
முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் மிக சிறப்பானதாகும். மாதம் தோறும் வருகிற சஷ்டி தினத்தன்று முருகப்பெருமானை வணங்கி விரதமிருந்து வழிபாடு செய்வது விசேஷமாக கருதப்படுகின்ற நிலையில், சஷ்டி தினங்களுக்குகெல்லாம் தலையானதாக உள்ள கந்தசஷ்டி விரதம் மிக விசேஷமாகும். கந்தசஷ்டியன்று அறுபடை வீடு அல்லது அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட வேண்டியது அனைத்தும் நிறைவேறும்.
எதற்காக கந்தசஷ்டி விரதம்?
தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு அமாவாசை, பௌர்ணமிக்கு பிறகு வருகின்ற ஆறாவது திதியான சஷ்டி உகந்ததாக உள்ளது.
சஷ்டி தினத்தில் தேய்பிறையில் வரும் சஷ்டியை விட, வளர்பிறையில் வரும் சஷ்டி மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.
அதனால்தான், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்தசஷ்டி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
ஐப்பசி சஷ்டியில் இருக்கும் விரதத்தால் குழந்தைப்பேறு மட்டுமல்ல எதிர்பார்க்கும் அனைத்து நலன்களும் கிடைக்கும்.
கந்தசஷ்டி விரதத்தை எளிமையாக வீட்டிலேயே பெண்கள் உள்பட அனைவரும் கடைபிடிக்கலாம்.
கந்தசஷ்டி விரதத்தை 6 நாட்களும் கடைபிடிக்கலாம் அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப 1, 3 என எத்தனை நாட்களானாலும் விரதமிருக்கலாம்.
6 நாட்கள் விரதமிருக்க விரும்புகிறவர்கள் இன்று முதல் விரதத்தை தொடங்க வேண்டும்.
எப்படி விரதமிருப்பது?
கந்தசஷ்டி விரதத்தை எளிமையாக கோயிலில் கடைபிடிப்பது விசேஷமானது.
அதுவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி, அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வரலாம்.
வீட்டில் உள்ள பூஜையறையில் இருக்கும் முருகன் படத்திற்கு முன்பு, நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும்.
முருகன் படம் அல்லது சிலைக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்மாலை அணிவித்து அலங்காரம் செய்து வழிபடலாம். முருகனுக்கு பிடித்தமான திணை மாவு, அவல் உணவுகளை படைக்கலாம்.
நாள் முழுவதும் விரதம் இருப்பவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம் அல்லது ஏதாவது ஒரு வேளை உணவு எடுத்துக்கொள்ளலாம்.
தினமும், கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், சண்முக கவசம் போன்ற பாடல்களை படித்து வருவது நல்லது.
மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு முறையாக செய்துவர முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
என்ன நன்மைகள்?
திருமணம் தடைபட்டு வருபவர்கள் கந்தசஷ்டி விரதமிருக்க, திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கந்தசஷ்டி விரதம் இருப்பதால், செல்வ வளம் பெருகும், வறுமை நீங்கும்.
எத்தனை பிரச்சனைகள் வந்தபோதும், கந்தசஷ்டி விரதம் இருந்தால் அவை தீர்ந்து, மன அமைதி கிடைக்கும், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
கந்தசஷ்டி விரதம் இன்று முதல் தொடங்குவதையடுத்து, முருகப்பெருமானுக்கு எப்படி விரதமிருக்க வேண்டுமென்று முருக பக்தர்கள் எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.