download_indicator

மாசி மகத்தை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேகம்

பிரபஞ்ச இயக்கத்தை தனது நாட்டியத்தின் மூலமாக இயக்கி வருகிற நடராஜர் பெருமானை குளிர்விக்கும் விதமாக நடத்தப்படும் அபிஷேகத்தை காண்பது நல்லது என்று நடராஜர் சதகம் கூறுகிறது. அதையடுத்து நாளை மாசி வளர்பிறை சதுர்த்தசி திதியன்று நடைபெறும் நடராஜர் அபிஷேகத்தின் சிறப்பு மற்றும் பலன்களை காணலாம்.

எதற்காக 6 முறை?

நடராஜ பெருமானுக்கு ஆண்டுதோறும் 6 முறை அபிஷேகம் செய்யப்படுகிறது.

அதில், 3 முறை மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களிலும், 3 முறை ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வருகின்ற வளர்பிறை சதுர்த்தசி திதியன்றும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த 6 அபிஷேகமும் தேவலோகத்தில் இருப்பவர்கள் செய்கின்ற ஒரு நாளுக்குரிய 6 கால பூஜையாகும்.

பூலோகத்தில் உள்ள கோயில்களில் தினந்தோறும் 6 கால பூஜை செய்யப்படுவது போன்று, தேவலோகத்தினரும் 6 கால பூஜை செய்து வருகின்றனர்.

அதையொட்டியே நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு 6 முறை அபிஷேகம் செய்யப்படுகிறது.

என்றைக்கு?

பூலோகத்தினரின் ஒரு ஆண்டு, தேவலோகத்தினருக்கு ஒரு நாள் ஆகும்.

கோயில்களில் ஒவ்வொரு நாளும் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என 6 கால பூஜைகள் செய்யப்படுகின்றன.

அதேபோல், தேவர்களுக்கு மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தம் என்ற வைகறை பொழுதாகும்.

அதனால், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆருத்ரா தரிசன அபிஷேகம் நடைபெறுகிறது.

தேவர்களின் காலை நேரமானது மாசி மாதமாகும், எனவே, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை அபிஷேகம் நடைபெறும்.

தேவர்களின் உச்சி காலை எனப்படும் நண்பகல் சித்திரை மாதத்தில் வருகிறது.

அதனால், சித்திரை மாத திருவோண நட்சத்திரத் தினத்தன்று, உச்சிகால அபிஷேகம் செய்யப்படுகிறது.

தேவர்களின் மாலை நேரம் ஆனி மாதத்தில் வருகிறது. அதனால், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத் தினத்தன்று இறைவனுக்கு திருமஞ்சன அபிஷேகம் செய்யப்படுகிறது.

தேவர்களின் இரவு காலமாக ஆவணி மாதம் வருவதையடுத்து, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில், இறைவனுக்கு இரவு நேர அபிஷேகம் நடத்தப்படுகிறது.

தேவர்களின் அர்த்தஜாம வேளை புரட்டாசி மாதத்தில் வருவதையடுத்து, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி திதியில் அர்த்தஜாம அபிஷேகம் நடத்தப்படுகிறது.

மாசி சதுர்த்தசி

அதன்படி, நாளை மார்ச் 12-ஆம் தேதி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியன்றும், நாளை மாசி மகம் வருவதை முன்னிட்டும், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

இறைவனின் அபிஷேகத்திற்கு தேவையான இளநீர், பன்னீர், பால், தேன், நெய், சந்தனம், குங்குமம், மஞ்சள், விபூதி, நறுமண பூக்கள், வில்வ இலைகள், பழங்கள், சூடம், பத்தி, சாம்பிராணி, அங்கவஸ்திரம் போன்று உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுத்து சிவனருளுக்கு பாத்திரமாகலாம்.

பக்தர்கள் அனைவரும் இறைவனுக்கு சேவை செய்து, நடராஜரின் அபிஷேக, ஆராதனையில் கலந்து கொள்வதன் மூலமாக பெரும் புண்ணியத்தை பெற்றிடலாம்.

நடராஜருக்கு எதற்காக ஆண்டிற்கு 6 முறை அபிஷேகம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on