
தேவர்களின் குருவாக திகழ்வது பிரகஸ்பதி என்பது அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கும். ஆனால், முப்பது முக்கோடி தேவர்களின் குருவாக திகழ்கின்ற பிரகஸ்பதிக்கு அத்தகைய ஆற்றலும், சக்தியும் எப்படி கிடைத்தது, எங்கே, யாரால் அவருக்கு அவ்வளவு பெரிய பட்டம், பதவி கிடைத்தது என்று பலருக்கும் தெரியாது. அதையடுத்து, அது எந்த ஸ்தலம் என்றும், அதன் சிறப்பு குறித்தும் அறிந்திடலாம்.
எங்கு கிடைத்தது?
தஞ்சாவூரில் இருந்து திருகருக்காவூர் செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ள திட்டை என்னும் ஊரில்தான், பிரகஸ்பதிக்கு தேவகுரு என்னும் பட்டம், பதவி கிடைத்தது.
இராமனின் குல குருவான வசிஷ்டர் இங்கு வந்து வழிபட்டதன் காரணமாக இங்குள்ள இறைவனுக்கு வசிஷ்டேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
சூரியனும் இங்கு இறைவனை வழிபட்டதன் அடையாளமாக ஆண்டிற்கு இரண்டு முறையாக, ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.
ஒரு சமயம் பிரளயத்தின்போது, பூலோகத்தில் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கின.
ஆனால், சீர்காழியும், திட்டையும் மட்டும் நீரில் ழூழ்கவில்லை.
திட்டை என்றால் மேடு என்று பொருள்படும் வகையில், சீர்காழி வட திட்டை என்றும், திட்டை தென் திட்டை என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டையில் வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கும் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்.
எப்படி கிடைத்தது?
முனிவர்களில் தலைசிறந்தவரான ஆங்கீரஸ முனிவரின் மகனாகிய பிரகஸ்பதிக்கு, அவரது தந்தையே குருவாக இருந்து அனைத்து வேதங்களையும், கலைகளையும் கற்று கொடுத்தார்.
அப்போது ஒரு நாள் பிரகஸ்பதி தனது தந்தையிடம், உயர்வான பதவி அடைவதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்.
அதற்கு ஆங்கிரஸ முனிவரும் பதில் கூறுகையில், சிவபெருமானை குறித்து திட்டை ஸ்தலத்திற்கு சென்று தவம் செய்தால் வேண்டியதை பெற்றிடலாம் என்று கூறினார்.
அதன்படி பிரகஸ்பதி கடும் தவம் செய்ததை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு காட்சியளித்து நவக்கிரகங்களில் ஒருவராக வியாழன் என்னும் கிரக பதவியளித்தார்.
மேலும், தேவர்களுக்கு குரு எனும் உயர்ந்த நிலையை கொடுத்து, ஒருவருக்கு தலைமைப் பதவி, அதிகாரம், செல்வம், கல்வி, ஒழுக்கம், திருமணம் போன்றவற்றை வழங்கும் அதிகாரத்தை கொடுத்தார்.
குரு பார்வை கிடைத்தால் சுபகாரியம் நடைபெறும் என்றும் அருள்புரிந்தார்.
இங்கு குரு பகவான் 4 கரங்களுடன் காணப்படுவது தனிசிறப்பாகும்.
சிறப்பு
வசிஷ்டேஸ்வரர் கருவறையின் உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக்கல் இருப்பதன் காரணமாக, ஒரு நாழிகைக்கு ஒரு முறை அதாவது 24 நிமிடத்திற்கு ஒருமுறை இறைவன்மீது எப்போதும் ஒரு சொட்டு நீர் இறைவன்மீது விழுந்து கொண்டிருக்கிறது.
காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அதிலிருந்து ஒரு சொட்டு நீரை வெளியிடும் ஆற்றல் இந்த சந்திர காந்தக்கல்லுக்கு இருப்பது அதிசயமாகும்.
இதுபோன்று, சிவலிங்கத்திற்கு மேலே வேறு எங்கும் சந்திர காந்தக்கல் கிடையாது.
பிரம்மஹத்தி தோஷத்தினால் பாதிப்படைந்த பைரவர் திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார்.
அதையடுத்து சிவபெருமானும், பைரவருக்கு காட்சியளித்து திட்டை ஸ்தலத்தின் கால பைரவனாக எழுந்தருளி, உன்னை வழிபடுவோருக்கு அருள் செய்வாய் என்று கூறினார்.
அன்றுமுதல் இத்தலம் பைரவர் ஸ்தலமாக உள்ளது.
எனவே, சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.
இக்கோயிலில் உள்ள கொடி மரம், விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் வேறு எங்குமில்லாத வகையில் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது
பெருஞ்சேரி
மயிலாடுதுறை அருகில் உள்ள பெருஞ்சேரியில் வியாழன் தவமிருந்து இறைவனிடமிருந்து வாக்கும், மெய்ஞ்ஞானமும் பெற்றார்.
அதையடுத்து மார்கழி மாதம், பூச நட்சத்திரம், வியாழக்கிழமை ஆகிய மூன்றும் இணைந்த நன்னாளில், தேவர்களுக்கெல்லாம் குருவாக வியாழனை, சிவபெருமான் இத்தலத்தில் நியமித்தார் என்றும் கூறப்படுகிறது.
வியாழன் தேவகுருவாக பதவி பெற்ற தலம் என்பதால் சிறந்த குரு பரிகாரத் தலமாக இதனை கூறுகின்றனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை ஊரின் சிறப்புகளை உங்கள் நண்பர்கள் எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.