
முன்னேற்றத்தை விரும்புகிறவர்கள் வாரத்தில் புதன் கிழமை தோறும், தவறாமல் நவக்கிரகங்களில் உள்ள புதனை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து புதனை எவ்வாறு வழிபட வேண்டும், அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னவென்று அறிந்திடுவோம்.
புதன் வரலாறு
நவக்கிரகங்களில் சந்திரனுக்கும், குரு பிரகஸ்பதியின் மனைவி தாராவிற்கும் ஏற்பட்ட தவறான உறவுமுறையினால் பிறந்தவரே புதன் ஆவார்.
தனது பிறப்பின் முறை சரியான முறையில் இல்லாததால், தாயையும், தந்தையையும் ஆரம்பம் முதலே, புதன் வெறுத்து ஒதுங்கி வாழ்ந்து வந்தார்.
வாலிப வயது வந்ததும் சந்திரனின் மகன் என்பதால், இயல்பாகவே அழகாக இருந்த புதனைக் கண்டு மயங்கிய ஒரு தேவமங்கை, தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தினாள்.
தனக்கேற்பட்ட அவமானம் போன்று, வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதால், அந்த தேவமங்கையை புதன் மறுத்தான்.
அதனால், அவள், புதனை மூன்றாம் பாலினத்தவராக மாறும்படி சாபமிட்டாள்.
அதையடுத்து, சிவபெருமானை குறித்து கடும் தவம் செய்து ஆணாக மாறியதுடன், நவக்கிரகங்களில் ஒருவராகும் தகுதியையும் பெற்றார்.
அத்துடன், மதிநுட்பமாக செயல்படும் ஆற்றலை வழங்குபவராகவும், தகுந்த குருவின்றி தானாகவே கல்வி, கலைகளை கற்பவர்களுக்கு துணைபுரிபவராகவும் புதன் திகழ்கின்றார்.
வழிபாடு
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழிக்கேற்ப, முன்னேற விரும்புபவர்களுக்கு புதன் கிழமை சிறந்த நாளாகும்.
புதனை வழிபடும்போது வீட்டின் பூஜை அறையில் புதன் படத்திற்கு முன்பு தாமரை கோலம் போட்டு, ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி அதன்மேல் மாவிலை வைக்கவேண்டும்.
புதனுக்கு பச்சை வண்ண துணியை அணிவித்து, பூக்களால் அலங்கரித்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியமாக படைக்க வேண்டும். இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபமேற்றி, தூபம், கற்பூரம் காட்டி வழிபடுவது நல்லது.
காலை முதல் மாலை வரை இந்நாளில் விரதமிருப்பது சிறப்பாகும்.
விரதமிருக்க முடியாதவர்கள் பால், பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று புதனுக்கு பச்சை வஸ்திரம், பச்சை பயிறு போன்றவற்றை தானமாக வழங்கி வழிபாடு செய்யலாம்.
இவ்வாறு 17 வாரம் தொடர்ந்து வழிபட்டு வர புதனின் அனுக்கிரகம் எளிதில் கிடைக்கும், அத்துடன், புதனுக்குரிய காயத்ரி மந்திரத்தையும் 17 முறை கூறுவது நல்லது.
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக அஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்
பலன்கள்
ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரதாரர்கள், புதன்கிழமை தோறும் வழிபாடு செய்திட, வாழ்வில் வெற்றி மேல் வெற்றிகளை அடைந்திடலாம்.
புதனுக்கு அதிபதியாக விஷ்ணு பகவான் இருப்பதால், புதனை வழிபடுபவர்களுக்கு மகாலட்சுமியின் அருளால் செல்வசெழிப்பு தானாகவே கிடைக்கும்.
மேலும், அறிவு, விவேகம், பேச்சுத்திறன், வியாபாரம், லாபம் போன்றவைகளுக்கு காரகனாக புதன் இருக்கின்றார்.
வியாபார விருத்தி, பதவி உயர்வு, அரசு வேலை அமைந்திட புதனை வழிபடலாம்.
திருமணத்தடை, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் புதன்கிழமை தோறும் வழிபாடு செய்வது நன்மையாகும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் புதன் கிழமையன்று புதனை வழிபாடு செய்வது நல்லது என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).