download_indicator

சிந்திக்க வைக்கும் தமிழ் பழமொழிகள்

பண்டைய தமிழர்கள் தங்கள் அனுபவத்துடன், அறிவுரையையும் சேர்த்து ஒரு செய்கை அல்லது செயலுக்கு விளக்கம் கூறியதே பழமொழியாக கருதப்படுகிறது. தற்போது இத்தகைய பழமொழியை அதற்குரிய அர்த்தங்களை கருதாமல், வேறு ஏதோ அர்த்தங்களாக கூறுகின்றனர். ஆனால், நமது முன்னோர்கள் ஒரு செய்கை குறித்து கருத்து சொல்லவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும்தான் பழமொழிகளை கூறினர். அதையடுத்து, சிந்திக்க வைக்கும் பழமொழிகளையும், அதன் சிறப்புகளையும் அறிந்திடுவோம்.

சிந்திக்க வைக்கும் பழமொழிகள் விபரம் வருமாறு:

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

பொருள் - மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

உண்மையான பொருள் - மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு அல்லது மேடாகும்.

அந்த மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆபத்து ஏற்படும். மண் குதிர் என்பதே மண் குதிரை என்றாகி விட்டது.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

பொருள் - கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.

உண்மையான பொருள் - கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை, கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கமாகும்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

பொருள் - மணமான பின், பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வது என்று கருதுகிறார்கள்.

உண்மையான பொருள் - வாழ்க்கையில் 16 வகை செல்வங்களான நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட ஆயுள், எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல விதி மற்றும் இன்பம் பெற்று வளமாக வாழவேண்டும் என்பதே பொருளாகும்.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

பொருள் - மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானாகவே வளர்ந்து விடும்.

உண்மையான பொருள் - ஊரான் வீட்டு பிள்ளையாகிய உனது கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருளாகும்.

சேலை கட்டிய பெண்ணை நம்பாதே!

பொருள் - சேலை கட்டும் பெண்களை நம்பாதே!

உண்மையான பொருள் - சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே!

சேல் என்பது கண்ணை குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்ப கூடாது என்பதாகும்.

களவும் கற்று மற.

பொருள் - தீய பழக்கமான திருட்டை நாம் கற்று கொண்டு, மறந்து விட வேண்டும்.

உண்மையான பொருள் - களவும், கத்தும் மற என்பதாகும்.

களவு என்றால் திருடுதல் என்றும், கத்து என்றால் பொய் சொல்தல் என்றும் அர்த்தமாகும்.

ஒருவன் தன் வாழ்நாளில் திருடுதல், பொய் சொல்தல் போன்றவற்றை மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியது மாறிவிட்டது.

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

பொருள் - ஆயிரம் நோயாளிகளை கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள் - ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.

நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

பொருள் - ஒரு வீட்டில் ஐந்து பெண்கள் பிறந்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆகிவிடுவான்.

உண்மையான பொருள் - எந்த வீட்டில் பொறுப்பில்லாத தகப்பன், ஆடமரமாக வீண் செலவு செய்யும் தாய், ஒழுக்கம் தவறும் மனைவி, துரோகம் செய்யும் உடன் பிறப்பு, பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை ஆகிய ஐந்தும் இருக்கிறதோ, அந்தக் குடும்பம் எந்த நாளும் முன்னுக்கு வராது என்பதே பொருளாகும்.

இது போன்று இன்னும் வேறு சில பழமொழிகள் வருமாறு:

தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

கரந்தப் பால் காம்பில் ஏறாது.

வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம்.

நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான்.

தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.

மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.

அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.

தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

தமிழ் பழமொழிகள் கூறும் வாழ்வியல் உண்மைகளை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on