download_indicator

முருகன் வள்ளியை மணந்த வரலாறு

முருகப்பெருமானுக்கு, இச்சாசக்தி, கிரியா சக்தி என்ற இருசக்திகளே வள்ளி, தெய்வானை என்ற இரு மனைவிகளாக உள்ளனர். அதில் தேவலோக தலைவன் இந்திரனின் மகளே தெய்வானை ஆவாள். வள்ளியோ வேடர்குல பெண்ணாவாள். அதையடுத்து வள்ளியுடன் காதல் திருமணம் செய்த முருகன், முதன்முதலாக கலப்பு திருமணம் செய்தவராகவும் கருதப்படுகிறார். இந்நிலையில், முருகனுக்கும், வள்ளிக்கும் நடந்த திருமணம் பற்றி அறிந்திடலாம்.

வள்ளி அவதாரம்

விஷ்ணு பகவானின் கண்களில் இருந்து விழுந்த நீரில் பிறந்தவர்களே அமுதவல்லி மற்றும் சுந்தரவல்லி என்ற இரட்டையர் சகோதரிகளாவர்.

இவர்கள் இருவரும், சிறிதும் கோபமே வராத கணவனை மணக்க விரும்பி அத்தகைய குணங்களைக் கொண்ட முருகனைக் கண்டதும் அவரையே மணக்க விரும்பினார்கள்.

மேலும், தங்கள் விருப்பத்தை அவர்கள் முருகனிடம் வெளிப்படுத்தியபோது அமுதவல்லி தேவேந்திரனின் மகளாக தேவலோகத்திலும், சுந்தரவல்லி பூலோகத்திலும் பிறந்து தன்னை வழிபட்டு வர அவர்களை மணப்பதாக முருகன் கூறினார்.

அதையடுத்து, காஞ்சிபுரம் மேல்பாடி அருகே உள்ள வள்ளிமலை எனும் வள்ளிக்காட்டில் வேடுவர்களின் தலைவரான நம்பிராஜன், பெண் குழந்தை வேண்டி கடவுளை வணங்கி வந்தான்.

சிலமுகி என்ற முனிவரின் மாய சக்தி காரணமாக அரபி என்ற அழகிய மானின் வயிற்றில் கருவாகி, பிறந்தாள் வள்ளி.

வேட்டைக்கு சென்ற நம்பிராஜன் வள்ளிக்கிழங்கு தோன்றும் இடத்தில் கண்டெடுத்ததால் அந்த குழந்தைக்கு வள்ளி என்ற பெயர் வைத்தனர்.

வேடர்களின் வழக்கப்படி குழந்தைக்கு 12 வயது ஆகும்போது நெற் பயிரை காக்க காவலுக்கு அமர்த்துவது வழக்கம்.

அந்த வகையில் வள்ளி நெற்கதிர்களை காக்க அமைக்கப்பட்ட பரண்மீது அமர்ந்து பயிரை காத்தாள் ஒருநாள் எதேச்சையாக அப்பகுதிக்கு வந்த நாரதர் வள்ளியின் அழகை கண்டு வியந்து, தணிகை மலையில் வீற்றிருந்த முருகனிடம் வள்ளியை குறித்து தெரிவித்தார்.

முருகனின் காதல்

நாரதர் கூறியபடி ஒரு நாள் வள்ளியைக் கண்ட முருகன் அவள் அழகில் மயங்கி அவள்மீது காதல் கொண்டு ஒரு வேடன் வடிவில் அடிக்கடி சந்தித்து பேசினார்.

அதையடுத்து, இருவரும் காதல் வயப்பட்டு ஒரு நாள் தம்மை மறந்து பேசிக்கொண்டிருக்கையில் நம்பி தனது ஆட்களுடன் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்.

அவர் வருவதைக் கண்ட முருகனோ தன்னை ஒரு மரமாக மாற்றிக்கொண்டு நின்றார்.

வந்தவர்கள் சென்றதும் வள்ளி அவர் எங்கு சென்றுவிட்டார் என அனைத்து இடங்களிலும் தேட அவர் அவளுக்குத் தெரியாமல் மீண்டும் வேட உருவில் மாறினார்.

அதைத்தொடர்ந்து முருகன் தன்னை மணந்து கொள்ளும்படி வள்ளியிடம் வற்புறுத்தியபோது, முருகனை கணவராகப் பெற வேண்டும் என்ற நினைவில் இருப்பதால் அவரை மணக்க முடியாது என்றாள்.

வள்ளி திருமணம்

அதையடுத்து, ஒரு நாள் வயதான கிழவர் வடிவில் வந்த முருகன், தனது சகோதரர் விநாயகரை யானை வடிவில் வரவழைத்து அவளை துரத்தினார். அவள் பயந்து முதியவரை கட்டிக் கொண்டு உதவி கேட்க, அவர் தன்னை மணந்து கொண்டால் மட்டுமே அவளை காப்பாற்றுவேன் என்று கூறி தன்னுடைய உண்மையான உருவைக் காட்டினார்.

அதன் பின் இருவரும் மணந்துகொள்ள முடிவு செய்து ஓடிப்போக முயன்றபோது, நம்பி தனது படையுடன் வந்து துரத்தினார்.

ஆனால் முருகனோ அவர்களுடன் சண்டையிட்டு அவர்களை மரணமடையச் செய்தார்.

ஆனால், வள்ளியோ அவர்களுக்கு உயிர் பிச்சை கேட்டதையடுத்து, முருகன் அவர்களுக்கு உயிர் கொடுத்தார்.

அதன் பின், அவர்கள் அனைவரின் சம்மதத்தின் பேரில் வள்ளிமலையில் முருகன் வள்ளியை மணந்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு முருகன், வள்ளியுடன் திருத்தணிக்கு சென்றதாகக் கூறுகின்றனர்.

வள்ளியின் பிறப்பிடமாக ஒரு சிலர் இலங்கையில் உள்ள கதிர்காமம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

முருகன் வள்ளியை மணந்த பிறகு திருத்தணிக்கு சென்று தங்கியது பற்றி எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on