download_indicator

சிவராத்திரியும், நான்கு கால பூஜையும்

மகா சிவராத்திரி தினத்தன்று விரதம் இருப்பவரின் குறைகள் அனைத்தும் நீங்குவதுடன், அவரது கர்மவினைகள், தோஷங்கள் போன்றவைகள் பகலவனை கண்ட பனிபோல் நொடியில் விலகும். மேலும், அவருக்கு கைலாயத்தில் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பும் கிடைக்கும் என்று சிவ ஆகமங்கள் கூறுகின்றன. இந்நிலையில், இன்று மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்றும், அந்த பூஜைகளை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்களையும் அறிந்திடலாம்.

தேய்பிறை சதுர்த்தசி

சிவபெருமானுக்கு உகந்த திதியாக தேய்பிறை சதுர்த்தசி தினம் கருதப்படுகிறது.

தேய்பிறை சதுர்த்தசி தினமே மாத சிவராத்திரியாக அழைக்கப்படுகிறது.

அவ்வாறு மாதந்தோறும் வருகிற தினங்களில் மாசி மாத தேய்பிறையில் வருகிற சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி தினம் என்று கூறப்படுகிறது.

இன்று சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து குளித்து, நாள் முழுவதும் உணவு எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.

கோயிலுக்கு சென்று சிவபெருமானையும், அன்னை பார்வதி தேவியையும் வணங்க வேண்டும்.

நாள் முழுவதும் சிவ நாமத்தை கூறிக் கொண்டிருக்க வேண்டும்.

பிறகு மாலையில் சூரிய அஸ்தமனமானது முதல், மறுநாள் காலை சூரிய உதயம் வரை உறங்காமல் கண் விழித்திருந்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

மேலும், கோயிலில் சிவபெருமானுக்கு இரவு 9 மணிக்குள் தொடங்கி நடைபெறும் நான்கு கால பூஜையை இரவு முழுவதும் கண்விழித்து தரிசிக்க வேண்டும்.

அதிலும் நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை உள்ள லிங்கோற்பவ காலத்தில், சிவபெருமானை வணங்கிட, வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இந்த சிவராத்திரி பூஜையை முதன் முதலில் அன்னை பார்வதி தேவியே செய்ததாக நம்பிக்கை.

சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டாலும், பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தாலும், சிவ பூஜையில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் எல்லா வளமும், நலன்களும் கிடைக்க வேண்டும் என்று அன்னை, சிவபெருமானிடம் வேண்டினார்.

நான்கு கால பூஜைகளை எவ்வாறு செய்திட வேண்டும் என்ற விபரம் வருமாறு:

முதல் கால பூஜை

மகா சிவராத்திரி அன்று முதல் கால பூஜை, படைக்கும் தெய்வமான பிரம்மா, சிவபெருமானுக்கு இரவு 9 மணிக்குள் செய்யும் பூஜையாகும்.

இந்த பூஜையில் "பஞ்ச கவ்யத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், கோசாணம்) சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்து அலங்காரம் செய்திட வேண்டும்.

அதன் பின்னர், தாமரை மற்றும் அலரி மலர்கள் கொண்டு அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கலை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

ரிக் வேதபாராயணத்துடன் நெய் தீபம் காட்டி முதல் கால பூஜையை நடத்த வேண்டும்.

இந்த முதல் கால பூஜையை தரிசிப்பதால், மறுபிறவிகளில் இருந்து விடுபடலாம்.

இரண்டாம் கால பூஜை

மகா சிவராத்திரி அன்று இரண்டாவது கால பூஜை, காக்கும் தெய்வமான விஷ்ணு, சிவபெருமானுக்கு இரவு 12 மணிக்குள் செய்யும் பூஜையாகும்.

இந்த பூஜையில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்திட வேண்டும்.

இரண்டாவது கால பூஜையில் துளசி கொண்டு அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

யஜுர் வேத பாராயணத்துடன் நல்லெண்ணை தீபம் காட்டி இரண்டாவது கால பூஜையை நடத்த வேண்டும்.

இந்த இரண்டாம் கால பூஜையை காண்பதால், தன தானியங்கள் சேரும்.

மூன்றாம் கால பூஜை

மகா சிவராத்திரி அன்று மூன்றாவது கால பூஜை, சக்தியின் வடிவமான அம்பாள், சிவபெருமானுக்கு பின்னிரவு 3 மணிக்குள் செய்யும் பூஜையாகும்.

இந்த பூஜையின்போது, தேன் அபிஷேகம் செய்தும், பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வண்ண ஆடையையும் அணிவிக்க வேண்டும்.

மூன்றாவது கால பூஜையில், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து எள் அன்னத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

சாம வேத பாராயணத்துடன் இலுப்பை எண்ணை தீபம் காட்டி, மூன்றாவது கால பூஜையை செய்ய வேண்டும்.

நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை உள்ள காலம் லிங்கோற்பவ காலம் என்பதால், இது மிகவும் சிறப்பு வாய்ந்த காலம் என்று லிங்க புராணம் கூறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மூன்றாம் கால பூஜையை காண்பதால், தீய சக்திகளிடமிருந்து பராசக்தி பாதுகாப்பாள் என்பது நம்பிக்கை.

நான்காம் கால பூஜை

மகா சிவராத்திரி அன்று நான்காவது கால பூஜையை, முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்கள் உள்பட அனைத்து ஜீவராசிகளும், சிவபெருமானுக்கு அதிகாலை 05:30 மணிக்குள் செய்கின்ற பூஜையாகும்.

இந்த பூஜையின்போது, குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு, பால் அபிஷேகம் செய்தும், கரு நொச்சியால் அலங்காரமும் செய்திட வேண்டும்.

நான்காம் கால பூஜையில் நந்தியாவட்ட பூவால் அர்ச்சனை செய்து, சுத்தான்னம் என்ற அன்னத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

அதர்வண வேத பாராயணத்துடன் தூப தீப ஆராதனை செய்து நான்காவது கால பூஜையை முடிக்க வேண்டும்.

மிக உயர்வான இந்த நான்காம் கால பூஜையை காண்பதால், அனைத்து செல்வங்களையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் பெற்றிடலாம்.

சிவராத்திரி பூஜையை எப்படி செய்யவேண்டும் என்று எல்லோரும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on