
ஒருவரது ஆயுளை ஆதிக்கம் செய்கின்ற கிரகமே சனி பகவானாவார். ஜாதகத்தில் ஆட்சி செய்பவராகவோ, உச்சமாகவோ இருந்தால், அவருக்கு நிச்சயம் சனி பகவான் அனைத்து செளக்கியங்களையும் வழங்கி உயர்த்துவார். அதற்கு சனி பகவானை எவ்வாறு வணங்குவது சிறப்பு என்று அறிந்திடுவோம்.
சனி பகவான்
சூரியன், சாயா தேவி ஆகியோரின் மைந்தனாகிய சனி பகவான் பெயரை கேட்டாலே பலருக்கும் உதறல் எடுக்கும்.
தேவாதி தேவர்களே, சனி பகவானை கண்டு அஞ்சி நடுங்குகிறபோது, சாதாரண மனிதர்கள் எந்த மூலைக்கு?
ஆனால், உண்மையில் சனி பகவான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை.
நீதி நேர்மை தவறாமல், ஒழுக்கத்துடன் இருப்பவர்களுக்கு அவர் என்றுமே துணையாக இருப்பார்.
சனி பகவானின் கால் சற்று ஊனமாக இருப்பதால் அவர் மெதுவாகவே செல்வார்.
எனவே, படிப்பு, வேலை போன்றவற்றில் இயல்பாகவே மந்தமாக இருப்பவர்களுக்கு சனி பகவானின் அருள் என்றும் பக்கபலமாக இருக்கும்.
சனி பகவானால் யாருக்கும் எந்த கெடுதலும் ஏற்படாமல் இருப்பதற்கு, எளிய பரிகாரங்கள் செய்து வழிபட்டாலே அவரை மகிழ்விக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சனி ஓரை தரிசனம்
கண்ட சனி, அஷ்டம சனி, ஏழரை சனி மற்றும் சனி தசா காலத்தில் இருப்பவர்கள், திருநள்ளாறு, குச்சனூர் போன்ற சனீஸ்வர பகவானின் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மையை கொடுக்கும்.
அவ்வாறு செல்ல முடியாதவர்கள் சனி ஓரை நேரத்தில் வழிபாடு செய்யலாம்.
குறிப்பாக சனிக்கிழமையன்று சனி ஓரை நேரத்தில் நவக்கிரக சந்நிதியில் உள்ள சனி பகவானை வணங்க வேண்டும்.
சனிக்கிழமை மட்டுமல்லாது, தினமும் சனி ஓரை நடைபெறும் நேரத்தில் சனீஸ்வரர் வரலாறு, சனி திருத்தலங்களின் ஸ்தல வரலாறு, சனீஸ்வர ஸ்தோத்திரங்களை படிக்கலாம். இந்த நேரத்தில் கால பைரவ வழிபாடு செய்வதும் நன்மை தரும்.
தச தீபம்
சிவன் கோயிலுக்கு எந்த நாளில் சென்றாலும், நவக்கிரக சந்நிதியில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணெய் ஊற்றி 10 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.
அவ்வாறு தீபமேற்றுவதால் தோஷங்கள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.
பைரவ வழிபாடு
கால பைரவரை தொடர்ந்து வழிபட்டு வருவதன் மூலம் சனி தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துக்கள், பிரச்சனைகள் மற்றும் வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வன்னி இலை அர்ச்சனை
சனி வழிபாட்டின்போது, வன்னி மர இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வது விசேஷமாகும்.
வன்னி இலை கொண்டு சனி பகவானை வழிபடுகையில், எதிர்பாராத ஆபத்துகள், பயணங்களின்போது ஏற்படும் விபத்துகள், திருஷ்டி தோஷங்கள் நீங்கும்.
விரோதிகளும், பொறாமை கொள்பவர்களும் தானாகவே விலகி செல்வர்.
இரத்தினங்கள்
நவரத்தினங்களில் இந்திர நீலம், நீலம் ஆகியவற்றை இடது கை நடுவிரலில் அணிவதால் சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
கச்சப ஸ்தலம்
பெருமாளின் தசாவதாரங்களில் கூர்ம அவதாரத்தை வணங்கினால் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
சென்னை மறைமலை நகருக்கு அருகிலுள்ள திருக்கச்சூரில், பெருமாள் கச்சப (கூர்ம) ரூபத்தில் சிவனாரை வழிபட்டதாக ஐதீகம்.
அதனால், இங்கு சென்று ஒருமுறை வழிபட்டால் கூட, சனி தொடர்பான தோஷங்கள் நீங்கும்.
அதேபோல், காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயிலுக்கும் சென்று வழிபட்டு வரலாம்.
பூச நட்சத்திர நாளில்
பூச நட்சத்திர தினத்தன்று மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சேவை செய்வதாலும், மருந்து தானமளிப்பதாலும் சனி தோஷம் நீங்கும்.
அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வதன் மூலமாகவும் சனி பகவானின் அருளை எளிதில் பெறலாம்.
சனி பகவானுக்கு மகிழ்ச்சியளிக்கூடிய செயல்களை செய்வதால் கிடைக்கும் நன்மைகளை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).