
அடியார்களுக்கு சிவபெருமான் உபதேசம் செய்த ஸ்தலங்களாக பல்வேறு சிவன் கோயில்கள் உள்ளன. அதன்படி மாணிக்கவாசகர், சுந்தரர் போன்ற அடியார்களுக்கு சிவபெருமானே நேரில் உபதேசம் செய்திருக்கும் நிலையில், அன்னை பார்வதி தேவிக்கு சிவபெருமான் எங்கெங்கே உபதேசம் செய்துள்ளார் என்று அறிந்திடலாம்.
எதற்காக உபதேசம்?
அன்னை பார்வதி தேவி கேட்டுக்கொண்டதன் பேரில், கைலாயத்தில் ஒருமுறை "ஓம்" என்ற பிரணவ மந்திரத்திற்கான விளக்கத்தை சிவபெருமான் கூறிக்கொண்டிருந்தார்.
அப்போது, அன்னையின் கவனம் திசைமாறியதால் வேதமந்திரங்களை கற்கும்போது கவனமின்றி இருக்கக்கூடாது.
அவ்வாறிருப்பது வேதத்தை அவமரியாதை செய்வது போலாகும் என்று கடும் கோபத்துடன் கூறிய சிவபெருமான், அன்னை பார்வதியை பூலோகம் சென்று மானிடப்பிறவி எடுப்பாய் என்று சாபம் விடுத்தார்.
அதையடுத்து, தனது தவறுக்கு வருந்திய பார்வதி தேவி, பூலோகத்தில் தனக்கு உபதேசம் செய்து இறைவன் ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.
சிவபெருமானும், நீ பூலோகத்திற்கு சென்று தவம் செய்து கொண்டிரு, தக்கநேரத்தில் நேரில் வந்து தான் உபதேசம் செய்வதாக கூறினார்.
எங்கெங்கே?
அதன்படி பூலோகத்திற்கு வந்த பார்வதிதேவி ஓமாப்புலியூரில் தங்கி சிவனை நினைத்து இலந்தை மர அடியில் கடுந்தவம் செய்தாள்.
பார்வதியின் தவத்தைக்கண்டு மகிழ்ந்த இறைவன், தட்சிணாமூர்த்தி வடிவில் பார்வதிதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை இங்கு உபதேசித்தார்.
அதேபோல், மற்றொரு முறை பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அன்னை பார்வதி அகிலாண்டேஸ்வரி ரூபம் கொண்டு நாவல் மரத்தின் கீழ் அமர்ந்து தீவிர தவத்தில் ஈடுபட்டார்.
வழிபாட்டிற்காக சிவலிங்கம் அமைக்க விரும்பிய அன்னை, இந்த ஸ்தலத்திற்கு அருகே ஓடும் காவேரியிலிருந்து நீர் எடுத்து லிங்கம் வடித்தார்.
தேவியின் கைகளில் இருந்து வழிந்த நீர் லிங்கமாக மாறியது.
அன்னையின் தவத்தில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் பார்வதி தேவிக்கு தரிசனம் வழங்கி சிவ ஞானத்தை உபதேசம் செய்ததாக ஸ்தல வரலாறு கூறுகின்றது.
திருஉத்திரகோசமங்கை
மேற்கண்ட 2 ஸ்தலங்கள் தவிர இன்னொரு ஸ்தலத்திலும் சிவபெருமான், அன்னைக்கு வேதங்களின் இரகசியத்தை உபதேசம் செய்துள்ளார்.
வேதாகமங்களின் இரகசியங்களை சிவபெருமான், அன்னைக்கு உபதேசம் செய்ததால், அதன் பெயரிலேயே திருஉத்திரகோசமங்கை என்று அழைக்கப்படுகின்றது.
இராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள திருஉத்திரகோசமங்கை திருத்தலம், இராமாயண காலத்திற்கும் முற்பட்ட கோயில் என்று கூறப்படுகின்றது.
சிவபெருமான் எதற்காக, உத்தரகோசமங்கை, திருவானைக்காவல் போன்ற இடங்களில் பார்வதி தேவிக்கு உபதேசம் செய்தார் என்பதை உங்கள் வாழ்க்கை துணைவர் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.