உலகின் இரு கண்களாக விளங்குபவர்கள் சூரிய, சந்திரர்கள். இவ்விருவரைக் கொண்டு தான் திதி, வாரம், நட்சத்திரம், கரணம், யோகம் என்ற பஞ்ச அங்கங்களும் பஞ்சாங்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. இவ்விருவரில் அதிக ஆற்றல் மிக்கவர் சூரியன். சூரியன் உலகம் முழுவதிற்கும் வாழ்வு அளிப்பதாக இருக்கின்றது. இதனை அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுது பல ஆண்டுகளுக்கு முன்பு இப்போது நாம் வாழும் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனிடம் இருந்து பிரிந்தது என்று கூறுகிறார்கள். இதனால், உலகில் வாழும் உயிர்களின் மீது ஒரு விதமான ஆக்கப்பூர்வமான ஆற்றலை சூரியன் செலுத்துவதாக சொல்லப்படுகிறது. எனவே ஒருவரின் வாழ்வில் சூரியனின் கருணை கிடைத்து விட்டால் போதும் வெற்றிகள் குவியும். அதையடுத்து சூரியனை கொண்டு ஜாதகத்தில் காணப்படும் முக்கிய யோகங்கள், அவற்றின் பலன்கள், சூர்ய கிரக தோஷத்திற்கான பரிகாரங்கள் வருமாறு
சுப உபயசாரி யோகம்
சூரியனுக்கு இரு பக்கங்களிலும் அதாவது சூரியனுக்கு, முன்னும், பின்னும் இரு இராசிகளிலும் கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.
இதனால் அந்த ஜாதகர் பேரும் புகழும் அடைவார். இந்த யோகம் இருக்கும் பலர் அரசியல் துறையில் சாதிக்கின்றனர்.
வாசி யோகம்
சூரியனுக்கு 12-ல் சந்திரன், இராகு, கேது தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் தரும்.
இதனால் ஜாதகர் ஆன்மீகவாதியாக எதிர்காலத்தில் திகழ்வார்.
பணம் நல்ல விஷயங்களில் செலவாகும். பெயரும், புகழும் கிடைக்கும்.
சூரிய, சந்திர யோகம்
சூரியன், சந்திரன் ஆகிய இந்த இருவர் மட்டும் இணைந்து கடகம், மேஷம், சிம்மம் ஆகிய வீடுகளில் இருந்து அதுவும் குருவால் பார்க்கப்பட்டால் இந்த யோகம் பலம் பெரும்.
மேலும் அரசியல், பொது வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள்.
சூரியன், குரு யோகம்
சூரியனும், குருவும் இணைந்து இருந்தால், அதிலும் இவர்கள் இணைந்த வீடு சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளாக இருந்தால் மிகப் பெரிய யோகம் ஆகும்.
இதனால் ஜாதகரின் பொருளாதாரம் சிறப்படையும்.
இதே போல சூரியனும், செவ்வாயும் இணைந்து இருந்தாலும் கூட நன்மைகள் பல உண்டு. பொருளாதாரம் திருப்தி தரும்.
பரிகாரங்கள்
சூரியன்-இராகு, சூரியன்-சனி, சூரியன்-கேது ஆகிய கிரகங்கள் ஒருவர் ஜாதகத்தில் இணைந்து காணப்படுவது நன்மை அல்ல.
சூரியன் பாதகமாக காணப்பட்டால் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் அல்லது கோதுமையுடன் கூடிய உணவுப் பண்டங்களை பசியுடன் இருப்பவர்களுக்கு வாங்கித் தரலாம்.
தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசை நோக்கி நின்றவாறு ஓம் சூரிய நாராயண நமஹ என்கிற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடுவதால் சூர்ய கிரக தோஷங்கள் நீங்கும்.
ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் விரதம் இருந்து ஒரு வேளை மட்டும் இனிப்பு உணவு அல்லது கோதுமையால் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு, சூரிய பகவானை வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும்.
குதிரைகளுக்கு கொள்ளு தானியங்களை உணவாக கொடுப்பது சூரிய தோஷம் போக்கும் ஒரு சிறப்பான பரிகாரம் ஆகும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ பெருமானுக்கு கோதுமை தானியத்தால் செய்யப்பட்ட உணவை நைவேத்தியம் வைத்து சூரியனையும், சிவபெருமானையும் வணங்குவதால் சூரிய தோஷம் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.