இராகு, கேதுவால் யாருக்கு யோகம்?

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள். இராகு-கேது இரண்டும் சாயா(நிழல்) கிரகங்கள் ஆகும். மற்ற ஏழு கிரகங்கள் போல இராகு, கேதுவிற்கு சொந்தவீடு, உச்சவீடு, நீச்சவீடு என்று கிடையாது. ஆனாலும் இவர்களுக்கு உச்சவீடு இருப்பதாக சில தகவல்கள் உள்ளன. அதே நேரத்தில் இராகு-கேதுவிற்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு. இராகு, கேது இருவரும் அவர்கள் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கிறார்களோ அந்த கிரகத்தின் தன்மையை பிரதிபலிப்பார்கள். அவர்கள் எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்த நட்சத்திர கிரகத்திற்கு ஏற்ப பல பலன்களை தருவார்கள். அதோடு மட்டும் அல்லாமல் அவர்களுடன் சேர்ந்த கிரகம், அவர்களைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் பலன்களையும் சேர்த்துத் தருவார்கள். பொதுவாக சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்தால் சுக்கிரனின் அம்சமாக பலன்களைத் தருவார்கள். சந்திரனின் வீடான கடகத்தில் இருந்தால் சந்திரனின் பலன்களைத் தருவார்கள். அதுபோல, எப்போதுமே இராகு இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் இடத்தில் கேது இருப்பார். இதை அனைவரது ஜாதகத்திலும் நாம் கவனிக்கலாம்.

இராகு, கேதுக்கள் எந்தெந்த இடங்களில் இருந்தால் என்ன தோஷங்கள், யோகங்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

யோகங்கள்

குருவுடன், கேது சேர்ந்து எந்த இடத்தில் இருந்தாலும் அந்த ஜாதகரின் செல்வ நிலை உயரும்.

இராகு, கேதுக்கள் கால சர்ப்ப யோகத்தையும் தரக்கூடியவர்கள். லக்கினத்திற்கு 3, 5, 6, 9, 10, 11 வீடுகளில் உள்ள இராகு, கேது காலசர்ப்ப இராஜ யோகத்தை தருவார்கள். திடீர் தனயோகம், பட்டம், பதவி, எதிர்பாராத வளர்ச்சி, உழைப்பின்றியே செல்வம், திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றை தருவதில் இராகு, கேதுவிற்கு நிகர் யாருமில்லை.

லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் கடகம் அல்லது மகர இராசியாக இருந்து அதில் இராகுவோ, கேதுவோ இருந்தால் ஏட்டுக்கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும், புத்தி சாதுர்யமும் வெளிப்படும்.

மேஷம், ரிஷபம், கன்னி இராசிகளில் இருக்கும் இராகு-கேது சிறப்பான பலன்களை தருவார்கள். மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள் அவசியம். ஏனென்றால் கேதுதான் மருத்துவ கிரகம். மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்க, மருந்துக்கடை, ஸ்கேன் சென்டர், லேப் போன்ற தொழில்கள் தொடங்க கேதுவின் அருள் இல்லாமல் இத்துறையில் நுழைய முடியாது.

தோஷங்கள்

லக்கினத்தில் இராகு அல்லது கேது இருந்தால் அது களத்திர தோஷத்தை தரும். இதனால் திருமணம் தாமதம் ஆகும். இதனை சிலர் சர்ப்ப தோஷம் என்று கூறுவர். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதுபோன்ற அமைப்பு உள்ள ஜாதகத்துடன் தான் சேர்க்க வேண்டும்.

இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இவர்களில் யாரேனும் ஒருவர் இருந்தால் திருமண தோஷத்தைத் தருவார்கள். அது மட்டும் அல்ல அந்த ஜாதகருக்கு பேச்சில் இனிமை இருக்காது. தான் போன போக்கில் போய் கொண்டிருப்பார்கள். எவர் பேச்சிற்கும் மதிப்பு அளிக்க மாட்டார்கள்.

பெண்கள் ஜாதகத்தில் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் இராகு, கேதுக்கள் இருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும்.

ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில் இராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷத்தைத் தருவார்கள். சிலருக்கு பெண் குழந்தைகள் கூட வரிசையாக பிறக்க வாய்ப்பு உண்டு. அதாவது ஆண் வாரிசு இல்லாமல் போகலாம்.

பரிகாரங்கள்

பஞ்சமி திதியன்று புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று புற்றுக்கு பால் வார்த்து வழிபடலாம். அத்துடன் அம்மன் சந்நதியில் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கோயிலில் பக்தர்களுக்கு உளுந்துவடை விநியோகம் செய்யலாம்.

கேது தோஷம் நீங்க ஏழு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அபிஷேக, அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வணங்கலாம். கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்பானதாகும்.

இராகு தோஷம் நீங்க சிவ துர்க்கைக்கு அரளி பூ சாற்றி குங்கும அர்ச்சனையை இராகு காலத்தில் செய்து வரலாம்.

ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் சர்வ தோஷ நிவாரணம் உண்டு. வெள்ளிக் கம்பியில் உளுந்துவடை மாலை கோத்து பைரவருக்கு அணிவிக்கலாம்.

இராகு, கேது தோஷம் இருக்கும் பட்சத்தில் காளஹஸ்தி சென்று சிவ பெருமானுக்கு பச்சை கற்பூர அபிஷேகம் செய்யலாம். மேலும் இராகு கால பூஜையில் கலந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு தனியாக கோயில் உள்ளது. இங்கு கேதுவிற்கு பரிகாரம் செய்யலாம்.

(ராகு கேதுவால் யோகம் யாருக்கெல்லாம் இருக்கிறது என்பதை அறிய மற்றவர்களுக்கும் இந்த கட்டுரையை அனுப்பி மகிழுங்கள்)



Follow Us on