
பணம் சம்பாதிப்பதாக இருந்தாலும், கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாக இருந்தாலும் இறைவனின் அருள் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற மனநிலை இன்றைக்கு எல்லோரிடமும் உள்ளது. அவ்வாறு, மக்களின் விருப்பத்திற்கேற்ப உடனடியாக அருள்புரிபவராக முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திகழ்கின்றார். அதையடுத்து, முன்னூர் ஆடவல்லீஸ்வர சுவாமியின் பெருமை, அவரது சிறப்பு, அவர் எங்கே இருக்கிறார் என்று அறிந்திடுவோம்.
எங்கே இருக்கிறார்?
திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. சென்றால் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோயில் உள்ளது.
இங்குள்ள ஆடவல்லீஸ்வர சுவாமி தான், மக்களின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுபவராக உள்ளார்.
சிறப்பு
இராஜராஜ சோழன், கோச்செங்கோட் சோழன் வரிசையில், எண்ணற்ற சிவன் கோயிலை கட்டிய மன்னர்களில் மூன்றாம் குலோத்துங்க சோழனும் ஒருவராவார்.
மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 300-வது சிவன் கோயில் என்பதன் காரணமாக, இந்த ஊரின் பெயரும் முன்னூர் என்று அழைக்கப்படுகிறது.
வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், பல தடைகளை சந்தித்து வருபவர்கள், முன்னூருக்கு வந்தால் முன்னேற்றம் காணலாம் என்பது சிறப்பாகும்.
இந்த கோயிலை மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் கட்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் அவனது கனவில், சிவபெருமான் நடனமாடிய தரிசனம் கிடைத்தது.
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்கிரபாத முனிவருக்கும் நேரில் கிடைத்த இறைவனின் திருநடனக்காட்சி, இங்கு சோழ மன்னனுக்கும் கிடைத்ததால், சிவபெருமானுக்கு ஆடவல்லீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த கோயில் சுமார் 3500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
பெருமை
நவக்கிரகங்களில் பிரகஸ்பதி என்றழைக்கப்படும் குரு பகவானுக்கு, வேதங்களில் புலமை பெற்றிருப்பதாலும், தேவர்களுக்கெல்லாம் ஆசிரியராக இருப்பதாலும் ஒரு சமயம் கர்வம் ஏற்பட்டது.
அதனால், தவ வலிமையையும், தெய்வீக ஒளியையும் இழந்த பிரகஸ்பதி மனம் வருந்தி, பிரம்ம தேவரை வணங்கி, இழந்ததை மீண்டும் பெற வழி கூறும்படி வேண்டினார்.
குரு பகவானின் நிலையை கண்டு வருந்திய பிரம்ம தேவரும், பூவுலகில் முன்னூற்று மங்கலம் எனப்படும் திருத்தலம் சென்று, அங்குள்ள ஆடவல்லீஸ்வர பெருமானை குறித்து தவம் செய்தால், இழந்ததை மீண்டும் பெறலாம் என்று கூறினார்.
அதன்பேரில், குரு பகவானும் இங்கு வந்து சிவபெருமானை வணங்கி தவம் செய்து, இழந்த தவ பலத்தையும், ஆன்ம ஒளியையும் மீண்டும் பெற்றார்.
குரு பகவான் இங்கே வந்து இழந்த சக்தியை மீண்டும் பெற்றதால், இங்கு வந்து ஆடவல்லீஸ்வர பெருமானை வணங்கி செல்பவர்களுக்கு உடனடியாக எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும், சிவன் கோயில்கள் அனைத்திலும் தென்திசை நோக்கி அருள்புரியும் தட்சிணாமூர்த்தி, இங்கு மேற்கு பார்த்து அருள்புரிவதால் சிறந்த குரு பரிகார ஸ்தலமாக இத்தலம் உள்ளது.
இங்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
ஆடவல்லீஸ்வரர் என்ற பெயர் இங்குள்ள சுவாமிக்கு எதனால் வந்தது என்று உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர் செய்யுங்கள்).