download_indicator

மரியாதையும், முக்கியத்துவமும் எப்போது, எப்படி கிடைக்கும்?

பொது இடங்களிலும், மற்றவர்களிடமும் எப்படி பழக வேண்டும் என்ற அடிப்படையே தெரியாதவர்கள், தனக்கு மட்டும் எல்லோரும் மதிப்பும், மரியாதையும் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், அடுத்தவர்களிடமிருந்து மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டுமானால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அறிந்திடலாம்.

மதிப்பும், மரியாதையும்

வாழ்க்கையில் ஒருவரிடம் சொத்து, சுகம் இருந்தால் மட்டும் போதாது, அடுத்தவர்களை மதிக்கும் நல்ல குணமும் இருக்க வேண்டும்.

யாரையும் தோற்றத்தை வைத்தோ, வசதி படைத்தவர் என்றோ, கல்வியாளர் என்றோ எடை போடுவதை விட, மற்றவர்களை எப்படி நடத்துகிறார் என்றுதான் கவனிக்க வேண்டும்.

ஏனெனில், ஒருவருக்கொருவர் மதிப்பும் மரியாதையும் குறைந்தால், அது சண்டையில் தான் முடியும்.

ஒவ்வொரு மனிதரும், தன்னை பிறா் மதிக்க வேண்டும், மரியாதை தர வேண்டும் என்று விரும்புவது இயல்புதான் என்றாலும், தன்னை போன்று பிறரை மதிப்பதில்லை. அதற்கு அடிப்படையே பெற்றோர்கள்தான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இன்றைக்கு கணவன், மனைவி இருவரும், ஒருவரையொருவர் தங்களுக்குள்ளே மதிப்பும் மரியாதையும் இல்லாமல் நடந்து கொள்வதை காண்கின்ற பிள்ளைகள், பெற்றோரையும் மதிப்பதில்லை, அடுத்தவர்களையும் மதிப்பதில்லை.

எனவே, சிறு வயதில் இருந்தே மற்றவர்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

அந்த பழக்கம்தான் பின்னாளில் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும், தனக்கு கீழ் இருப்பவர்களையும், அடுத்தவர்களையும் மரியாதையுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

நாம் பிறருக்கு மதிப்பும், மரியாதையும் கொடுத்தால்தான் பிறரிடமிருந்து மதிப்பையும், மரியாதையையும் பெற முடியும்.

அதுமட்டுமல்ல அவா்கள் நம்மைவிட இருமடங்கு மதிப்பையும், மரியாதையையும் நமக்கு அளிப்பாா்கள்.

சகிப்புத்தன்மை

ஒரு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கையில் சில மாணவர்கள் தொடர்ந்து இடையூறு செய்து வந்தனர்.

அதைக்கண்ட ஆசிரியரும் அந்த மாணவர்களில் ஒருவனை அழைத்து

கரும்பலகையில் '1000' என்று எழுதி "இது எவ்வளவு?" என்று கேட்டார்.

அந்த மாணவன் அதை அவமானமாக கருதியபோதும், அமைதியாக ஆயிரம் என்று பதில் கூறினான்.

அதையடுத்து அந்த ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் கூறினான்.

அதன் பின்னர், இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.

"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து, மதிப்பில்லாத எண், மதிப்பு வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.

அதுவே, மதிப்பில்லாத எண்ணிற்கு முன்னால் செல்லும்போது, அதற்கு மதிப்பு எதுவும் இல்லை.

அது போன்றுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன், ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனுக்கு மதிப்பு கிடைக்கும்.

அதுவே மாறினால் என்ன மதிப்பு கிடைக்கும் என்பது உனக்கே இப்போது தெரிந்திருக்கும்.

எனவே, உனக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டுமானால், பணிவோடும், சகிப்புத்தன்மையோடும் இருக்க பழகிக்கொள் என்று கூறினார்.

அன்பு, அடக்கம்

ஆசிரியர் கூறியது போன்றே அடுத்தவர்களிடம் அன்பாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளும்போது, மதிப்பும், மரியாதையும் நம்மைத்தேடி தானாக வரும்.

மேலும், மற்றவர்களை மதித்து, பணிவாகவும் இருந்தால் நாம் எதிர்பார்க்காததை விட மரியாதை, முக்கியத்துவம் கிடைக்கும்.

ஒரு ஆசிரியரால்தான், மாணவருக்கு மரியாதையும், முக்கியத்துவமும் கிடைக்கும் என்பதை உங்கள் வீட்டு குழந்தைகள் எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on