
பொதுவாக ஒருவரது ஏழாம் பாவத்தைக் கொண்டு அவரது வாழ்க்கை துணை பற்றிய ரகசியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அதாவது அந்த வாழ்க்கை துணை படித்தவரா, வசதியானவரா, நம் சொந்தத்தை சேர்ந்தவரா அல்லது அசலில் இருந்து வருவாரா? அனுசரித்து செல்லும் நல்ல குணத்தவரா இல்லை பிடிவாதக்காரரா போன்ற அனைத்தையுமே ஜாதகரின் 7-ம் இடத்தை ஆராயும் போது அறிந்து கொள்ளலாம்.
வேறு மதத்தில்
லக்கினத்தில் இருந்து அல்லது லக்கினத்தையும் சேர்த்து எண்ணி வரும் 7-ம் இடத்தில் இராகு அல்லது கேது இருந்து சுப கிரகங்களின் பார்வை எதையும் பெறவில்லை என்றால் அவர்களுக்கு வேறு ஜாதி இல்லை வேறு மதத்தில் இருந்து பெண் வரலாம். இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், இராகு முஸ்லீம் மதத்தையும், கேது கிறிஸ்தவ மதத்தையும் குறிப்பவர். இவர்கள் 5, 7-ம் அதிபதிகளோடு இணைந்திருப்பது, சுக்கிரனோடு சேர்வது போன்ற கிரக நிலைகள் மேற்சொன்ன மதத்தினரை வாழ்க்கைத் துணையாக அமைய வைக்கும். சரி, இந்த ஏழாம் இடத்தில் எந்தெந்த கிரகங்கள் இருந்தால் என்னென்ன பலன்கள் அமையப்பெறும் என்பதை பார்க்கலாம்.
சூரியன்
7-ம் இடத்தில் சூரியன் தனித்து இருந்து எந்த வித சுப கிரகங்களாலும் பார்க்கப்பட வில்லை என்றால், அவருக்கு வரும் வாழ்க்கை துணையால், அந்த ஜாதகர் பல சங்கடங்களை சந்திப்பார். சிலருக்கு முதல் விவாகம் ரத்தாகவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
சந்திரன்
வளர்பிறையில் பிறந்து 7-ம் இடத்தில் சந்திரன் தனித்து இருந்தால், அவருக்கு வரும் வாழ்க்கை துணை அழகாக இருப்பார். அதுவே, தேய்பிறையில் பிறந்து 7-ம் இடத்தில் சந்திரன் தனித்து இருந்தால் அவருக்கு வரும் வாழ்க்கை துணை கருமை நிறம் கொண்டு அல்லது மாநிறம் கொண்டு அதீத அழகு காணப்படாமல் மிகவும் சுமாராக இருப்பார்.
அங்காரகன் (செவ்வாய்)
செவ்வாய் 7-ம் இடத்தில் தனித்து இருந்து எந்தவித சுப கிரகங்களும் பார்க்கவில்லை என்றால், அவருக்கு வரும் வாழ்க்கை துணை அதிக கோபக்காரராகவும், பிடிவாதக்காரியாகவும் இருப்பார்.
புதன்
புதன் 7-ம் இடத்தில் தனித்து இருந்து, சுப கிரகங்கள் பார்த்தால் நல்ல அழகான மனைவி உண்டு எனலாம்.
குரு
குரு 7-ம் இடத்தில் தனித்து இருந்தால் அது நன்மையை செய்யாது. குரு ஜோதிடப்படி எப்போதும் தான் இருக்கும் இடத்தை கெடுப்பார். பார்க்கும் இடத்தை விருத்தி செய்வார். இதன்படி 7-ம் இடத்தில் குரு இருந்தால் அது பாதகத்தை தான் தரும். குறிப்பாக அவர்களின் மணவாழ்க்கை பாதிக்கப்பட இடம் உண்டு.
சுக்கிரன்
சுக்கிரன் 7-ம் இடத்தில் தனித்து இருந்து அது பெண்ணின் ஜாதகமாக இருக்கும் பட்சத்தில் லட்சுமி கடாக்ஷம் உண்டு. அதுவே ஆணின் ஜாதகமாக இருக்கும் பட்சத்தில் களத்திர தோஷம் தரும். இதனால் திருமணம் தாமதம் ஆகும். களத்திர காரகரான சுக்கிரன் ஆணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் இருந்தால் திருமண வாழ்க்கை அதிக போராட்டமாக இருக்கும்.
சனி
சனி 7-ம் இடத்தில் தனித்து இருந்து எந்த ஒரு சுப கிரகமும் பார்க்கவில்லை என்றால் வரும் வாழ்க்கை துணை அழகாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனினும் கற்பு தவறாதவர்களாக இருப்பார்கள். மற்றபடி சற்று சோம்பேறியாக இருக்க வாய்ப்பு உண்டு.
இராகு அல்லது கேது
இராகு அல்லது கேது 7-ம் இடத்தில் தனித்து இருந்து சுப கிரகங்கள் எதுவும் பார்க்கவில்லை என்றால் வேறு ஜாதியில் தான் திருமணம் நடந்தேறும். அதாவது அது காதல் திருமணமாகக் கூட இருக்கலாம். ஒருவேளை சுப கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால் திருமண வாழ்க்கை நன்மையை செய்யும். பாப கிரகங்களுடன் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் அவர்கள் திருமண வாழ்க்கை அதிக சோதனையை தரலாம்.