download_indicator

நவக்கிரக வழிபாட்டிற்குரிய காயத்ரி மந்திரங்கள்

பிரபஞ்சம் நவ கோள்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற காரணத்தால், நமது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு இந்த நவ கோள்களின் ஆதிக்கமே முக்கிய காரணமாகும் என்று நமது முன்னோர் கூறுகின்றனர். அதனால் தான் அவரவர் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய பலன்களுக்கு ஏற்ப நவக்கிரக பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. நமக்கு வரும் வினைகளை நாம் தவிர்க்க இயலாத போதிலும், அதன் தாக்கத்தை பரிகாரங்களின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும்.

எதற்காக

அதையடுத்து, நவக்கிரகங்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை பக்தியுடன் அந்தந்த நாட்களுக்கு தகுந்தாற்போல் படித்து வர கிரகங்களால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறைந்து நல்ல நேரம் கூடி வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்நிலையில் நவக்கிரகங்களில் எந்த கிரகத்திற்கு எந்த காயத்ரி மந்திரம், அதை படிப்பதால் ஏற்படும் பலன் மற்றும் அதனை எத்தனை நாட்களுக்கு படிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

சூரியன் (ஆதித்யன்)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

பாசஹஸ்தாய தீமஹி

தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை படித்து வருவதால் கண் பார்வையில் தெளிவும், புத்தி கூர்மையும் பெறலாம். இதனை தினந்தோறும் காலை, மாலை இரு வேலைகளிலும் குறைந்த பட்சம் 11 முறை படித்து வருவது நல்லது. ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவன் கோயில் அல்லது பிரசித்திபெற்ற சிவன் கோயில்களுக்கு சென்று நவக்கிரகத்தில் மற்றும் தனியாக உள்ள சூரிய பகவானை வழிபடுவது சிறப்பு.

சந்திரன்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே

ஹேமரூபாய தீமஹி

தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை 10 முறை படித்து வருவதால் நல்ல அறிவு, ஞானம் கிடைக்கும். மேலும், எளிதில் பிறரை வசப்படுத்தும் ஆற்றலும் கிடைக்கும். இதனை தினந்தோறும் இரவில் நிலா வந்த பிறகு, அதனை பார்த்துக்கொண்டே படிப்பது மிகவும் சிறப்பாகும். வளர்பிறையில் அமாவாசை, பிரதமை, துவிதியை போன்ற நாட்களில் வானத்தை மட்டும் பார்த்து படிக்கலாம். மேலும், திங்கள்கிழமை தோறும் நவக்கிரகத்தில் உள்ள சந்திரனை அருகில் உள்ள சிவன் கோயில் அல்லது பிரசித்திபெற்ற சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.

அங்காரகன்

ஓம் வீரத்வஜாய வித்மஹே

விக்ன ஹஸ்தாய தீமஹி

தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை 7 முறை படித்து வருவதால், செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையும். மேலும், செவ்வாய் தோஷம் காரணமாக தடைபட்டு வந்து கொண்டிருந்த திருமணம், நல்ல வேலைவாய்ப்பு போன்றவை விலகி நினைத்தது நடைபெறும். மேலும், செவ்வாய் கிழமை தோறும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானுக்கு அரளிப்பூ சாற்றி வணங்குவது நல்ல பலனை கொடுக்கும்.

புதன்

ஓம் கஜத்வஜாய வித்மஹே

சுகஹஸ்தாய தீமஹி

தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அந்தளவிற்கு சிறப்பு வாய்ந்த புதன் மந்திரத்தை 5 முறை படிப்பதால் நல்ல கல்வியும், அறிவும் பெறலாம். மேலும், புதன் கிழமை தோறும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் நவக்கிரகங்களில் உள்ள புதன் பகவானை வணங்குவது நல்ல பலனை கொடுக்கும்.

குரு

ஓம் குருதேவாய வித்மஹே

பரப்ரஹ்மாய தீமஹி

தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

குரு என்றழைக்கப்படும் வியாழ பகவானுக்குரிய இந்த மந்திரத்தை 11 முறை படித்து வர கல்வியில் உயர்ந்த நிலையை அடையலாம். அத்துடன் குரு அருளால், திருமண யோகம் அமைந்து நல்ல பண்புள்ள மனைவி கிடைக்கும். மேலும், வியாழ கிழமை தோறும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் நவக்கிரகங்களில் உள்ள வியாழ பகவானை வணங்குவது நல்ல பலனை கொடுக்கும்.

சுக்கிரன்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

தனு ஹஸ்தாய தீமஹி

தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

வெள்ளி என்றழைக்கப்படும் சுக்கிர பகவானுக்குரிய இந்த மந்திரத்தை 18 முறை படித்து வர தடைபட்ட திருமணம் நடந்தேறும். அத்துடன், தொடங்கும் காரியங்கள் அனைத்திலும் செல்வம் கிடைத்து நல்ல வளமான எதிர்காலம் கிடைக்கும். அதையடுத்து, வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் நவக்கிரகங்களில் உள்ள சுக்கிர பகவானை வணங்குவது நல்ல பலனை கொடுக்கும்.

சனி பகவான்

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

சனீஸ்வரர் என்ற சனி பகவானை மேலே கூறிய காயத்ரி மந்திரத்தை கொண்டு 9 முறை படித்து வர சனியால் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கும். மேலும், வீடு, மனை வாங்க கூடிய யோகத்தையும் அவர் வழங்குவார். அதையடுத்து, சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் நவக்கிரகங்களில் உள்ள சனி பகவானை வணங்குவது நல்ல பலனை கொடுக்கும் அல்லது சிவன் கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கிட வேண்டும். குச்சனூர், திருநள்ளாறு போன்ற பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த சிறப்பை கொடுக்கும்.

ராகு

ஓம் நகத்வஜாய வித்மஹே

பத்மஹஸ்தாய தீமஹி

தன்னோ ராகு ப்ரசோதயாத்

நவக்கிரகங்களில் சாயா கிரகம் என்றழைக்கப்படும் ராகுவை மேலே கூறிய காயத்ரி மந்திரத்துடன் 11 முறை படித்து வர நாக தோஷத்திலிருந்து நிவர்த்தி அடையலாம். வாரத்தின் 7 நாட்களில் வரும் ராகு கால நேரத்தில் உங்களால் எந்த நாளில் கோயிலுக்கு செல்ல முடியுமோ அன்றைய தினத்தில் சென்று ராகுவை வழிபடுவது மிகுந்த சிறப்பை கொடுக்கும்.

கேது

ஓம் அம்வத்வஜாய வித்மஹே

சூலஹஸ்தாய தீமஹி

தன்னோ கேது ப்ரசோதயாத்

நவக்கிரகங்களில் சாயா கிரகம் என்றழைக்கப்படும் கேதுக்குரிய காயத்ரி மந்திரத்தை 11 முறை படித்து வர சர்ப்ப தோஷ பாதிப்பிலிருந்து நிவர்த்தி அடையலாம். மேலும், துஷ்ட சக்திகளின் பதிப்பும் விலகும். ஞாயிற்று கிழமை தோறும் ராகு கால வேளை வருகின்ற நேரத்தில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் நவக்கிரகங்களில் உள்ள கேது பகவானை வணங்குவது நல்ல பலனை கொடுக்கும்.

நவக்கிரக வழிபாட்டை உங்களுக்கு தெரிந்த ஆன்மிக அன்பர்களுக்கு பகிருங்கள்(ஷேர்)



Follow Us on