மாசி மாதம் எதனால் சிறப்பு வாய்ந்தது?

இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் குறிப்பிட்ட சில மாதங்கள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிற நிலையில், சைவம், வைஷ்ணவம், சாக்தம் ஆகியவற்றில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் மாசி மாதமே வருவது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து அதன் சிறப்புகளை அறிந்திடலாம்.

காரடையான் நோன்பு

சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிற மாசி மாதம், தமிழ் மாதங்களில் 11-வது மாதமாக வருகிறது.

மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும், காரடையான் நோன்பு கடைபிடிக்கும் மாதம் என்றும் கூறுவர்.

சிவத்துடன், சக்தி இணைந்து முழுமை பெறுவது மாசி மாதமே என்பதன் காரணமாக, பெண்கள் கணவரின் நலனுக்காக தாலிக்கயிற்றை புதிதாக மாற்றிக் கொள்வது வழக்கம்.

இதை வைத்துதான் “மாசிக் கயிறு பாசி படியும்” என்ற பழமொழியே கூறப்பட்டது.

புனித நதி மற்றும் அனைத்து நீர் நிலைகளில் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, மாசி மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மாசி மாதத்தில் செய்கிற அன்னதானத்திற்கு மும்மடங்கு பலன்கள் கிடைக்கும்.

மகாசிவராத்திரி

மாசி மாதத்தில் வருகிற தேய்பிறை சதுர்த்தசி தினமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.

தேய்பிறை சதுர்த்தசியன்று மாலையில் தொடங்கி, அடுத்த நாள் காலை வரை சிவபெருமானுக்கு தொடர்ந்து நான்கு கால பூஜைகள் விடிய விடிய செய்யப்படும்.

இந்நாளில் விரதமிருந்து சிவபெருமானை வணங்குவது பெரும் சிறப்பாகும்.

மாசி மாத பூச நட்சத்திர தினத்தன்றுதான், முருகப்பெருமான் சுவாமிமலையில் சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

மாசி மகம்

பார்வதி தேவி தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் மாசி மாதத்தன்றுதான் தோன்றினாள் என்று புராணம் கூறுகிறது.

மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கங்கை கலந்திருப்பதாக ஐதீகம்.

கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சிம்மத்தில் சந்திரனும், குருபகவானும் இணைந்து இருந்தால், அது மகாமகம் என்று கூறப்படுகிறது.

எனவே, மாசி மகத்தன்று புனித நீராடல் செய்வதன் மூலமாக 7 ஜென்ம பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த மாதத்தை கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும் சொல்வது வழக்கமாகும்.

மாசி மகத்தன்று கடலில் தீர்த்தமாடல் நடைபெறுவதற்கு மூலகாரணமாக இருந்தவர், மழைக்கு அதிபதியான வருண தேவனேயாவார்.

ஒரு சமயம் வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, கடலுக்குள் மூழ்கியிருந்தபடியே சிவபெருமானை வணங்கி தவம் செய்தார்.

அவரது தவத்தைக்கண்டு மெச்சிய சிவபெருமான், அவருக்கு அருள்புரிந்த தினம் ஒரு மாசி மகமாகும்.

அதனால், இந்நாளில் புனித நீராடுபவர்களின் பாவங்களை போக்கிட, சிவபெருமான் கடலுக்கு தீர்த்தவாரி செய்திட எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார்.

அதன் காரணமாகவே, மாசி மகத்தன்று கடலில் தீர்த்தமாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாசி மகத்தன்று தீர்த்தமாடல் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான காரணம் என்னவென்று உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on