
திருமணத்திற்கு முன் ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பார்ப்பது அவசியம். ஏனென்றால் செவ்வாய் இரத்த சம்பந்தமானவர். பொதுவாக லக்கினம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருதப்படும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களையே செவ்வாய் தோஷம் பெற்றவர்களாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, ஆண் ஜாதகருக்கு லக்கினம் அல்லது சந்திரனுக்கு 1, 7, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் பெண்ணிற்கும் அதே இடங்களில் செவ்வாய் இருக்குமாறு திருமணம் செய்வது நல்லது, அதேபோல 2, 4, 12 ஆகிய எந்த இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அதே அமைப்புடைய ஜாதகரோடு திருமணம் செய்யும்போது தாம்பத்திய வாழ்வு சிறக்கும். இத்தகைய திருமணங்களே சிறப்பாக இருக்கும்
விஞ்ஞான உண்மை
ஜாதகத்தில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் வலிமையாக இருக்கும் பட்சத்தில் இரத்த சோகை, இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைதல், இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தல் போன்ற இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வருவதுண்டு. ஜோதிடத்தில் செவ்வாய் இரத்தத்திற்கு உரியவர் என்பதால் தான், செவ்வாய் பாதகாதிபதியாக இருக்கும் பட்சத்தில், செவ்வாய் கிழமையில் இரத்த தானம் செய்யும்போது, செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
யாருக்கு கிடையாது
கடகம் அல்லது சிம்ம லக்கினம் கொண்டிருந்தால் அவருக்கு செவ்வாய் எங்கு அமைந்திருந்தாலும் தோஷம் கிடையாது.
சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமாகக் கருத முடியாது.
செவ்வாய் கிரகம் குரு அல்லது குரு உடன் சம்பந்தப்பட்ட பார்வை இருந்தால் தோஷமாக கருத முடியாது.
செவ்வாய் தனது நட்பு வீடான சிம்மம், தனுசு, மீனம் வீட்டில் அல்லது உச்ச வீடான மகரத்தில் இருந்தால் தோஷம் இல்லை.
செவ்வாய் தனது நீச்ச வீடான கடத்தில் இருக்க தோஷம் கிடையாது.
செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து இருப்பின் தோஷம் கிடையாது.
செவ்வாய் இரண்டாமிடத்திலிருந்து, அந்த இரண்டாமிடம் புதனின் வீடாக இருப்பின் செவ்வாய் தோஷம் இல்லை.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவதால், அங்காரக தோஷத்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
முருகப் பெருமானுக்கு செவ்வாய் கிழமையில் சிவப்பு வஸ்திரம் மற்றும் சிவப்பு மலர் வாங்கி கொடுப்பது நல்லது.
முருகனுக்கு 9 செவ்வாய் கிழமை தொடர்ந்து நெய் விளக்கு ஏற்றி, கந்த சஷ்டி கவசம் படித்து வர செவ்வாய் தோஷம் நீங்கும்.
முருகன் கோயிலுக்கு வெட்டி வேர் மாலை வாங்கி கொடுத்து வணங்கி வருவது நல்லது.
செவ்வாய் கிழமைகளில் பன்னீர் பாட்டிலை முருகன் கோயிலுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்து வர செவ்வாய் தோஷம் நீங்கும்.