download_indicator

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்திட எப்படி தயாராவது?

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே ஊர் முழுவதும் சபரிமலை ஐயப்பனுக்கும், முருகனுக்கும் மாலையணிந்த ஐயப்ப பக்தர்களையும், முருக பக்தர்களையும் காணலாம். இந்நிலையில், நாளை கார்த்திகை மாதம் பிறக்க உள்ளதையடுத்து, ஐயப்ப பக்தர்கள் மாலையணிவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்றும், எத்தனை நாள் விரதமிருப்பது என்றும், எதற்காக இருமுடி கட்டப்படுகிறது என்றும் அறிந்திடலாம்.

எப்படி தயாராகுவது?

சபரிமலை ஐயப்பனுக்கு மாலையணியும் கன்னி சாமியாக இருந்தாலும் சரி, ஒருமுறைக்கு மேல் சென்று வந்தவராக இருந்தாலும் சரி, கார்த்திகை மாதம் பிறப்பதற்கு முதல் நாளிலேயே தயாராக இருப்பது நல்லது.

மாலையணிவதற்கு தேவையான துளசி அல்லது சந்தன மாலை (ஐயப்பன் டாலருடன்) வாங்கி, சந்தனம் பவுடர் அல்லது கட்டிகளாகவும், (சந்தன வில்லை) குங்குமம், விபூதி போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

சபரிமலைக்கு கன்னி சாமியாக செல்பவர் 2 கருப்பு வண்ண வேஷ்டி, 2 குற்றால துண்டு (ஈரத்தை எளிதாக உறிஞ்சு கொள்ளும் தன்மை வாய்ந்தது), சபரிமலைக்கு செல்வதற்கு தேவையான பொருட்கள் வைத்துக்கொள்ள ஜோல்னா பை (தொழில் தொங்கவிடும் பை) போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒருமுறைக்கு மேல் சபரிமலைக்கு செல்பவர்கள் வேஷ்டி மட்டும் கருப்பு, காவி, நீலம் போன்ற நிறங்கள் எதுவானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஐயப்பனுக்கு மாலையணிபவர்கள் ஒரு மாலை போட்டால் மட்டுமே போதுமானது, துணை மாலை போட வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

இரண்டு, மூன்று மாலை அணியும்போது அவைகள் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து முறுக்கி கொள்ளும்.

அதன் காரணமாகவே ஒரு மாலை அணிந்தால் போதுமானது என்று கூறப்படுகிறது.

கேரளாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவருமே ஒரு மாலை மட்டுமே அணிவது குறிப்பிடத்தக்கது.

எத்தனை நாள் விரதம்?

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமியை, 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை 60 நாட்கள் மாலைபோட்டு வழிபடுவது வழக்கமாக இருந்தது.

காலமாற்றத்தில் எல்லாமே மாறுவதுபோல், இந்த 60 நாட்கள் விரதமும் 48 நாட்களாகி, அதிலும் மாற்றமாகி 41 நாட்களானது.

அதன் பின்னர் தற்காலத்தில் அதிலும் மாற்றம் ஏற்பட்டு, 11 நாட்களாகவும், 7 நாட்களாகவும், 3 நாட்களாகவும் குறைந்து போனது.

தற்போது, இன்னும் விரைவாக பம்பை கன்னிமூல கணபதி சந்நிதியில் மாலை அணிவித்து, இருமுடி கட்டி கொடுக்கும் அளவிற்கு வந்துவிட்டது.

அதையடுத்து, எத்தனை நாள் விரதம் இருப்பது என்பது அவரவர் விருப்பத்தையும், நலனையும் பொறுத்தது.

எனவே, சபரிமலைக்கு மாலையணிந்து செல்வதை ஒரு சமூக அந்தஸ்தாக கருதாமல், தனிநபர், குடும்பம் மற்றும் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் கருதி 41 நாட்களாவது விரதமிருப்பது நல்லது.

மாலையணிந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று திரும்பி வரும்வரை, ஐயப்ப சுவாமி நம்முடன் இருப்பது உண்மையாகும்.

அதை அனுபவத்தில்தான் உணரமுடியும், எனவே மாலையணிந்த பிறகு, காமம், கோபம், பகை, துரோகம், நயவஞ்சகம் போன்றவற்றை துறந்து எல்லோரிடமும் அன்பாகவும், கருணையாகவும் பழகவேண்டும்.

மாலையணிந்து விரதமிருக்கும் நாட்களில் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

எதற்காக இருமுடி?

மகிஷாசூரனின் தங்கை மகிஷியை வதம் செய்வதற்காக நிகழ்ந்த மணிகண்ட அவதாரமே சுவாமி ஐயப்பனாகும்.

மகிஷியை வதம் செய்வதற்காக தேவலோகத்திற்கு மணிகண்டன் சென்று வரவேண்டி இயற்கையால் நடத்தப்பட்ட சம்பவமே, பந்தள மகாராஜாவின் மனைவி புலிப்பால் கேட்டதையடுத்து ஐயப்பன் காட்டிற்கு சென்ற நிகழ்ச்சியாகும்.

இந்நிலையில், காட்டில் உணவு கிடைக்காது என்பதால், மன்னன் ராஜசேகரன் தனது மகன் சாப்பிடுவதற்காக ஒரு துண்டை விரித்து, அதில் மணிகண்டனுக்கு பிடித்த நெய் பலகாரங்களை ஒரு பகுதியில் வைத்து கட்டினார்.

மற்றொரு பகுதியில் சிவனின் அருள் இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று கண் கொண்ட தேங்காயையும், அதனுள் விஷ்ணுவை குறிக்கும் விதமாக நெய்யையும் ஊற்றி இருமுடியாக கட்டி கொடுத்தனுப்பினார்.

இதன் அடிப்படையில்தான் சபரிமலை செல்வதற்கு இருமுடி கட்டப்படுகிறது.

மேலும், சபரிமலை ஐயப்பனை 18 படி மீது ஏறிச்சென்றுதான் தரிசிக்க முடியும்.

இந்த 18 படிகளில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதர், காளி, எமன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய 18 தெய்வங்களாக இருப்பதாக நம்பிக்கை.

மேலும், இந்த 18 படிகளும் 18 விதமான குணங்களை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

18 தேவதைகள் இந்த படிகளில் வாழ்வதாகவும், சத்திய தர்மங்கள் வடிவில் கடுத்தசாமி, கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோர் காவல் தெய்வங்களாக இந்த 18 படிகளை காத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்ல, சுவாமி ஐயப்பன் தன்னுடைய வில், வாள், வேல் கதை, அங்குசம், பரசு. பிந்திபாவம், பரிசை, குந்தகம், ஈட்டி, கைவாள், சுக்குமாந்தடி, கடுத்திவை, பாசம், சக்கரம், ஹலம், மழுக், முஸல ஆகிய 18 போர் கருவிகளை வைத்து 18 படிகளை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இந்த புனிதமான 18 படி மீது இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும், அவ்வாறு செல்பவர்கள் வாழ்க்கை சுவாமி ஐயப்பன் அருளால் வளமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

அது உண்மை என்பதாலேயே இன்று வரை ஆண்டுதோறும் சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்லும் கன்னி சாமிகள் எண்ணிக்கையும், ஐயப்ப சாமிமார்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வதை கண்கூடாக காணலாம்.

சபரிமலைக்கு செல்லும்போது இருமுடி பூஜையை வீடு, கோயில் அல்லது குருசாமி இடத்தில் நடத்தலாம்.

இருமுடி பூஜை முடிந்து சபரி மலைக்கு புறப்படும்போது, பெற்றோர் உள்பட யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக்கூடாது.

18 படியேறி ஐயப்பனை தரிசித்து வீட்டிற்கு வரும்போது, ஐயப்பனின் பிரசாதத்தை தலையில் ஏந்தியபடியே வீட்டு வாசலில் விடலை தேங்காய் உடைத்த பிறகே வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

அடுத்து ஐயப்பனுக்கு பூஜை செய்து மாலையை கழற்றி சந்தனத்தில் நனைத்து, ஐயப்பனின் திருவுருவ படத்திற்கு முன்னால் வைத்து தீபாராதனை காட்டி ஐயப்ப விரதத்தை முடித்து கொள்ளலாம்.

அதன் பிறகே ஐயப்ப சுவாமியின் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும்.

சபரிமலை ஐயப்பனுக்கு எதற்காக இருமுடி கட்டி செல்லவேண்டும் என்பதை கன்னி ஐயப்ப சாமிகள் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on