
பொன்னாங்கண்ணி கீரை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வளர்க்கப்படும் நீர்வாழ் தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் ஆல்டர்னாந்தெரா செசிலிஸ் என்பது டோமராந்தேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. பொன்னாங்கண்ணி என்பது ஒரு வற்றாத மூலிகையாகும். பொன்னாங்கண்ணி கீரையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நாட்டுப் பொன்னாங்கண்ணி எனப்படும் பச்சை இலைகளுடனும் மற்றொன்று சீமை பொன்னாங்கண்ணி எனப்படும் இளஞ்சிவப்பு இலைகளுடனும் இருக்கும். இரண்டு வகைகளின் நன்மைகளும் பெரிய அளவில் ஒரே மாதிரியாக இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணி மிகச்சிறந்தது. பொன்னாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
நன்மைகள்
பொன்னாங்கண்ணியில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, தாது சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்து (கால்சியம்), பாஸ்பரஸ், புரதம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால் கண் வீக்கம் மற்றும் பார்வைக் குறைபாடு போன்ற அனைத்து கண் சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்தும் குணமாக வாய்ப்புள்ளது. இதனால் பார்வைத்திறன் மேம்படும்.
பொன்னாங்கண்ணி கீரையை வதக்கி வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரவு குருட்டுத்தன்மை மற்றும் பிற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயை உச்சந்தலையில் தேய்த்து சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் உடல் சூட்டை குறைத்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இது முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
பொன்னாங்கண்ணி கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் குணமாவதாக கூறப்படுகிறது.
பொன்னாங்கண்ணி சாறு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வலிமையும், சக்தியும் அதிகரிக்கக்கூடும். பசும்பாலுக்கு பதிலாக ஆட்டுப்பாலையும் பயன்படுத்தலாம்.
தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் பொன்னாங்கண்ணி இலை சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் மட்டம் மேம்படும்.
பொன்னாங்கண்ணி சாறுடன் ஒன்று அல்லது இரண்டு பூண்டுப் பற்களை சேர்த்து இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் இடைவிடாத காய்ச்சல், தொடர் இருமல், ஆஸ்துமா குணமாகக்கூடும்..
பாலூட்டும் தாய்மார்கள் சமைத்த பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வந்தால் அவர்களின் கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன் தாய்ப்பாலை மேம்படுத்த உதவுகிறது.
எடை குறைந்தவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை துவரம் பருப்பு, நெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்க உதவும். இதை நீங்கள் சூப் போல சாப்பிடலாம் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
காய்ந்த (பொடி செய்யப்பட்ட) இலைகளின் வாசனையை உள்ளிழுக்கும்போது, அது தலைவலி மற்றும் தலைச்சுற்றலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.