
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு, ஊமை இல்லாமல் பிறப்பது என்று ஒவையார் பாடினார். இந்நிலையில், பிறக்கும்போதே வாய்பேசும் திறனின்றி பிறந்த குழந்தைக்கு எந்த ஊரில் பேசும் திறனை முருகன் வழங்கினார் என்று அறிந்திடலாம்.
வைகுண்டத்தில் கைலாயம்
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள மாவட்டங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி நதிக்கரையில் பல திருத்தலங்கள் உள்ளன.
அதில் வடகரையில் உள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊருக்கு அருகில் ஸ்ரீகைலாயம் என்ற கிராமம் உள்ளது .
இங்கு வாழ்ந்து வந்த சண்முக சிகாமணி, சிவகாம சுந்தரி என்ற தம்பதியருக்கு, நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், முருகனருளால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததே என்று மிகுந்த சந்தோஷமடைந்த தம்பதியருக்கு, விரைவில் பெரும் சோகம் ஏற்பட்டது.
குழந்தையின் மழலை மொழி கேட்டு ஆனந்தமும், மகிழ்ச்சியும் பெறவேண்டிய தம்பதியர், தங்கள் குழந்தைக்கு பேச்சுதிறன் இல்லாதது கண்டு பெரும் வருத்தமடைந்தனர்.
பேசும்திறன்
5 வயது வரையிலும் பேச்சுத்திறன் வராததையடுத்து, தங்களுக்கு குழந்தைப்பேறு கொடுத்த திருச்செந்தூர் முருகனிடமே குழந்தையை தூக்கி சென்றனர்.
குழந்தையின் வாய்பேச முடியாதநிலை நீங்கிட வேண்டி, செந்தில் ஆண்டவன் திருவடிகளிலேயே தம்பதியர்கள் தஞ்சமடைந்தனர், தங்கள் குழந்தைக்கு முருகன்தான் பேசும் திறனை கொடுக்கவேண்டும், இல்லையெனில், குழந்தையுடன் கடலில் விழுந்து இறந்துவிடுவோம் என்று சபதம் செய்து 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) விரதமிருக்கத் தொடங்கினர்.
48-வது நாள் அதிகாலையில் திருச்செந்தூர் முருகன், குழந்தையை பார்த்து குமரகுருபரா எழுந்திரு என்று கூறி, தனது திருவடிகளை குமரகுருபரரின் தலைமீது சூட்டினார்.
மேலும், அவரது நாவில் தனது வேலால் சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை எழுதி, குமரகுருவுக்கு பேசும்திறனை வழங்கினார்.
கந்தர் கலிவெண்பா
அதையடுத்து, அந்த அதிகாலை பொழுது அம்மா, அப்பா என்று குழந்தை அழைத்த குரல்கேட்டு கண் விழித்த தம்பதியர், தங்கள் வாழ்வில் முருகன் கண் திறந்து அருள் புரிந்து விட்டான் என்று பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
உடனடியாக முருகன் சந்நிதிக்கு அவர்கள் சென்றபோது, விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, முருகனின் தோளிலிருத்து ஒரு பூ விழுந்ததை கண்ட குமரகுருபரர் 'பூமேவு செங்கமலப் புத்தேளும்' என்று தொடங்கும் 'கந்தர் கலிவெண்பா' எனும் பாமாலை சூட்டினார்.
அதையடுத்து, சில நாட்கள் திருச்செந்தூரில் தங்கியிருந்த பிறகு தங்கள் ஊரான கைலாயத்திற்கு சென்றனர்.
முருகப்பெருமான் அருள் பெற்ற குமரகுருபரர் விரைவில் இலக்கண, இலக்கியங்களை கற்று தமது ஊரில் அருள்புரியும் ஸ்ரீகைலாசநாதர் மீது 'கயிலைக் கலம்பகம்' என்னும் பிரபந்தம் இயற்றினார்.
அதன் பிறகு மதுரை சென்று அன்னை மீனாட்சியை தரிசித்து, மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடி சிறப்பித்தார்.
5 வயது வரை வாய்பேச முடியாமல் இருந்த குமரகுருபரருக்கு, முருகன் பேச்சுத்திறனை வழங்கியபோது, அவரது நாவில் வேலால் ஆறெழுத்து மந்திரம் எழுதியதை எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.