
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி கருதப்படுகிறார். சூரியபுத்திரன், மந்தன், முடவன், ஜடாதரன், ஆயுள்காரகன் என பல பெயர்களால் அழைக்கப்படும் சனி சூரியனின் மகன் ஆவார். பொதுவாக, சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. தந்தையும், மகனுமாக இருக்கும் சூரியனும், சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனி பகவான், ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. அதையடுத்து, சனி பகவானின் தோற்றம், அவரது குணங்கள் மற்றும் வணங்கும் முறை குறித்து பார்க்கலாம்.
தோற்றம்
புரட்டாசி மாதம், சனிக்கிழமை, ரோகினி நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில், தகப்பனார் சூரிய பகவானிற்கும், தாயார் சாயா தேவிக்கும் சனிபகவான் புத்திரனாக அவதரித்தார்.
அதனால் தான் புரட்டாசி மாதம் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து அனுஷ்டிக்கிறோம்.
சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட பெருமாளை பயபக்தியுடன் வணங்கிப் போற்றுகிறோம். மேலும், விஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து எள் வந்ததாக கூறப்படுவதன் காரணமாகவே எள் சனிக்கு உகந்ததாகக் கூறப்படுகிறது.
குணங்கள்
சனி பகவான் நீதிமான், நியாயவாதி. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.
சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார்.
சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார். சனியின் வாகனம் காக்கை.
சனிக்குரிய உலோகம் இரும்பு. வஸ்திரம் கறுப்பு பூ போட்டது. நிறம் கருமை. திசை மேற்கு. தேவதை யமன், சாஸ்தா. சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை. சுவை கசப்பு ஆகும்.
வழிபாடு
சனி பகவானை நேருக்கு நேராக நின்று வணங்க கூடாது. பக்கவாட்டில் நின்று தான் வணங்க வேண்டும். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர்.
திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டு வந்தால் மிகச் சிறந்த பலன்களை தரும்.
சனிதோஷம் நீங்க சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவான் சன்னதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து, நைவேத்தியம் படைத்து சனி கவசம், அஷ்டோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவது நல்லது.
சனிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சனி பகவானை நினைத்து வழிபடுவது மிகவும் நன்மையை கொடுக்கும். சனி பகவானை வணங்கும்போது, அவரது மனைவி தாமினி மற்றும் மகன் மாந்தியை நினைத்து வழிபடுவது சிறப்பை கொடுக்கும்.
ஏழைகளுக்கு கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் கொடுப்பது சிறந்தது.
காக்கைக்கு தினந்தோறும் அன்னம், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோயில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வருவதும், சனிக்கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தரகாண்ட பாராயணம் செய்வதும் ஏழரை சனியின் தோஷத்தை குறைக்கும்.
சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும்போது, கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை தானம் அளிக்க சனிபகவான் நல்லாசி கிடைத்திடும்.