download_indicator

சுக்கிர திசையை கொடுக்கும் சுக்கிர ஓரை வழிபாடு

வீடு மனை யோகம், புகழ் போன்றவற்றை கொடுக்கக்கூடிய சுக்கிரன், ஒருவரது ஜாதகத்தில் சரியாக இருந்தால்தான், வாழ்க்கையில் அவருக்கு அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்கும் சுக்கிர திசை யோகம் கிடைக்கும். இல்லையெனில், மகாலட்சுமியை தனது மார்பில் கொண்டிருக்கும் திருப்பதி ஏழுமலையான் கூட, குபேரனிடம் கடன்பட்டிருப்பது போன்ற நிலைதான் ஏற்படும். அதையடுத்து, சுக்கிர திசையை எப்படி பெறலாம் என்று அறிந்திடலாம்.

செல்வசெழிப்பு

வாழ்வில் ஒருவருக்கு செல்வசெழிப்பு கிடைப்பதற்கான நேரம் அமைந்து விட்டால், அவருக்கு தானாகவே எந்த வழியிலாவது செல்வம் வந்து குவிந்துவிடும்.

அதைத்தான், திடீரென செல்வந்தரானவர்களை கண்டு, அவனுக்கென்ன சுக்கிர திசை அள்ளி கொடுத்திருச்சு என்றும், சக்கரம் சுத்தியிருச்சு என்றும் கூறுவர்.

இவ்வாறாக ஒருவர் செல்வசெழிப்பாக இருப்பதற்கு சுக்கிரனின் அருள் மிக அவசியமாகும்.

எனவே, சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையன்று சுக்கிரனை வழிபட மகாலட்சுமியின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

எப்படி வழிபடுவது?

வெள்ளிக்கிழமையன்று சுக்கிரனை வழிபட வீட்டில் ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும்.

வெள்ளிப் பொருட்களில் சுக்கிர பகவான் வாசம் செய்வதால், பூஜையறையில் கண்டிப்பாக வெள்ளி பாத்திரங்கள் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட விளக்கில் (குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு) விளக்கேற்றி வழிபட அனைத்து யோகங்களும் தானாகவே கிடைக்கும்.

வெள்ளி விளக்கு இல்லாதவர்கள், வெள்ளியால் செய்யப்பட்ட எந்த பூஜை பொருளாக இருப்பினும் அது மிக சிறியதாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.

அதனால் அனைத்து யோகங்களையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கிடைத்திட சுக்கிரன் அருள்புரிவார் என்பது நம்பிக்கை.

சுக்கிரனுக்கு வெண்மை நிற மலர்கள் உகந்தவை என்பதால், மல்லிகை, முல்லை, சம்பங்கி, வெண் தாமரை போன்றவற்றை அணிவித்து, கல்கண்டு கலந்த பொங்கல் அல்லது கற்கண்டு சாதம் நைவேத்தியம் செய்து படைக்கலாம்.

சுக்கிர ஓரையும், மந்திரமும்

ஓரை பார்த்து செயல்படுபவர்களை விதியால் ஒன்றும் செய்யமுடியாது என்று பதினெண் சித்தர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு ஓரை பார்த்து செயல்படும்போது, வெள்ளிக்கிழமையன்று சுக்கிர ஓரையில், சுக்கிர காயத்ரி மந்திரத்தை 21 முறை கூறி சுக்கிர பகவானை வழிபட சுக்கிர யோகம் பலமாகும்.

அதனால் பொன்னும், பொருளும் அதிகளவில் கிடைக்கும்.

ஓம் அச்வத்வஜாய வித்மஹே

தனூர் அஸ்தாய தீமஹி

தந்நோ சுக்ர ப்ரசோதயத்!

சுக்கிர காயத்ரி மந்திரத்தை வெள்ளிக்கிழமை என்றில்லாமல், தினந்தோறும் வரக்கூடிய சுக்கிர ஓரை நேரத்தில் கூறுவதும் சிறப்பை கொடுக்கும்.

அதனால், சாதாரண சைக்கிள் சென்றவர் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக திகழ்கிற நிலையை சுக்கிர பகவான் வழங்குவது உண்மையாகும்.

இந்த உண்மையை திடீர் செல்வந்தர்களானவர்களின் வாழ்வில் ஒப்பிட்டு பார்த்து அறியலாம்.

வெள்ளிக்கிழமை சுக்கிரனை வழிபடும்போது கற்கண்டு சாதம் நைவேத்தியம் செய்வதன் அவசியத்தை உங்கள் உறவினர்கள் அனைவரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on