download_indicator

நாளை வைகுண்ட ஏகாதசியில் செய்ய வேண்டியது?

வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றும், தானம் செய்வதால் சந்ததியினர் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் காண்பார்கள் என்பதால், நாளை வைகுண்ட ஏகாதசியன்று என்ன செய்வது என்று அறிந்திடலாம்.

ஏகாதசி என்றால் என்ன?

எல்லோரும் நினைப்பதுபோல் ஏகாதசி என்றால் அமாவாசை அல்லது பௌர்ணமியில் இருந்து வரக்கூடிய 11-வது திதி மட்டுமே ஏகாதசி என்பது அல்ல.

உண்மையில், ஏகாதசி என்பது விஷ்ணு பகவானை காப்பதற்காக தோன்றிய ஒரு பெண்ணின் பெயராகும்.

கிருத யுகத்தில் முரன் என்னும் அசுரன், தேவர்கள், முனிவர்கள் எல்லோரையும் துன்புறுத்தி வந்தான்.

அதனால் தேவர்கள், முனிவர்கள் அனைவரும் முரனின் கொடுமைகளில் இருந்து தங்களை காத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர்.

அதன்பேரில் மகாவிஷ்ணு, அசுரன் முரனுடன் போர்புரிந்தார். சுமார் 1000 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற போரினால், பத்ரியிலுள்ள ஒரு குகையில் மகாவிஷ்ணு ஓய்வெடுத்தார்.

அயர்ந்து ஓய்வெடுத்து கொண்டிருந்த பகவான் விஷ்ணுவை, அசுரன் கொல்ல முயன்றபோது, மகாவிஷ்ணுவின் உடலிலிருந்து தோன்றிய பெண், அசுரனைக் கொன்றாள்.

தூக்கத்திலிருந்து விழித்த மகாவிஷ்ணு நடந்தவற்றை அறிந்து, அந்த பெண்ணைப் பாராட்டி அவளுக்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார்.

மேலும், ஏகாதசி தோன்றிய நாளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களை அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் என்று மகாவிஷ்ணு அருளினார்.

எனவே நாளை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று, இந்த ஏகாதசி பெண்ணையும் வணங்கி, பெருமாளையும் வணங்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

வைகுண்ட ஏகாதசியன்று உணவு, நீர், பசு போன்றவற்றை தானம் செய்பவர்கள், பல லட்சம் கோடி தங்கத்தை ஒரே நாளில் தானம் செய்த பலனை அடைவார்கள்.

விஷ்ணு சகஸ்ர நாமத்தை கேட்பதும், படிப்பதும் மிகுந்த புண்ணிய பலன்களை கொடுக்கும்.

பகவான் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை கொண்ட அந்த சகஸ்ர நாமத்தை படிப்பவர், கேட்பவர் ஆகியோரின் சகல பாவங்களும் தீர்ந்து புண்ணிய பலன்கள் பெருகும்.

துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும், நாளை வைகுண்ட ஏகாதசியன்று,

1. "ஓம் நமோ பகவதே வாதேவாய"

2. "ஓம் நமோ நாராயணாய நமஹ"

3. "ஹரே ராம ஹரே கிருஷ்ண"

ஆகிய மந்திரங்களை எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை கூறுவது நல்லதாகும்.

எதற்காக தான, தர்மம்?

மனிதர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் மற்றவரின் செல்வம், உடமைகளை அபகரிக்கின்றனர்.

மேலும் அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை அடைதல், மற்றவர்களுக்கு தீங்கு செய்து விட்டு, பாவம் செய்து விட்டேன் என்று வருந்துகின்றனர்.

இத்தகைய பாவ செயல்களில் இருந்து நீங்குவதற்கு காமம், குரோதம், லோபம், மோகம், பொறாமை, அகங்காரம் போன்றவற்றை அழித்து, பகவான் விஷ்ணுவை வணங்க வேண்டும். தான, தர்மம் செய்ய வேண்டும்.

அதிலும் குறிப்பாக, வைகுண்ட ஏகாதசி தினத்தில் செய்கின்ற தான, தர்மம் மோட்சத்தை அளிக்கும்.

அந்தணர்கள் மற்றும் வறியவர்களுக்கு குடை, காலணி மற்றும் பசுவுடன் எள் தானம் அளிப்பதும் மிகுந்த புண்ணியத்தை கொடுக்கும்.

எள் தானம் செய்வதன் அளவிற்கேற்ப அத்தனை ஆயிரம் வருட காலம் சொர்க்கத்தில் வசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று பகவானே கூறியிருப்பதால், நாளை வைகுண்ட ஏகாதசியன்று அவசியம் எள் தானம் செய்வது நல்லது.

தூங்காதிருக்க வேண்டும்

நாளை வைகுண்ட ஏகாதசி அன்று உபவாசமிருந்து, இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை பாடிக்கொண்டே தூங்காமலிருக்க வேண்டும்.

மறு நாள் காலை பாரணை செய்து, உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

வைகுண்ட ஏகாதசியன்று எதற்காக தானம் செய்யவேண்டும் என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on