download_indicator

நோய் தீர்க்கும் அதிசய தீர்த்தம்!

இறைவழிபாட்டில் சிறப்பு வாய்ந்த தெய்வம், ஸ்தலம், தீர்த்தம் போன்றவைகளை குறிப்பிடும்போது, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று கூறுவது வழக்கம். அவ்வாறு கூறப்படும் இடங்கள் மற்ற இடங்களை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் ஸ்தலங்கள் தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த இடங்களில் சில கோயில் தீர்த்தங்கள் நோய் தீர்க்கும் அதிசய தீர்த்தமாக இருந்து வருகிறது. அதையடுத்து, எந்தெந்த ஊர்களில் அவ்வாறான அதிசய தீர்த்தங்கள் இருக்கின்றன, அதனால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

சுருளிமலை

முருகனின் திருக்கோயில்களில் ஒன்று சுருளிமலை. இது கம்பம் அருகில் உள்ளது. இம்மலைக்கு சுருளிப்பட்டியிலிருந்து செல்ல வேண்டும்.

சுருளிமலையிலிருந்து ஏராளமான மூலிகைகளுடன் கலந்து அருவியாக விழும் இந்த சுருளி தீர்த்தத்தில் நீராடினால் எண்ணற்ற தீர்க்க முடியாத நோய்கள் குணமாகின்றன.

ஆலத்தூர்

கோவைக்கு 42 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஆலத்தூர் என்ற ஸ்தலத்தில் வீற்றிருக்கும் வெங்கடேசப்பெருமாள் கோயில் குளத்தில் நீராடி வரும் பக்தர்களுக்கு, துளசி, வேப்பங்கொழுந்து, மாங்கொழுந்து, அரளிப்பூ, எலுமிச்சம்பழச்சாறு முதலிய பொருட்களால் தூபமிடுகின்றனர்.

மேலும், அதில் கிடைக்கும் கரித்தூளை சொரி சிரங்குகளின் மீது பூசுகிறார்கள். இதனால் தோல் நோய்கள் குணமாகின்றன.

வைத்தீஸ்வரன் கோயில்

எல்லாம் வல்ல சிவபெருமான் மந்திரமும், தந்திரமும், மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருளும் வைத்தியநாதனாக அருள்புரியும் தலம் வைத்தீஸ்வரன் கோயிலாகும்.

கும்பகோணத்திலிருந்து சிதம்பரத்திற்கு செல்லும் வழியில் மயிலாடுதுறைக்கு அருகில் வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவன், பலவகை நோய்களைத் தீர்க்க கைலாயத்திலிருந்து வந்தார் என்று புராணம் சொல்கிறது.

திருக்கோயிலில் 18 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது சித்தாமிர்த தீர்த்தம்.

சிவனின் திருமுடியில், சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்ய அது வழிந்து ஒன்று சேர்ந்த இடமே இத்தீர்த்தமாகும்.

தீர்த்தமலை

நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலமாக தீர்த்தமலை திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், இதுவரை தீராத நோய்கள் நீங்குகின்றன.

தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் இருக்கிறது.

தீர்த்தமலையின் சிறப்புகளே, இங்குள்ள தீர்த்தங்கள் தான். இங்குள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலின் தல தீர்த்தங்களாக ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கவுரி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியவை விளங்குகின்றன. அற்புத மூலிகைகளின் சத்து கலந்து ஓடி வரும் இந்த தீர்த்தங்களால்தான், இங்கு வரும் பக்தர்களின் நோய்கள் நீங்குவதாக கூறப்படுகிறது.

வில்லியனூர்

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் அமைந்துள்ள கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோயிலில் இருக்கும் பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் வெண்குஷ்டம் நீங்குவதாக கூறப்படுகிறது.

11ஆம் நூற்றாண்டில் தர்மபாலச்சோழன் என்ற மன்னன் இந்த கோயிலை கட்டியதாகவும், மன்னனுக்கு ஏற்பட்ட வெண்குஷ்ட நோய் நீங்க, இத்தலக் குளத்தில் நீராடி, சிவனை வழிபட்டு குணமடைந்ததாக வரலாறு கூறுகிறது.



Follow Us on