பல்லி விழுந்தால் தோஷமா?

பல்லி என்பது நவக்கிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பகவான் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அதனால் தான், பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் என்று இதிகாசங்கள் கூறுகின்றன. பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினால் தீயவை நடக்கும் என்று கூறுவதுண்டு. அதுபோல பல்லி நம் உடல் மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும் தனி பலன்கள் உண்டு. இந்த பல்லி நாம் பேசிக்கொண்டிருக்கும்போது கத்தினால் அதை சகுனம் என்றும், நமது உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் விழுந்தால் அதை தோஷம் என்றும் கூறுகிறோம். அதையடுத்து, பல்லியின் வரலாறு, பல்லி நம் மீது விழுவதால் ஏற்படும் தோஷங்களை நீக்குவதற்கான பரிகாரங்கள் குறித்தும் பார்க்கலாம்.

வரலாறு

ஸ்ரீ சிருங்கி பேரர் என்னும் முனிவரின் 2 மகன்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர்.

அவர்கள் இருவரும் ஒரு நாள் முனிவரின் பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வரச் சென்றனர்.

அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்ட கௌதம முனிவர், கடும் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்து விட்டார்.

அதன் பின்னர், சிஷ்யர்கள் மனம் வருந்தி வேண்டிக்கொண்டதால் காஞ்சி சென்றால் உங்களுக்கு பாவ விமோசனம் உண்டு எனக் கூறினார் முனிவர்.

வரதராஜ பெருமாள்

அதையடுத்து, சிஷ்யர்கள் இருவரும் காஞ்சி வந்து வரதராஜ பெருமாளிடம் மோட்சம் வேண்டி கேட்டனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற வரதராஜ பெருமாள், உங்களின் ஆத்மா மட்டும் வைகுந்தம் செல்லும்.

உங்களின் சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க, என்னைத் தரிசிக்க வருபவர்கள் உங்களைத் தரிசித்தால் சகல தோஷம் நீங்கி நன்மை உண்டாகும் என்றும், சூரிய, சந்திரர்கள் இதற்கு சாட்சி என்றும் கூறி அவர்களுக்கு மோட்சம் அளித்தார்.

தங்க பல்லி, வெள்ளி பல்லி

எனவே, காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் உள்ள தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லியை தரிசித்தால் நம் மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகும்.

அதே போல் பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கும், பல்லி உருவங்களை தொட்டு வணங்கினால் அந்த தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

சுப பலன்கள்

தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு செல்வமும், வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை வட இந்தியாவில் அதிகம்.

நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி. நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமிகரமாகும்.

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி. வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் கிடைக்கும்.

தோளின் இடது பக்கமும், வலது பக்கமும் பல்லி விழுந்தால் வெற்றி கிடைக்கும்.

பிருஷ்டத்தின் (பின்பகுதி) இடது பக்கம் பல்லி விழுந்தால் செல்வம் கிடைக்கும். வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் கிடைக்கும்.

கபாலத்தின் இடது பக்கமும், வலது பக்கமும் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும்.

மார்பின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கும். இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

பரிகாரம்

பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கான பரிகாரம் குறித்து சாஸ்திரங்கள் கூறுவதாவது.

உடலின் எந்த ஒரு பகுதியில் பல்லி விழுந்தாலும், தலைக்கு குளித்த பிறகு அருகில் உள்ள சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும்.

கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜையறையிலேயே தெய்வங்களின் படத்திற்கு முன்பாக திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் நல்லது.

சிவபெருமானுக்குரிய மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை கூறுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே

ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |

உர்வாருகமிவ பந்தனான்

ம்ருத்யோர்முக்ஷீய மாம்ருதாத் ||

விளக்கம்

நறுமணம் கமழும் மேனியோனே, மூன்று கண்களை உடையவனே, அனைத்து ஜீவராசிகளையும் பேணி வளர்ப்பவனே, உன் திருவடியை நாங்கள் வணங்குகிறோம். எங்களை காப்பாற்றுவாயாக என்பதே இதன் பொருளாகும்.



Follow Us on