பஞ்சாங்கம் விளக்கமும், தத்துவமும்!
பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் கால அட்டவணை என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் எனப்படும். இந்த பஞ்சாங்கம் ஐந்து உறுப்புகளைக் (Elements) கொண்டது. அவை 1. வாரம் 2. திதி 3. கரணம் 4. நட்சத்திரம் 5. யோகம் ஆகியனவாகும். பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிடம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.
திருக்கணித பஞ்சாங்கம்
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வபோது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு. திருக்கணிதப் பஞ்சாங்கத்தில், ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கனிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம் என பல்வேறு புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்கள் உள்ளன.
வாக்கிய பஞ்சாங்கம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. அதில், ஆற்காடு ஸ்ரீ சீதாராமைய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், இராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும். இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
பஞ்சாங்கத்தின் உறுப்புகளும், விளக்கங்களும்
வாரம்
வாரம் என்பது ஞாயிறு முதல் சனி முடிய காணப்படும் ஏழு நாட்கள் (ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி) ஆகும்.
திதி
திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வளர்பிறை வரும் வரையில் 15 திதிகளும், பெளர்ணமி தொடங்கி மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டு இருக்கும். சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன,
அதன் 30 பெயர்கள் வருமாறு
1. அமாவாசை 2. பிரதமை (வளர்பிறை) 3. துதியை (வளர்பிறை) 4. திருதியை (வளர்பிறை) 5. சதுர்த்தி (வளர்பிறை) 6. பஞ்சமி (வளர்பிறை) 7. சஷ்டி (வளர்பிறை) 8. சப்தமி (வளர்பிறை) 9. அஷ்டமி (வளர்பிறை) 10. நவமி (வளர்பிறை) 11. தசமி (வளர்பிறை) 12. ஏகாதசி (வளர்பிறை) 13. துவாதசி (வளர்பிறை) 14. திரயோதசி (வளர்பிறை) 15. சதுர்த்தசி (வளர்பிறை) 16. பெளர்ணமி 17. பிரதமை (தேய்பிறை) 18. துதியை (தேய்பிறை) 19. திருதியை (தேய்பிறை) 20. சதுர்த்தி (தேய்பிறை) 21. பஞ்சமி (தேய்பிறை) 22. சஷ்டி (தேய்பிறை) 23. சப்தமி (தேய்பிறை) 24. அஷ்டமி (தேய்பிறை) 25. நவமி (தேய்பிறை) 26. தசமி (தேய்பிறை) 27. ஏகாதசி (தேய்பிறை) 28. துவாதசி (தேய்பிறை) 29. திரயோதசி (தேய்பிறை) 30. சதுர்த்தசி (தேய்பிறை).
கரணம்
கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. அதாவது திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை கீழே காணலாம்.
11 கரணப் பெயர்கள் வருமாறு
1. பவம் 2. பாலவம் 3. கௌலவம் 4. தைதுலம் 5. கரஜை 6.வணிஜை 7. பத்திரை 8. சகுனம் 9. சதுஷ்பாதம் 10. நாகவம் 11. கிமிஸ்துக்னம்.
நட்சத்திரம்
நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
27 நட்சத்திரங்கள் பின்வருமாறு
1. அசுவனி 2. பரணி 3. கார்த்திகை 4. ரோகிணி 5. மிருகசீரிடம் 6. திருவாதிரை 7. புனர்பூசம் 8. பூசம் 9. ஆயிலியம் 10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. அஸ்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம் 17.அனுஷம் 18. கேட்டை 19. மூலம் 20. பூராடம் 21. உத்திராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதையம் 25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி 27. ரேவதி.
யோகம்
சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.
அவை வருமாறு
1. விஷ்கம்பம் 2. பிரீதி 3. ஆயுஷ்மான் 4. சௌபாக்கியம் 5. சோபனம் 6. அதிகண்டம் 7. சுகர்மம் 8. திருதி 9. சூலம் 10. கண்டம் 11. விருதி 12. துருவம் 13. வியாகதம் 14. அரிசணம் 15. வச்சிரம் 16. சித்தி 17. வியாதிபாதம் 18. வரியான் 19. பரிகம் 20. சிவம் 21. சித்தம் 22. சாத்தீயம் 23. சுபம் 24. சுப்பிரம் 25. பிராமியம் 26. ஐந்திரம் 27. வைதிருதி.
இவை அனைத்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம் எனப்படும்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர் செய்யுங்கள்).