download_indicator

பொங்கல் திருநாளை எப்படி கொண்டாடுவது?

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் கொண்டாட்டம் பற்றி இன்றைய தலைமுறையினர்களுக்கு அதிகம் தெரியாமல் உள்ளது. அதையடுத்து, பொங்கல் விழாவை எப்படி கொண்டாடுவது என்று அறிந்திடலாம்.

எதற்காக தை பொங்கல்?

தமிழர் திருநாள் என்று கூறப்படுகிற தை பொங்கல் பண்டிகையை, எதற்காக தை மாதத்தில் முன்னோர்கள் வைத்துள்ளனர்.

தமிழ் மாதங்களில் மற்ற மாதங்களுக்கு இல்லாத சிறப்பு தை மாதத்தில் என்ன இருக்கிறது?

பண்டைய காலத்தில் மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே இருந்துள்ளது.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

மேலும், பெரும்பாலான விவசாயிகள் மழை நீரை நம்பித்தான் மானாவாரி விவசாயம் செய்துள்ளனர்.

நீர் வளமில்லாத இடங்களில் மழை நீர் தேக்கத்தால், ஆண்டிற்கு ஒரு வேளாண்மைதான் செய்யமுடியும்.

அதனால், மார்கழி அல்லது தை மாதத்தில் நாடெங்கும் அறுவடை நிகழும்.

அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை கொண்டு, விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாகவே, தை மாதத்தின் முதல் நாளன்று பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் அனைவரும் ஓய்வாக இருப்பதால், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன் கலந்துகொள்ள முடியும்.

இது போன்ற காரணங்களாலே தை மாதத்தில் பொங்கல் திருநாளை கொண்டாடியுள்ளனர்.

எப்படி கொண்டாடுவது?

தை பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பே பொங்கலுக்கு தேவையான புதுப்பானை, புது அடுப்பு, புத்தாடை போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

தை பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து, வீட்டு முற்றத்தில் கோலம் போட்டு அதன் நடுவில் புதிய பானையை வைக்க வேண்டும்.

பொங்கல் வைப்பதற்கு தேவையான பானை, அடுப்பு, விறகு, அரிசி, காய்கறி, கரும்பு அனைத்தும் புதியதாகவே இருக்க வேண்டும்.

முற்றத்தில் கோலமிட்டு வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி சூரியனை நினைத்து பொங்கலிடத் தொடங்குவது நல்லது.

அறுவடையில் கிடைத்த அரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்ற காய்கறிகளையும் படையல் செய்யவேண்டும்.

புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிந்து, புதுப்பானையில் புத்தரிசியுடன் சர்க்கரை, பால், நெய் சேர்த்து கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பொங்கல் பானையில், வெண்நுரை தள்ளி பொங்கல் பொங்கி வருகையில், அனைவரும் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று கூறி சூரிய வழிபாடு செய்யவேண்டும்.

அதன் பின்னர் குடும்பத்தினர், உறவினர், பணியாளர்கள் என அனைவருக்கும் பொங்கல் வழங்கி சாப்பிடுவதே தமிழர்களின் பண்பாடாகும்.

தை பொங்கல் தினத்தன்று பொங்கல் பானை, எரிகிற அடுப்பு முதல் அனைத்தும் புதியதாக இருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on