download_indicator

சனிக்கிழமை வழிபட வேண்டிய சக்கரத்தாழ்வார்

சங்கு, சக்கரதாரியாக காட்சியளிக்கின்ற பெருமாளின் திருக்கரங்களில் எப்போதும் வலக்கையிலே இடம் பெற்றிருப்பவரே சக்கரத்தாழ்வார் ஆவார். ஒரு சில இடங்களில் பெருமாளின் இடது கையிலும் காட்சியளிக்கின்ற சக்கரத்தாழ்வாரை வழிபட நன்மையையும், புண்ணியமும் கிடைக்கும். இந்நிலையில், சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமையன்று வழிபடுவது எதற்காக என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் அறிந்திடுவோம்.

சுதர்சன சக்கரம்

சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தமாகும்.

சுதர்சன சக்கரம் எப்போதும் சுழன்று கொண்டே இருப்பதால், பிற ஆயுதங்களைக் காட்டிலும் வலிமை வாய்ந்ததாக இருக்கும்.

மகாவிஷ்ணுவின் ஆள்காட்டி விரலில் இருக்கின்ற சுதர்சன சக்கரம், எதிரிகளை அழித்த பின்னர், பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, மீண்டும் அவரது கரங்களுக்கே வந்துவிடும்.

சுதர்சன சக்கரம் சுற்றும்போது, சப்தங்கள் எதுவும் வராது என்றும், அதன் வேகமானது விநாடிக்கு 30 கி.மீ. உள்ளது என்றும் கூறப்படுகிறது.

பெருமாளின் வலது கையை அலங்கரிக்கின்ற சக்கரத்தாழ்வார், பெருமாளுக்கு இணையானவர் என்று கூறுகின்ற வேதாந்த தேசிகர், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரை போற்றி பாடியுள்ளார்.

அதேபோல், திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும், சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று சக்கரத்தாழ்வாரை போற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த சக்கரத்தாழ்வாருக்கு, சக்கரராஜன், நேமி, திருவாழியாழ்வான், திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்று பல்வேறு பெயர்கள் உள்ளன.

பெருமாள் கோயில்கள் அனைத்திலும் தனிசன்னிதியில் அருள் புரிகின்ற சக்கரத்தாழ்வார், பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார்.

சக்கரத்தாழ்வாரை வணங்கிட பயம் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

கடன், வியாதி, எதிரி தொல்லைகள் தீரும்.

கல்வியில் ஏற்படும் தடைகள் நீங்கி, உயர்ந்த கல்வி கற்கும் யோகம் கிடைக்கும்.

எதற்காக சனிக்கிழமை?

சிவன் கோயில்களில் நவக்கிரக வழிபாடு இருப்பதால், சனிக்கிழமையன்று, பக்தர்கள் நவக்கிரகங்களை வழிபட்டு தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள்.

விஷ்ணு கோயில்களில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபடுவதன் மூலமாக நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

அதனால்தான், சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க நல்ல வளமையான வாழ்வு கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

அதையடுத்து, சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபமேற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் கூறி வணங்கிட நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம்.

எனவே, சுதர்சனருக்கு உகந்த சனிக்கிழமையன்று சிவப்பு மலர்களால் மாலை அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம் போன்ற நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாற்றி வேண்டிக்கொண்டால், இன்னல்கள் நீங்கி நிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும்.

சுதர்சனச் சக்கரத்தின் வேகம் எவ்வளவு என்பதை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on