
இறைவனின் புகழைப்பாடும் வேதங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதுபோல், ஆழ்வார்கள் பாடிய தமிழ் பாசுரங்களைக்கேட்டு இறைவன் ஆனந்தமாக இருக்கிறானாம். அதுவும், இசைநயத்துடன் தாளம் தப்பாமல் அரையர்கள் பாடும்போது பகவான் விஷ்ணு தன்னையே மறந்து விடுவதாக ஐதீகம். அந்தளவிற்கு இறைவனை தமிழ் பாடல்களால் கட்டிப்போடும் திறனுடைய ஆழ்வார்களை பற்றியும், அவர்களது சிறப்புகள் பற்றியும் அறிந்திடலாம்.
ஆழ்வார்கள்
வைஷ்ணவத்தில் பெருமாளுக்கு இணையாக கருதப்படுகின்ற ஆழ்வார்கள், பெருமாளை சரணடைந்து, ஆழ்ந்த பக்தியுடன், தமிழ் பாசுரங்களால் பெருமாளை பாடியவர்கள்.
ஆழ்வார்களின் பாடல்களுக்கு மயங்கி பெருமாளே கட்டுப்பட்டதாகவும், ஆழ்வார்கள் எங்கு சென்றாலும், பெருமாளும் அந்த இடத்திற்கு தேடி செல்வார் என்றும் கூறப்படுகிறது.
12 ஆழ்வார்களும் பாடிய பாடல்களின் தொகுப்பிற்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று பெயராகும்.
சைவ சமயத்தில் 63 நாயன்மார்கள் இருப்பினும், சமயக்குரவர்கள் என்று அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பேரை கூறுவர்.
அதேபோன்று வைஷ்ணவத்திலும் 12 ஆழ்வார்கள் இருப்பினும், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூன்று பேரை முதல் மூவர் என்று கூறுவர்.
ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், மதுரகவி ஆழ்வார், திருப்பாணாழ்வார் என ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் உள்ளனர்.
சிறப்புகள்
முதல் ஆழ்வார்கள் என்று சொல்லப்படுகின்ற பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் தாயின் வயிற்றில் பிறக்காமல் தானாகவே தோன்றியவர்கள்.
இவர்கள் இறைவனால் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்பது சிறப்பாகும்.
பன்னிரு ஆழ்வார்களில், மதுரகவி ஆழ்வார் மட்டும் இறைவனைப் பாடாமல் நம்மாழ்வார் குறித்து பாசுரங்கள் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பை பெறும் பொய்கையாழ்வார், காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்னுமிடத்தில் உள்ள பொய்கையில் தோன்றியவராவார்.
பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்.
பெருமாள் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாகத் தோன்றியவராக கருதப்படுகிறார்.
பெருமாளின் பத்து அவதாரங்களையும் இவரே முதலில் சிறப்பித்துப் பாடியவராவார், இவர் 108 திவ்ய தேசங்களில் மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து 6 கோயில்கள் பற்றி மங்களாசனம் செய்துள்ளார்.
பெருமாள் கையில் உள்ள கௌமோதகி என்ற கதையின் அம்சமாக அவதரித்த பூதத்தாழ்வார் , மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோயிலில் மல்லிகை புதர்களுக்கிடையே நீலோத்பவ மலரின் நடுவில் தோன்றியவராவார். இவர் மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து 14 கோயில்களை மங்களாசனம் செய்துள்ளார்.
பெருமாளின் நந்தகம் என்னும் வாளின் அம்சமாகத் தோன்றிய பேயாழ்வார் , மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் செவ்வல்லி மலரில் தோன்றியவர் என்று கருதப்படுகிறார்.
இவர் தனியாக 1 கோயிலிலும், மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து 11 கோயில்களிலும் மங்களாசனம் செய்துள்ளார்.
பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசை என்னும் இடத்தில் பெருமாளுடைய சக்கரத்தின் அம்சமாக பிறந்தவரே திருமழிசை ஆழ்வார் .
சிவபெருமானை வணங்கி வந்த இவரை பேயாழ்வார்தான், வைஷ்ணவத்திற்கு மாற்றினார்.
மூதாட்டியாக இருந்த பெண்ணை, பெருமாள் சேவைக்காக இளமை வடிவை கொடுத்தவராவார்.
சீடனுக்காக ஊரை விட்டு செல்லும்போது, பெருமாளையும் அந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று கூறி தன்னுடன் வரச்செய்த பெருமையுடையவர்.
இவர் தனியாக 2 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து 11 கோயில்களையும் மங்களாசனம் செய்துள்ளார்.
சடகோபன் என்றழைக்கப்படும் நம்மாழ்வார், திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார்.
பெருமாளின் படைத்தலைவரான விஷ்வக்னேசர் என்பவரின் அவதாரமாகக் கருதப்படுகிற நம்மாழ்வார், 37 திருக்கோயில்களை மங்களாசனம் செய்துள்ளார்.
பெருமாளின் கையிலுள்ள சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாக கருதப்படுகிற திருமங்கையாழ்வார் திருக்குரையலூர் என்னும் ஊரில் பிறந்தார்.
மனைவியுடன் காட்சியளிக்கும் இவர் 46 கோயில்களைத் தனியாகவும், பிற ஆழ்வார்களுடன் இணைந்து 36 கோயில்களுமாக மொத்தம் 82 கோயில்களை மங்களானம் செய்துள்ளார்.
ஆழ்வார்களிள் இவர்தான், அதிக கோயில்களை மங்களாசனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேர நாட்டு அரசன்
திருவஞ்சிக்களம் என்னும் ஊரை சேர்ந்த சேர நாட்டு அரசனாகிய குலசேகர ஆழ்வார் , பெருமாளின் மார்பில் இருக்கும் கௌஸ்துப மணி அம்சத்தின் வடிவாக தோன்றியவராவார்.
இவர் தனியாக 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 7 கோயில்களையும் மங்களாசனம் செய்துள்ளார்.
கருடாழ்வாரின் அம்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றியவராக கருதப்படுகிற பெரியாழ்வார் , பெருமாளுக்கு மாமனார் என்ற அந்தஸ்தை பெற்றார்.
மதுரையில் ஒரு சமயம் பொதுமக்கள் முன்னிலையில், கருட வாகனத்தில் பெருமாள் காட்சியளித்தார்.
அதைக்கண்ட பெரியாழ்வார், பெருமாளுக்கே கண் திருஷ்டி ஏற்பட்டு விடும் எனக்கருதி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு எனத் தொடங்கும் திருப்பல்லாண்டு பாடியாவராவார்.
இவர் தனியாக 2 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோயில்களையும் மங்களாசனம் செய்துள்ளார்.
பூமா தேவியின் அம்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் , பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாக வளர்ந்து, இறைவன் மீதான தீவிர பக்தியால் இறைவனையே காதலித்து மணந்தாள்.
ஸ்ரீரங்கத்தில் இறைவனின் கருவறைக்குள் சென்ற ஆண்டாள், அப்படியே எல்லோரும் பார்த்திருக்க இறைவனுடன் ஐக்கியமானாள்.
சூடிக்கொடுத்த சுடர் கொடியாள், கோதை நாச்சியார் என்றழைக்கப்படுகின்ற ஆண்டாள் பாடிய பாடல்கள் நாச்சியார் திருமொழி, திருப்பாவை எனப்படுகின்றன. இவர் பிற ஆழ்வார்களுடன் இணைந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசனம் செய்துள்ளார்.
தொண்டர்களின் காலடி மண்
பெருமாள் தொண்டர்களின் காலடி மண்ணை தலைமேல் வைத்துக் கொண்டதால் தொண்டரடிப் பொடியாழ்வார் என்றழைக்கப்பட்ட இவர், பிற ஆழ்வார்களுடன் இணைந்து 2 கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார். இவருக்காக, கோயில் வட்டிலையே அரங்கன் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.
திருக்கோளுர் என்ற இடத்தில் பிறந்த மதுரகவி ஆழ்வார் , நம்மாழ்வாரை குருவாக ஏற்றுக்கொண்டு, கண்ணிநுன் சிறுதாம்பு என்ற பதிகத்தை மட்டும் நம்மாழ்வார் மீது பாடியுள்ளார்.
பெருமாளின் மார்பில் உள்ள மருவான ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாக திருச்சி உறையூரில் பாணர் குலத்தில் தோன்றியவரே திருப்பாணாழ்வார் .
தாழ்ந்த குலத்தார் என்பதற்காக இவரை கல்லால் தாக்கிய அர்ச்சகரையே, அவர் தோள்மீது அமர வைத்து கோயிலுக்குள் அழைத்துவர செய்து பெருமை செய்தார் பெருமாள்.
இறைவன் முன் அனைவரும் சமம் என்ற உண்மையை இவர் மூலமாக உலகிற்கு அறிவித்த இறைவனுடன், தனது பூத உடலோடு திருப்பாணாழ்வார் இரண்டறக் கலந்தார். இவர் பிற ஆழ்வார்களுடன் இணைந்து 3 கோயில்களை மங்களாசனம் செய்துள்ளார்.
தாயின் வயிற்றில் பிறக்காமல் தானாகவே தோன்றிய ஆழ்வார்கள் யாரென்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள்.