பாஞ்சாலியின் காலணிகளை சுமந்த கண்ணன்

இறைவனை வணங்குவதற்காக கோயிலுக்கு செல்லும்போது, காலணிகளை வெளியில் கழட்டிவிட்டு தான் எல்லோரும் செல்வது வழக்கம். அவ்வாறிருக்கையில், தனது பக்தையின் காலணிகளை இறைவன் எதற்காக கையில் எடுத்து சுமந்து சென்றான் என்பதை அறிந்திடுவோம்.

பீஷ்மரின் சபதம்

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடந்த சண்டையில் 9 நாட்கள் போர் நடந்தபோதும், பாண்டவர்களை வெல்ல முடியவில்லையே என்று துரியோதனன் கவலை அடைந்தான்.

மேலும், பாண்டவர்களை ஒழிப்பதற்கு தாத்தா பீஷ்மர், வீரமுடன் போரிடவில்லை என்று கருதி அவரை தகாத வார்த்தைகளால் திட்டினான்.

அதையடுத்து பீஷ்மரும், மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு கொல்வதாக சபதம் செய்தார்.

இதை ஞான திருஷ்டியால் அறிந்த கிருஷ்ண பகவான், பாண்டவர்களிடம், பீஷ்மர் செய்த சபதத்தை கூறினார்.

அதைக்கேட்ட பாண்டவர்கள் பெரும் பீதியடைந்தனர்.

பீஷ்மர்

பாண்டவர்களின் பயத்தை கண்ட கிருஷ்ண பகவான், பாஞ்சாலியை அழைத்துக்கொண்டு சத்தம் செய்யாமல் என் பின்னால் வா என்று மெதுவாக கூறி, அந்த நள்ளிரவில் அவளை மயான அமைதி நிலவிய போர்க்களத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு வீரர்கள் இரவில் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு, கிருஷ்ணருடன், பாஞ்சாலி சென்றபோது, அவள் அணிந்திருந்த காலணிகளில் இருந்து சத்தம் வந்ததால் அதையும் கழற்று என்று கூறினார்.

பின்னர், ஒரு கூடாரத்தை காட்டி, நீ அந்த கூடாரத்திற்குள் சென்று, உள்ளே நடந்து கொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. ஏன், எதற்கென என்னிடம் கேள்விகள் கேட்காதே என்றார்.

பாஞ்சாலியும், கிருஷ்ணர் கூறியபடியே கூடாரத்திற்குள் சென்று நடந்து கொண்டிருப்பவர் திரும்பி பார்ப்பதற்குள், அவர் காலில் விழுந்தாள்.

யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், தீர்க்க சுமங்கலியாக இரு பெண்ணே என்று வாழ்த்தினார்.

அதன் பின்னர் அவளை எழுந்திருக்கும்படி கூறி அவள் யாரென்று பார்த்தபோது, பாஞ்சாலி என்பதையறிந்து பீஷ்மர் திடுக்கிட்டார்.

பாண்டவர்களை அழிப்பதாக கூறிய நானே, பாண்டவர்களின் மனைவியை தீர்க்க சுமங்கலியாக இரு என்று வாழ்த்தியுள்ளேனே என்று நினைத்து மனம் கலங்கினார்.

என்ன காரணம்?

பாஞ்சாலியை கண்ட பீஷ்மர், பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக்களத்திற்கு நீ மட்டும் தனியாகவா வந்தாய்? யார் உன்னை இங்கே அழைத்து வந்தது என்று கேட்டார்.

அப்போது கூடாரத்தின் வாசலில் ஒரு நிழல் தெரிவதை பீஷ்மர் கண்டார்.

அது யாரென பார்த்தபோது கிருஷ்ணர் நிற்பதை கண்டு, என்ன நடந்திருக்கும் என அடுத்த நொடியில் புரிந்து கொண்டார்.

கிருஷ்ணரை உள்ளே அழைத்த பீஷ்மர், இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு? என்று கேட்டார்.

இதுவா? இது பாஞ்சாலியின் பாதணிகள், நடந்து வரும்போது அதிகமாக சத்தம் எழுப்பியதால், நான்தான் அதை கழட்ட சொல்லி கையில் சுமந்து வந்தேன் என்றான்.

அதைக்கண்ட பாஞ்சாலி, பாய்ந்து சென்று தனது காலணிகளை பிடுங்கி, என் காலணிகளை நீ சுமந்து என்னை பாவியாக்காதே கிருஷ்ணா என்று கண்ணீர் சிந்தினாள்.

தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாமல் இரு என்று கூறி, பீஷ்மரிடம் உன் கோரிக்கையை கேட்டாயா? என்று கிருஷ்ணர் கேட்டார்.

அப்போது பீஷ்மர் பேசுகையில், கிருஷ்ணா, நீ என்ன நடக்க வேண்டுமென்று அவளை இங்கு அழைத்து வந்தாயோ, அதை நான் எனது ஆசியாக சொல்லிவிட்டேன்.

உன்னை தஞ்சமென்று வந்தவர்களை காப்பதற்காக, உன் துணை இருக்கும்போது என்னால் என்ன செய்து விடமுடியும்?

இறைவா உன்னை யாரென்று அறிந்தும், என்னால் முடியும் என்று நான் நினைத்தது தவறு என்பதை உணர்த்திட, பாஞ்சாலியின் பாதணிகளை நீ சுமந்து வந்து நிற்க வேண்டுமா? என்று கேட்டு கண்ணீர் விடுத்தார்.

இதன் மூலமாக தன்மீது அன்பு செலுத்துபவர்கள் யாராக இருப்பினும், அவர்களுக்காக இறைவன் எந்தளவிற்கும் இரங்கி வருவான் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறான்.

தூய அன்புடன் தன்னை நேசிப்பவர்களுக்காக, இறைவன் எந்தளவிற்கும் இரங்கி வருவான் என்பதை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on