download_indicator

இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்

இந்தியாவின் விடிவெள்ளியாக, உலகளவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாளில், அவரது கொள்கைகளை கடைபிடித்து ஆன்மீகத்தில் உயர்வான நிலைக்கு சென்று, இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்போம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தேசிய இளைஞர் தினம்

இன்றைய கொல்கத்தாவில் (பழைய பெயர் கல்கத்தா) விஷ்வநாத் தத்தா, புவனேஸ்வரி என்ற தம்பதியரின் மகனாக 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி பிறந்தவரே விவேகானந்தர்.

நரேந்திர நாத் தத்தா என்ற இயற்பெயரில் வளர்ந்த விவேகானந்தர், சிறு வயதிலிருந்தே கல்வியில் ஆர்வம், கேள்வி மனப்பான்மை, தைரியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.

மேலும், இசை, உடற்பயிற்சி, தத்துவம், சமூகவியல் போன்ற பல துறைகளிலும், கால்பந்து விளையாட்டிலும் மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார்.

இவரது பிறந்த தினமே நாட்டின் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆன்மீக பாதை

கொல்கத்தா காளி கோயிலில் ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த விவேகானந்தர், கடவுள் இருப்பது உண்மையா? எனக்கு காட்ட முடியுமா என்று கேட்டார்.

அப்போது ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசத்தால் ஆன்மீக பாதையில் திரும்பிய விவேகானந்தர், நாட்டின் வளர்ச்சி ஆன்மீகத்தில் தான் உள்ளது என்பதை அறிந்து முழுவீச்சோடு செயல்பட்டார்.

மேலும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் வழிகாட்டுதலால், வாழ்க்கையின் உயர்ந்த நோக்கமான “மனித சேவைதான் தெய்வ சேவை” என்பதை விவேகானந்தர் உணர்ந்தார்.

அத்துடன் வலிமையே வாழ்க்கை, பலவீனமே மரணம் என்பதையும் மக்களுக்கு உணர்த்தினார்.

உனக்குள் இருக்கும் சக்தியை உணர்ந்தால் உன் வாழ்க்கை மாறும் என்று விவேகானந்தர் கூறியது, இன்றைக்கும் பொருத்தமாக உள்ளது.

சகோதர, சகோதரிகளே

அமெரிக்காவின் சிகாகோவில் 1893-ஆம் ஆண்டு நடந்த சர்வதேச சமய மாநாட்டில் அவர் பேசிய அமெரிக்க நாட்டின் சகோதர, சகோதரிகளே (“Sisters and Brothers of America”) என்ற முதல்வார்த்தை உலகம் முழுவதையும் புரட்டி போட்டது.

அந்த மாநாட்டில் விவேகானந்தர் பேசிய பேச்சு எளிமையாகவும், இந்திய ஆன்மீகத்தின் மகத்துவத்தையும், சகோதரத்துவத்தின் உயர்வையும் வெளிப்படுத்தியது.

அதையடுத்து, ஒரே நாளில் உலகம் முழுவதும் கவனிக்கப்படும் நபராக விவேகானந்தர் உயர்ந்தார்.

அதன் பிறகு உலகம் முழுவதும் இந்தியாவின் யோகா, தத்துவங்களின்மீது புதிய விழிப்புணர்வு ஏற்பட்டது.

இராமகிருஷ்ண மிஷனை உலகம் முழுவதும் நிறுவி, கல்வி, ஆரோக்கியம், சமூகசேவை போன்ற துறைகளில் பல பணிகளை செய்து இளைஞர்களை நல்வழிப்படுத்தினார்.

“விழித்தெழு! இலட்சியத்தை அடையும் வரை நின்றுவிடாதே.” என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை இன்றைய இளைஞர்கள் கடைபிடித்து தங்கள் ஆற்றலை சமூக நலனுக்காக செலுத்தினால், நமது நாடு அவர் கனவு கண்ட இந்தியாவாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அறிவு, செயல், பக்தி என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து வாழ்வதே சிறப்பு என்று வலியுறுத்திய சுவாமி விவேகானந்தர், 1902-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி தனது 39-வது வயதில் இறைவன் திருவடி சேர்ந்தார்.

162-வது விவேகானந்தர் ஜெயந்தியன்று, இந்து மதத்தின் பெருமையை காப்போம் என்று அனைவரும் சபதம் செய்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on