
தமிழர்களின் பெருமையை வீரம், கலை, நுண்கலை, கட்டிடக்கலை, ஆட்சி நிர்வாகம், இராணுவம், கடற்படை, சமயம், இலக்கியம், பண்பாடு என அனைத்து துறைகளிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகறிய செய்த இராஜராஜசோழ மன்னரின் ஆட்சிகாலம் சோழர்களின் பொற்காலம் என்று போற்றப்படுகின்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இராஜராஜசோழ மன்னருக்கு இன்று 1040-வது சதய விழாவையொட்டி, அவரது பெருமைகளையும், மகத்துவங்களையும் இன்றைய தலைமுறையினரும், வருங்கால சந்ததியினரும் அறிந்திட செய்யவேண்டும்.
30 ஆண்டுகள்
சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும், சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி மாதம் சதய நன்னாளில் பிறந்த இரண்டாவது மகனே இராஜராஜசோழனாவார்.
இவரது இயற்பெயர் அருண்மொழிவர்மன் என்பதாகும்.
சிறந்த சிவ பக்தனாக திகழ்ந்த இராஜராஜசோழன் 985-ஆம் ஆண்டு முதல் 1014-ஆம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்.
மேலும், சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கும் இராஜராஜசோழனே காரணமாவார்.
சிவபெருமானுக்காக மிகப்பெரிய கோயில் கட்டியபோதும், அனைத்து சமயங்களுக்கும் மதிப்பளித்துள்ளார்.
அதேபோல் தனது ஆட்சியின்கீழ் இருந்த சிற்றரசர்களும், மக்களும் தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்ற உரிமை வழங்கினார்.
எண்ணற்ற புதிய சிவன் கோயில்களை கட்டியதுடன், பாடல் பெற்ற பல கோயில்கள் கற்றளி கோயில்களாக மாற்றப்பட்டன.
சதய விழா
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சை பெரிய கோயிலை மாமன்னன் இராஜராஜ சோழன் கட்டிய பிறகு, அவரது பிறந்த நாள் மற்றும் முடிசூட்டிய நாள் சதய விழாவாக பெரிய கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 1040-வது சதய விழா 2 நாட்கள் விழாவாக அரசு சார்பாக கொண்டாடப்படுகிறது.
சதய நட்சத்திர நாளன்று இராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இந்த விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும் நடைபெறும்.
இராஜராஜேஸ்வரம்
தஞ்சை பெரிய கோயில் தமிழர் கட்டிடக்கலையின் உயர்வுக்கு சான்றாகும்.
இராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலை வெறும் 7 ஆண்டுகளில் (1003 முதல் 1010 வரை) கட்டி முடித்து இராஜராஜேஸ்வரம் என்று பெயரிட்டு சாதனை படைத்தார்.
216 அடி உயரமுடைய பெரிய கோவிலின் கட்டுமானம் குறித்து உலகளவிலான ஆய்வாளர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாதனையாக இராஜராஜ சோழன் செய்துள்ளார்.
மேலும், தமிழ் மொழியின் மீதுள்ள பற்றால் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரத்தை 12 அடியாக வைத்தார். (தமிழ் உயிர் எழுத்துக்கள் 12)
சிவ லிங்க பீடத்தின் உயரம் 18 அடி (தமிழ் மெய் எழுத்துக்கள் 18)
கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி (தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216)
சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி ஆகும். (தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247)
கருவறையில் உள்ள சிவலிங்கம் 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்டு உலகிலேயே பெரிய சிவலிங்கமாக உள்ளது.
இந்த சிவலிங்கமானது, தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டதாக கோயில் வரலாறு கூறுகிறது.
அதேபோல், இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே 13 அடி மற்றும் 16 அடியாகும்.
திருமுறைகள் மீட்பு
சமயக்குரவர்கள் பாடிய தேவாரப் பாடல்கள் அனைத்தும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஒரு அறையில் இருப்பதை அறிந்த இராஜராஜ சோழன், அவற்றை திரட்டி முறைப்படுத்த விரும்பினார்.
அதற்கு தகுதியானவர் திருநறையூரில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்பதை அறிந்து திருநறையூர் சென்று, அவரை சந்தித்து தனது எண்ணத்தை தெரிவித்தார்.
அதன் பின்னர், நம்பியாண்டார் நம்பியுடன், மன்னனும் சேர்ந்து சிதம்பரம் கோயிலுக்கு சென்று தில்லைவாழ் அந்தணர்களை சந்தித்தார்.
தேவாரம் பாடிய மூவரும் வந்தால்தான் ஏடுகளை கொடுப்போம் என்று அந்தணர்கள் கூறியதும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் உருவங்களை ஊர்வலமாக வரச்செய்து, அந்த ஏடுகளை இராஜராஜ சோழன் பெற்றார்.
இவ்வாறாக தேவாரப் பாடல்கள் மீட்கப்பட்டதற்கு இராஜராஜ சோழ மன்னன் எடுத்த முயற்சியே முக்கிய காரணமாகும்.
அதையடுத்து 1 முதல் 7 வரை திருமுறைகள் வகுக்கப்பட்டன.
தொடர்ந்து திருமுறைகளை அனைத்து சிவன் கோயில்களிலும் படிப்பதற்கு ஓதுவார்கள் அமர்த்தப்பட்டனர்.
தஞ்சை பெரிய கோயிலில் 48 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சோழ மன்னர்களில் தலை சிறந்தவராக இருந்தவர் இராஜஇராஜ சோழன் என்று எதை வைத்து கூறுகின்றனர் என்பதை அரசுப்பணிகளில் இருப்பவர்கள் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.