
தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையே போகி பண்டிகையாகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதே போகியின் நோக்கமாகும். அதையடுத்து, இந்நாளில் என்ன செய்யவேண்டும் என்று அறிந்திடலாம்.
போகி என்றால் என்ன?
மழைக்கு அதிபதியான இந்திரனின் கட்டளையால், மக்கள் எல்லோரும் செழிப்பாக வாழ்ந்து போகங்களை அனுபவிக்கின்றனர்.
அதனால், இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடும் இந்நாளை போகி பண்டிகை என்று கூறுகின்றனர்.
மேலும், மார்கழி மாதம் முழுவதும் நோன்பிருந்து முப்பது பாசுரங்களைப் பாடிய ஆண்டாள், இறைவனையே மணம்புரிந்து போகங்களை (இன்பங்களை) அனுபவித்தாள்.
அதன் காரணமாகவும் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
மார்கழியின் கடைசி நாளில் பயன்படுத்திய பழைய பொருட்கள், உபயோகமற்றவைகளை அழிக்கும் தினத்தை போக்கி என்றனர்.
அதுவே நாளடைவில் மருவி போகியானது என்றும் கூறுவர்.
என்ன செய்யவேண்டும்?
இந்திரனுக்கு மிகவும் பிடித்தமான நாள் என்பதால், இந்திரனின் ஆசியையும், இயற்கையின் ஆசியையும் பெறும் நாளாக போகி பண்டிகையை விவசாயிகள் உள்பட அனைவரும் கொண்டாட வேண்டும்.
தேவர்களின் இரவு காலமாகிய தட்சிணாயணம் முடிந்து உத்தராயணம் அதாவது பகல் காலம் தை 1-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதால், அதை வரவேற்கும் விதமாக வீடுகளில் வெள்ளையடித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
அவ்வாறு வீடு, அலுவலகம், கடை, தொழில் செய்யும் இடம் போன்றவற்றை சுத்தப்படுத்தும்போது பழையவற்றை கழிப்பது வழக்கம்.
அதனால், பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாக இந்நாள் கருதப்படுகிறது.
பொருட்களை மட்டுமல்ல, மனதில் உள்ள தேவையற்ற தீய எண்ணங்கள், துன்பம், துயரங்களையும் நீக்கவேண்டும்.
தோரணங்கள்
மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக போகியன்று, வீட்டின் நிலைவாசலில் ஆவாரம் பூ, மாவிலை, வேப்ப இலை மற்றும் பூளைப்பூ ஆகிய நான்கும் சேர்த்து கட்டப்படும்.
அமரன் தேசியா எனும் தாவர வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பீளைப் பூவுக்கு பூளைப் பூ, பொங்கப்பூ, சிறுகண்பீளை, கண்ணுப் பிள்ளைச்செடி என பல்வேறு பெயர்கள் உள்ளன.
பீளைப்பூ பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாகவும், வீடுகளில் பூச்சிகள் நுழையாமல் தடுக்கவும் செய்யும்.
பொங்கல் திருவிழாவின்போது திருஷ்டி, எதிர்மறை எண்ணங்களில் இருந்து காப்பதற்காக வீடுகளில் கட்டப்படுகிறது
ஒரு சிலர் தாங்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள், கார் மற்றும் கனரக வாகனங்களிலும் இதனை கட்டுவதுண்டு.
வீட்டின் வாசல் முன்பாக பெயின்ட் கொண்டு நல்ல அழகிய கோலங்கள் பல்வேறு வண்ணங்களில் வரைய வேண்டும்.
அத்தகைய வண்ணமயமான கோலங்களை காணும்போதே மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படும்.
அந்த மனநிறைவுடன் வீட்டிற்கு வருபவர்கள் அவர்களும் மகிழ்ந்து, வீட்டில் இருப்பவர்களை வாழ்த்தி செல்லும் மனோநிலையும் ஏற்படும்.
இயற்கைக்கு நன்றி தெரிவித்து அதன் ஆசியை பெறும் தினமாக போகியை கொண்டாட வேண்டும் என்பதை விவாசய நண்பர்கள் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.