான் சந்திரன் நீச்சம் அடைவார். அந்த விதத்தில், இவர்கள் யோசிக்காமல் சட்டென பேசிப் பிறரை எளிதில் புண்படுத்தி விடுவார்கள். பலமானவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொண்டு, பலவீனமானவர்களை அதிகம் விரட்டுவார்கள். இவர்கள் தைரியசாலிகள் அல்ல. ஆனால், தைரியசாலிகள் போல காண்பித்துக் கொள்வார்கள். வேண்டும் என்றால், இவர்களை 100-க்கு 52 சதவீதம் தைரியசாலிகள் என்று சொல்லிக் கொள்ளலாம்.
குரு பகவான் ஆட்சி பெறும் தனுசு ராசியில் பிறந்தவர்கள், பெரும்பாலும் யாருடனும் மோத விரும்ப மாட்டார்கள். இவர்களிடத்தில், சண்டை போட வருபவர்கள் கூட இவர்களின் நற்குணங்களால் கவரப்பட்டு பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்து விடுவார்கள். இவர்களிடத்தில் தைரியம் என்பதை விட ஆன்ம பலம் அதிகம் இருக்கும். அமானுஷ்ய சக்திக்கு கூட பயப்பட மாட்டார்கள். போரை விரும்பாதவர்கள், ஆனால் கோழைகள் அல்ல. இவர்களிடத்தில் 100-க்கு 80 சதவீதம் மனோ தைரியம் காணப்படும். ஆனால், வெளியில் தெரியாது.
சனி ஆட்சி பெறும் மகர ராசியில் தான் செவ்வாய் உச்சம் அடைவார். அந்த வகையில், போர் கிரகமான செவ்வாய் உச்சம் அடையும் வீடு என்பதால், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே தங்களது தைரியத்தை உலகிற்கு பறை சாற்றுவார்கள். இவர்களிடத்தில், பொறுமையும் இருக்கும், போர் குணமும் இருக்கும். போராடி வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். எப்படிப் பட்ட நிலை ஏற்பட்டாலும், கலங்க மாட்டார்கள். மாறாக அதனை எதிர்கொண்டு சமாளிப்பார்கள். மகா நெஞ்சழுத்தம் கொண்டவர்கள். அந்த விதத்தில், 100-க்கு 67 சதவீதம் தைரியசாலிகள் இவர்கள்.
கும்ப ராசியில் பிறந்தவர்கள், பெரும்பாலும் பிறர் விவகாரங்களில் தலையிட விரும்ப மாட்டார்கள். பிரச்சனை வந்தால் ஒதுங்கி விடுவார்கள். எனினும், இவர்களிடத்தில் பழிக்குப்பழி என்கிற குணம் இருக்கும். தகுந்த நேரம் பார்த்து காலை வாரி விட்டு விடுவார்கள். சபல குணம் அதிகம் இருக்கும். காதல் விவகாரங்களில் மட்டும் மகா தைரியசாலிகள். அந்த விதத்தில் 100-க்கு 46 சதவீதம் இவர்களிடத்தில் தைரியம் காணப்படும்.
குரு ஆட்சி பெறும் மீன ராசியில் தான், சுக்கிர பகவான் உச்சம் பெறுவார். அந்த விதத்தில், மீன ராசியில் பிறந்தவர்கள் அதிக தந்திர குணம் கொண்டவர்கள். எதிரியின் பலவீனம் தெரிந்து அடிப்பார்கள். குறிப்பாக மீன ராசியில் பிறந்த ஆண்களை விட, மீன ராசியில் பிறந்த பெண்களை எளிதில் அடக்க முடியாது. பிறர் விவகாரங்களில் அதிகம் தலையிடுவார்கள். நாட்டாமை செய்வார்கள். தனது தவறை கூட சரி என்று வாதிடும் தைரியம் இவர்களிடத்தில் இருக்கும். அந்த விதத்தில் 100-க்கு 59 சதவீதம் தைரியசாலிகள்.